டெல்டாவில் நிலக்கரிச் சுரங்கம்: எந்த காலத்திலும் அனுமதி இல்லை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

காவிரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கம்

பட மூலாதாரம், TNDIPR

காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அனைத்து கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். தீர்மானத்திற்கு பதில் அளித்தபோது, தானும் ஒரு 'டெல்டாகாரன்' என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தவிதத்திலும் அனுமதிக்கப்போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய திமுக, காங்கிரஸ்,விசிக சட்டமன்ற உறுப்பினர்கள், நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும், மாநில அரசிடம் அனுமதி பெறாமல் சோதனையில் ஈடுபட்டது தவறு என்றும் அவர்கள் விமர்சித்தனர். அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தைக் கண்டித்தபோதும், முதல்வர் கடிதம் எழுதுவதற்கு பதிலாக, உடனே தொலைபேசியில் பேசியிருக்கவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் விவாதப்பொருளாக மாற்றியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் என்றபோதும், பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் பேசமுற்பட்டார். நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தின் ஏல அறிவிப்பை திரும்பபெறவேண்டும் என்று ஏற்கனவே மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

காவிரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கம்

பட மூலாதாரம், Youtube/Tamilnadu Assembly

படக்குறிப்பு, வானதி சீனிவாசன்

எடப்பாடி கூறியது என்ன?

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பின்னர், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிச்சாமி, டெல்டாகாரன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்தான் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார் என்றும் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் எனில், நாடாளுமன்றத்தில்தான் பேசவேண்டும், கடிதம் எழுதுவது சரியானது அல்ல என்று விமர்சித்தார்.

முன்னதாக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்போது பேசிய தமிழக வாழ்வுரிமைகட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் அனுமதி இல்லாமல், மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தை ஏற்கமுடியாது என்றார். மேலும், மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

திமுக உறுப்பினர்கள், டிஆர்பி ராஜா பேசும்போது, தனது சொந்த கிராமமான கலிக்கோட்டை கிராமமும் இந்த திட்டத்தில் அடங்கும் என்றார். மத்திய அரசு மாநில அரசிடம் எந்தவித அனுமதியும் கேட்கவில்லை என்றும் எந்த தகவலை தெரிவிக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

காவிரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கம்

பட மூலாதாரம், Youtube/Tamilnadu Asssembly

படக்குறிப்பு, சபாநாயகர் அப்பாவு

''தோழர்கள் தோள் கொடுப்பார்கள்''

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவாக பேசவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து அறிவுறுத்திவந்த பேரவைத்தலைவர் அப்பாவு, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேச முன்வந்தபோது, 'நாகை மாலிதான் எப்போதும் சுருக்கமாக பேசுபவர்' என்று குறிப்பிட்டார். அதேபோல, அவர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முடித்ததும், ''தோழர்கள்தான் சரியான நேரத்தில் தோள் கொடுப்பார்கள்'' என்றார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் பேசும்போது, விவசாயிகள் பதற்றம் அடைந்துள்ளனர் என்றும் வேளாண் மண்டலத்தில் எந்தவித திட்டமும் மாநில அரசிடம் கேட்காமல் கொண்டுவர முடியாது என்று சட்டம் உள்ளபோதும் ஏல அறிவிப்பு வந்ததை ஏற்கமுடியாது என்றார். அதேநேரம், அதிமுக ஆட்சியில்தான் வேளாண் மண்டலம், பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டு, அதிமுக கொண்டுவந்த வேளாண் பாதுகாப்பு மண்டல சட்டத்தை முறைப்படி பின்பற்றினாலே பல பிரச்சனைகளை தவிர்க்கமுடியும் என்றார். ஆனால் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் முடிவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அந்தச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்கள் குறித்து, சட்டம் கொண்டுவந்தபோதே தான் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.

காவிரி பகுதியில் நிலக்கரிச் சுரங்கம்

பட மூலாதாரம், Youtube/Tamilnadu Assembly

படக்குறிப்பு, அமைச்சர் தங்கம் தென்னரசு

நானும் டெல்டாகாரன்தான் - முதல்வர்

பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசுகையில், நெய்வேலி சுரங்கத்திற்காக 25,000 ஏக்கர் நிலத்தை கொடுத்த விவசயிகள் பலருக்கும் இன்றுவரை வேலை அளிக்கப்படவில்லை என்பதால், இந்த புதிய திட்டத்தை ஏற்கக்கூடாது என்றார். விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், காட்டுமன்னார்கோயில் தொகுதி உறுப்பினர் என்பதால், கூடுதல் நிமிடங்கள் கேட்டு தனது கருத்தை பேசினார். ''நெல் விளையும் பூமியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்று அறிந்த பல விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இந்த திட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

தீர்மானத்திற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்தவிதமும் ஒப்புதல் அளிக்காது என்றார். அவரைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை நேரில் சந்திக்க திமுக எம்பிகள் முயற்சிசெய்தனர் என்றும், அவர் வெளியூரில் இருப்பதால், தொலைபேசியில் பேசியபோது, தமிழ்நாடு அரசின் கடிதம் கிடைத்தது என்றும் மாநில அரசின் கருத்துக்கு மதிப்பு அளிப்போம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார் என்றார். ''மத்திய அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். அதேபோல, நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதால், நேரடியாக பிரதமர் மோதியை சந்தித்து எனது கடிதத்தை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவிடம் அறிவுறுத்தியுள்ளேன். நானும் 'டெல்டாகாரன்' என்பதால் இந்த திட்டத்தை கொண்டுவருவதை எதிர்க்கவேண்டும் என்பதில் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களை போலவே நான் உறுதியாக உள்ளேன். எந்த காலத்திலும் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது'' என்று தெரிவித்தார்.

சிக்கல் என்ன?

இந்திய நிலக்கரி அமைச்சகம் நாடு முழுவதும் 101 நிலக்கரி சுரங்கங்களை புதிதாகத் தோண்ட ஏலம் விடத் திட்டமிட்டுள்ளது. அவற்றில் மூன்று தமிழ்நாட்டில் வருகின்றன. சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய இடங்களுக்கு அருகே இந்த நிலக்கரி சுரங்கங்களை அமைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்கவே இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருவதால் இந்த இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று மாநில அரசும், ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்துகின்றன.

எதிர்க்கட்சியான அதிமுக-வும் கூட நிலக்கரி சுரங்கம் வரவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறை தொடர்பாகவே தங்கள் மாறுபாட்டினை தெரிவித்துள்ளனர். கடிதம் எழுதுவதற்கு பதிலாக தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்கவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கருத்து. தமிழ்நாடு பாஜகவும் இதை எதிர்த்துக் கடிதம் எழுதியிருப்பதாக கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: