புலிகளின் எண்ணிக்கை உண்மையிலேயே அதிகரித்துள்ளதா? புலிகளால் என்ன நன்மை?

முக்கிய சாராம்சம்
  • புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு
  • இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 3,167 ஆக உயர்வு
  • உலகில் வாழும் புலிகளில் 70% புலிகள் இந்தியாவில் வாழ்கின்றன
  • இந்தியாவில் 30% புலிகள், காப்பகங்களுக்கு வெளியே வேறு வாழ்விடங்களில் இருக்கின்றன
  • தொழில்நுட்ப உதவியுடனான கண்காணிப்பையும் மீறி, புலியை வேட்டையாடுவது தொடந்து நடந்து வருகிறது
  • புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட 7 மிருகங்களை பாதுகாக்க சர்வதேச அளவில் IBCA என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது
    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்
புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, 2022ஆம் ஆண்டுக்கான புலிகள் எண்ணிக்கையை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.

இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 6.7% அதிகரித்து தற்போது இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 2,967ஆக இருந்தது.

புலிகளின் எண்ணிக்கை உயர்ந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, 50 ஆண்டுகளை கடந்த புலிகள் பாதுகாப்புத் திட்டம் வெற்றி எனக் கூற முடியுமா?

புலிகளின் எண்ணிக்கை உயர்வு என்பது காடுகள் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுமா?

புலிகள் பாதுகாப்புத் திட்டம்

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

1960 காலக்கட்டங்களில், இந்தியாவில் குறைந்து வந்த புலிகளின் எண்ணிகையை அதிகரிக்கும் நோக்கில் 1968ஆம் புலிகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது.

அதன்பிறகு, 1972ஆம் ஆண்டு வன விலங்குகள், காடு, பல்லுயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'வன உயிர் பாதுகாப்புச் சட்டம்' அமலுக்கு வந்தது.

இதனுடைய நீட்சியாக, குறைந்து வந்த புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு 1973ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் 'புலிகள் பாதுகாப்பு திட்டம்' (Project Tiger) நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதற்கட்டமாக இந்தியா முழுவதும் காடுகளில் வாழ்ந்த புலிகளை பாதுக்காக்க, 9 புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டன.

கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயம், உத்தரகண்டில் உள்ள கார்பெட் தேசியப் பூங்கா என 18 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 9 புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது இந்தியா முழுவதும் 54 புலிகள் காப்பகம் உள்ளன. புலிகள் வாழும் காட்டின் பரப்பளவு 18 ஆயிரம் சதுர கிலோமீட்டரில் இருந்து 75,000 சதுர கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இது மொத்த இந்திய பரப்பளவில் 2.4% என இத்திடத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் வெளியிட்ட மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகள் கணக்கெடுக்கும் முறை

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட நாட்களில், இந்தியாவில் வாழும் புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க பயன்படுத்தப்பட்ட முறைகள், அறிவியல்பூர்வமாக இல்லாத நிலை காணப்பட்டது.

இதனால் ஒரே புலியை, பலமுறை கணக்கெடுக்கும் தவறுகள் நடந்தன.

"அந்த காலக்கட்டத்தில் புலிகளை கணக்கெடுக்க அதன் காலடி தடத்தை வைத்து ஆய்வு செய்யும் நடைமுறை இருந்தது. இது சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், துல்லியமான எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் இருந்தது," என பிபிசி தமிழிடம் பேசிய வன உயிர் ஆர்வலர் ஓசை காளிதாஸ் தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு புலிகள் வேட்டையாடப்படுவது குறித்து இந்தியா முழுவதும் உள்ள வன உயிர் ஆர்வலர்கள், இது குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர்.

"மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் இருப்பதாக கூறப்படும் புலிகள் எண்ணிக்கை தவறாக தெரிகிறது. அங்குள்ள காடுகளில் புலிகளே இல்லாமல் இருந்தது," என்று ஓசை காளிதாஸ் கூறினார்.

இதையடுத்து புலிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

இதன்பிறகு, 'கேமரா டிராப்' என்ற நவீன கேமரா மூலமாக இந்தியாவில் உள்ள புலிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

புலிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் அமைக்கப்படும் இந்த கேமராவில், பதிவாகும் புலியின் படத்தை கொண்டு புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

பதிவாகும் புலியின் தோலில் உள்ள வரிகளை அடையாளம் காண பிரத்யேகமாக ஒரு மென்பொருள் இதற்காக பயன்படுத்தப்பட்டது.

"மனிதர்களின் கைரேகை போலவே, புலிகளில் தோலில் காணப்படும் வரிகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. இரண்டு புலிகளுக்கு ஒரே மாதியான அமைப்பில் வரிகள் இருப்பதில்லை. இதனால் புலிகள் கணக்கெடுப்பின் போது இரண்டு முறை ஒரே புலியை கணக்கெடுப்பது தவிர்க்கப்பட்டது," என்று ஓசை காளிதாஸ் கூறினார்.

அதிகரித்த புலிகளின் எண்ணிக்கை

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

கேமரா உதவியுடன் கணக்கிடப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டு முதல் முறையாக வெளியிடப்பட்டது.

இந்தியாவில் புலிகள் இனம் அழிவுக்கு உள்ளாகும் என பல்வேறு வன உயிர் ஆர்வலர்கள் கூறி வந்த நிலையில், 2006ஆம் ஆண்டு இந்தியாவில் 1,411 புலிகள் இருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்து, காப்புக்காடுகள் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. இதன்படி கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டி இருந்த முதுமலை, ஆனைமலை ஆகிய பகுதிகள் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டன.

அதை தொடர்ந்து வந்த ஆண்டுகளிலிலும் புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வந்தது.

  • 2006 - 1,411
  • 2010 - 1,706
  • 2014 - 2,226
  • 2018 - 2,967
  • 2022 - 3,167

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் புலிகளை கணக்கெடுக்கும் நடைமுறையில் முழுமையான நம்பிக்கை இல்லை, என பிபிசியிடம் பேசிய விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா தெரிவித்தார்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் நவீனத்தை பின்பற்றி புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். கணக்கெடுப்பின் போது மனித தலையீடு இல்லாத வகையில் அவை நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

50 ஆண்டுகளை நிறைவு செய்த திட்டம்

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், narendramodi

1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்பு திட்டம், 50 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்தியப் புலிகளை பாதுகாத்து அதன் எண்ணிக்கையை 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளோம், என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய வனத்துறையின் கூடுதல் பொது இயக்குநர் எஸ்.பி. யாதவ் கூறினார்.

"உலகில் வாழும் புலிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள், இந்தியாவில் வாழ்கின்றன. 50 ஆண்டுகால முயற்சியின் பலனாக இந்த இலக்கை அடைந்து இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தால், வனத்தின் பரப்பளவும் அதிகரிக்கும். புலிகள் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் மட்டுமே வாழும். ஒரு புலி வாழும் நிலபரப்பில் மற்றொரு புலியால் வாழ முடியாது. அதனால் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பொறுத்து, காடுகளின் பரப்பளவும் அதிகரிக்கப்பட வேண்டும், என்று ஓசை காளிதாஸ் குறிப்பிட்டார்.

முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை புலிகள் காப்பகங்களின் செயல்பாடு கடந்த ஆண்டை விட சிறப்பாக அமைந்தது. இந்த மூன்று காப்பகங்களும் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளதாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம், 50வது ஆண்டை நிறைவு செய்யும் தருணத்தில், தமிழ்நாட்டின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது, என பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.

புலி - மனித மோதல்

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 3 ஆயிரத்திற்கு அதிகமாக புலிகள் இருந்தாலும், இன்னும் பல இடங்களில் மக்கள் தொகை நெருக்கம், வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக புலிகளுக்கு வாழ்விடங்கள் போதுமான அளவில் இருப்பதில்லை.

இந்தியாவில் உள்ள புலிகளில் 30% புலிகள், தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே வசிக்கின்றன, என்று இந்திய வனத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

"நகரத்தில் உள்ள பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டங்கள், காடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கணக்கில் சேர்க்கப்படுகின்றன. இதனால் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பது போல அரசின் தரவுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் புலிகளின் வாழ்விடங்களுக்கு ஏற்ப காடுகளின் பரப்பளவு போதுமானதாக இல்லை," என்று ஓசை காளிதாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் புலிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப அவை வாழும் காப்புக்காடுகளை, பாதுக்காக்கப்பட்ட காடுகளாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி புலி நகரும் நிலை உருவாகி, புலி-மனித மோதல் ஏற்படுகிறது.

பல இடங்களில் காப்புக்காடுகள், புலிகள் சரணாலயமாக மாற்றுவதால் அங்கு வசிக்கும் பழங்குடியினருக்கும், பிற மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதை அரசு உரிய முறையில் கையாள வேண்டும் என வன உயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

2021ஆம் ஆண்டு மசினகுடி பகுதியில் மனிதர்களை வேட்டையாடுவதாக கூறி T23 புலியைக் கொல்ல வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நீதிமன்ற தலையீட்டின் பேரின் இந்த புலி மயக்க மருந்து செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டு தற்போது உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.

"T23 புலி விஷயத்தில், முழுமையான தகவல் தெரியாமல் அது மனிதர்களை கடிக்கிறது என்று சொல்லப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே அந்த புலியை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அந்த புலி 'மேன் ஈட்டர்' புலியா என்று யாருக்கும் தெரியாது," என அருண் பிரசன்னா குறிப்பிட்டார்.

இது போன்ற மனித - விலங்கு மோதலை தடுக்க, புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியே வராத வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

புலிகளின் வாழ்விடம் குறித்து பிபிசியிடம் பேசிய சுப்ரியா சாஹு, "இந்தியாவில் சில பகுதிகளில் புலிகள், பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு வெளியே வாழ்கின்றன. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் இந்த பிரச்னை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை காடுகளை பாதுகாக்கும் பணியில் சரியான பாதையில் பயணிக்கிறோம்," என்றார்.

வேட்டையாடப்படும் புலிகள்

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் இன்னும் புலிகள் வேட்டையாடுவது சட்ட விரோதமாக நடந்து வருகிறது.

இந்தியா முழுக்க 2021ஆம் ஆண்டு 127 புலிகளும், 2022ஆம் ஆண்டு 121 புலிகளும் பல்வேறு காரணங்களுக்காக இறந்துள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலான புலிகள் வேட்டையாடுவதன் மூலம் இறப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது

2023ஆம் ஆண்டி ஏப்ரல் முதல் வாரம் வரை 52 புலிகள் இறந்துள்ளன.

புலியை வேட்டையாடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு உரிய உபகரணங்கள், தொழில்நுட்ப உதவி வழங்க வேண்டும் என்று ஓசை காளிதாஸ் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பேசிய சுப்ரியா சாஹூ, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் வன உயிர் குற்றத்தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, வன உயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

"காடுகளில் வாழும் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க, செயற்கைக்கோள் உதவியுடன் அவை அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்," என்று கூறுகிறார் அருண் பிரசன்னா.

"புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்க உரிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வனத்துறையில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்," என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்திய வனத்துறையின் கூடுதல் பொது இயக்குநர் யாதவ் தெரிவித்தார்.

பிரதமர் தொடங்கி வைத்த புதியத் திட்டம்

புலி, சிங்கம், நரேந்திர மோதி

பட மூலாதாரம், ADRIAN TORDIFFE

படக்குறிப்பு, இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளில் ஒன்று

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவில், IBCA என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினார். சர்வதேச அளவில் பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட 7 மிருகங்களை பாதுகாக்க இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் மூலம் உறுப்பு நாடுகளிடையே தொழில்நுட்பம், அனுபவம் உள்ளிட்டவை பகிர்ந்துக் கொள்ளப்பட்டு வன விலங்குகள் பாதுக்காக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்மையில் இந்தியாவில் அழிந்து விட்ட சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: