கோயம்புத்தூரில் பழங்காலத்தில் யானை வணிகம் நடந்ததா? விவாதத்தை கிளப்பும் குமிட்டிபதி குகை ஓவியங்கள்

குமிட்டிபதி குகை ஓவியங்கள்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பழங்கால மனிதர்கள் வரைந்து குகை ஓவியங்கள் இன்றளவும் காணப்படுகின்றன.

ஆனால் பல இடங்களில் இந்த ஓவியங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக வரலாற்று ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

அவ்வாறு கோவை மாவட்டத்தில் உள்ள பதிமலையில் அமைந்துள்ள குகை ஓவியங்கள் புது வரலாற்றை சொல்வதாகவும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் இரவி.

கோவை மாவட்டத்தில் கேரள எல்லை அருகே குமிட்டிபதி என்கிற கிராமம் அமைந்துள்ளது. அங்கு பதிமலை என்கிற இடத்தில் உள்ள மலை குகைகளில்தான் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

பதிமலை

பேராசிரியர் ரவி மற்றும் அவருடைய மாணவர்கள் சமீபத்தில் குமிட்டிபதி குகை ஓவியங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் யானை வணிகம் நடைபெற்றதற்கான சான்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் இரவி.

பிபிசி தமிழிடம் அவர் பின்வரும் விவரங்களைத் தெரிவித்தார்.

பழங்கால மனிதர்கள் மூன்று வகையான ஓவியங்கள் வரைந்துள்ளதை காண முடியும். கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான ஓவியங்கள் உள்ளன.

இதில் கருப்பு நிற ஓவியங்கள் பழமையானவை. வெள்ளை நிற ஓவியங்கள் அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவை. மூலிகைகளைப் பயன்படுத்தியே இந்த ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டு காலம் இந்த ஓவியங்கள் அழியாமல் தாக்குபிடிப்பதே ஆச்சரியமளிக்ககூடிய விஷயம்.

சங்க காலத்திற்கு முந்தைய வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை இந்த ஓவியங்கள். இந்த ஓவியங்களை கவனமாக ஆராய்ந்ததில் 3,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் எனத் தெரியவருகிறது. நாடோடி இனக்குழு மக்கள் இந்த ஓவியங்களை வரைந்துள்ளனர்.

குமிட்டிபதி குகை ஓவியங்கள்

அந்த ஓவியங்களில் மக்கள் இனக்குழுவாகவும் பொதுவுடைமைச் சமூகமாகவும் வாழ்ந்ததைக் குறிக்கிறது. மேலும் அங்கே ஒரு யானையின் ஓவியமும் அதன் மீது மனிதன் அமர்ந்து கொண்டு அங்குசத்தைக் கொண்டு யானையை அடக்குவதைப் போன்று அமைந்துள்ளன. யானை சினம் கொண்டு இருப்பதை அதன் வால் மேல் பக்கமாக இருப்பதில் இருந்து உணர முடிகிறது. யானை போன்ற வன விலங்குகளை மனிதன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காலகட்டத்தை இது குறிக்கிறது.

பதிமலை அருகில் `வேலந்தாவளம்` என்கிற இடம் உள்ளது. `வேலம் என்றால் யானை என்று பொருள். தாவளம் என்றால் வணிகச் சந்தை என்று பொருள். யானை வணிகம் நடைபெற்ற இடம் தான் `வேலந்தாவளம்` என்ற ஊர்ப் பெயராக அமைந்துள்ளது. அன்னூர் அருகே கிடைக்கப்பெற்ற சில கல்வெட்டுகளிலும் வணிகர்கள் யானைப் படை வைத்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. முதல்கட்டமாக நமக்கு இந்த தகவல்கள் எல்லாம் தெரியவருகிறது. இந்த சான்றுகள் பற்றி இன்னும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பதிமலை போன்றே பல குகை ஓவியங்கள் இன்னும் அறியப்படாமல் உள்ளன. அவற்றை முழுமையாக ஆராய வேண்டும். ஆனால் இவை போதிய பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளன. அவை முறையாக பராமரிக்கப்பட்டு வரலாற்றுச் சின்னங்கள் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்றார் இரவி.

ஆனால் இந்தக் கருத்தோடு எழுத்தாளர் சி.ஆர்.இளங்கோவன் மாறுபடுகிறார். பிபிசி தமிழிடம் பேசியவர் "இலக்கியத்தில் யானை வணிகம் தொடர்பாக சில சான்றுகள் இருக்கின்றன. ஆனால் இந்த பாறை ஓவியங்களுக்கும் யானை வணிகத்திற்கும் தொடர்புபடுத்த முடியவில்லை. இது போன்ற வரலாறுகளில் புராணங்களும் இணைந்து கூறப்படுவதால் முழுமையாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிவதில்லை.

குமிட்டிபதி குகை ஓவியங்கள்

ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் கார்பன் டேட்டிங், யுரேனியம் டேட்டிங் போன்ற வழிகளில் சரியான காலத்தை நிர்ணயித்துவிட முடியும். ஆனால் பாறை ஓவியங்களில் கால அளவை தெளிவாக வரையறுத்துவிட முடியாது.

யானையை அடையாள சின்னமாக வைத்திருந்தார்களே தவிர அதை ஒரு வணிகமாக செய்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் இல்லை. `அத்திக்கோசத்தார்` என ஒரு வணிகக் குழுவினர் இருந்தனர். அத்தி என்றால் யானை எனப் பொருள் கொண்டு அதற்கு விளக்கம் தரப்படுகிறது. யானையை பிடித்து வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் உள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளிலும் யானை வணிகம் நடைபெற்றதற்கான குறிப்புகள் இல்லை. குதிரை, மாடு போன்றவற்றை தான் வணிகத்திற்காக பயன்படுத்தியதற்கான குறிப்புகள் உள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகம் நடைபெற்றது, வணிகப் பாதை தொடர்பான குறிப்புகள் நம்மிடம் உள்ளன. ஆனால் அதில் எங்கும் யானையைப் பற்றிய குறிப்புகள் இல்லை.

மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக விஜயநகரம் அதற்குப் பிந்தைய நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் இது பரவலாக்கப்பட்டன. மக்கள் விவசாயம் செய்து கொள்ளலாம், படைகள் வைத்துக் கொள்ளலாம் என்கிற உரிமைகள் வழங்கப்பட்டன. அப்படித்தான் சில வணிகக் குழுக்கள் யானைகளை வைத்திருந்தனர். யானைகளை விவசாய பணிகளுக்காகவும் காடுகளில் மரங்களை வெட்டி எடுத்து வரவும் பயன்படுத்தி வந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை இருந்து வந்தது. பேரூர் கோவிலில் குமிட்டிபதியில் இருந்து பிடிக்கப்பட்ட யானை இருந்ததற்கான குறிப்பு உள்ளது. இவையெல்லாம் தனித்தனி தகவல்கள். இதை எல்லாம் தொடர்புபடுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யானை வணிகம் நடைபெற்றது எனக் கூறுவது சரியாக இருக்காது.

குமிட்டிபதி குகை ஓவியங்கள்

அதே போல் வேலந்தாவளம் என்கிற பெயரில் வேலம் என்றால் யானை, தாவளம் என்றால் வணிகச் சந்தை என்று அர்த்தம் கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிக சந்தைகள் இருந்துள்ளன. மேற்கு கரையிலிருந்து கிழக்கு கரைக்கு செல்வதற்கான பாதையில் கோவை அமைந்துள்ளது. உள்ளூர் வணிகர்கள் தொடங்கி வெளிநாட்டு வணிகர்கள் வரை இந்தப் பாதையை பயன்படுத்தியுள்ளனர்.

திருச்சி, தஞ்சையிலிருந்து வணிகர்கள் மேற்கு கரைக்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது பொருட்களைப் பாதுகாக்க வீரர்களைக் கொண்ட தனியார் பாதுகாப்பு படைகளை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அந்த காலகட்டத்தில் வணிகர்கள் பாதையில் கோயம்புத்தூர் ஒரு முக்கியமான சந்திப்பாக இருந்துள்ளது. அந்த பாதுகாப்பு வீரர்கள் தங்குவதற்கு மையங்கள் கட்டப்பட்டன. இந்த இடங்கள் கரையான அடித்தளம், அடிக்கீழ் தளம் என்று பதிவு செய்யப்பட்ட குறிப்புகள் உள்ளன. அந்த தளம் தான் தாவளம் என்று ஆகியிருக்கக்கூடும். தாவளம் என்கிற பெயரில் பல ஊர்கள் உள்ளன. சத்தியமங்கலம் அருகே மஞ்சுக்குழி தாவளம் என்கிற ஊர் உள்ளது. பொள்ளாச்சி அருகே தாவளம் என்கிற பெயரிலே ஓர் ஊர் உள்ளது. இந்த வணிகப் பாதையில் வரும் வணிகர்கள் மற்றும் படை வீரர்கள் தங்குவதற்கான இடமாகத் தான் அவை இருந்துள்ளது.

பேராசிரியர் ரவியுடன் கல்வெட்டியல் மாணவர்கள்

பொள்ளாச்சியில் தேக்கு மரங்களை ஏற்றிச் செல்வதற்காக யானைகளை வளர்த்துள்ளனர். வேலம் என்றால் யானை என்கிற பொருள் உண்டு. யானைகள் அதிகம் இருக்கக்கூடிய என்பதால் வேலந்தாவளம் என்கிற பெயர் வந்திருக்கலாம். ஆனால் யானைகளுக்கான வணிக சந்தை இருந்துள்ளது என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிவதில்லை, என்றார்.

திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குனர் சு.ரவிக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''அன்னூரில் அடிக்கீழ்தளம் பற்றிய குறிப்புகள் திருமுருகன்பூண்டி கோவில் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. அடிக்கீழ்தளம் என்பது வணிகர்கள் பாதுகாப்புக்காக வைத்திருந்த வீரர்கள் தங்கியிருந்த இடம். தாவளம் என்பது இன்றைய சிப்காட் போன்று வணிகர்கள் தங்கியிருந்து வணிகம் செய்த இடம்.

தென் இந்தியாவில் மொத்தம் 64 தாவளங்கள் இருந்தற்கான சான்று உள்ளன. அதில் ஒன்று தான் வேலந்தாவளம், பழைய பெயர் மாறாமல் தற்போதும் இருந்து வருகிறது. யானைகளை பிடிப்பது 1972-ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் வருகின்ற வரை நடைமுறையில் இருந்துள்ளது. பழங்கால மனிதர்கள் யானைகளை தங்களின் பயன்பாட்டிற்காக குழி வைத்து பிடித்துள்ளனர். அடர் வனப் பகுதிகளுக்குள் தற்போதும் அந்த குழிகள் இருப்பதாகக் கூறப்படுகிறதுஅவற்றை நன்கு பழக்கப்படுத்தி வேளாண்மை, மரங்களை எடுத்துச் செல்வது போன்ற பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்,'' என்றார்.

காணொளிக் குறிப்பு, நாய் வளர்ப்பவரா நீங்கள்? - சென்னையில் லைசென்ஸ் கட்டாயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: