தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன், பெள்ளியை சந்தித்த பிரதமர் மோதி: ஆதிவாசி மக்களுக்காக பெள்ளி வைத்த கோரிக்கை

பட மூலாதாரம், @narendramodi/Twitter
முதுமலை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரரஸ் ஆவணப்படத்தின் கருப்பொருளாக இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்து இன்று உரையாடினார். அப்போது ஆதிவாசி மக்களின் தேவைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பெள்ளி.
டெல்லிக்கு அழைத்தார் பிரதமர்
பிரதமரை சந்தித்தது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட பொம்மன், "பிரதமர் எங்களைப் பார்க்க வருகிறார் என தெரிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. எங்களை பார்த்ததும். ஆவணப்படம் பற்றி வெகுவாக பாராட்டினார். பிரதமர்கள் யாருமே இதற்கு முன்பு இங்கு வந்ததில்லை. முதுமலைக்கே இது பெருமையாக உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும், பிரதமர் இந்தியில் தான் பேசினார். நாங்கள் தமிழில் தான் பேசினோம். அதிகாரிகள் எங்களுக்கு மொழிபெயர்த்து கூறினார்கள். யானையை எப்படி பராமரிப்போம், என்ன உணவு வழங்குவோம் உட்பட அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார். பிரதமர் நாங்கள் கூறிய அனைத்தையும் முழுமையாக கேட்டறிந்தார். எங்களை அழைத்துக் கொண்டு ரகு மற்றும் பொம்மியைச் சென்று பார்த்து கரும்பு வழங்கினார்.
அதன் பின்னர் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று எங்களின் குறைகள், தேவைகளை முழுமையாக கேட்டறிந்தார். எந்த தேவையாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரை அணுகுங்கள். உங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள் என உத்திரவாதம் அளித்தார்.
எங்களை டெல்லிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார். இந்த ஒரு ஆவணப்படம் மூலம் ஆதிவாசி மக்களுக்கு தேவையானது கிடைத்தால் எனக்கு சந்தோஷம் தான்," என்றார்.

பிரதமரிடம் பெள்ளி வைத்த கோரிக்கை
பிரதமரை சந்தித்து குறித்து பெள்ளி பேசுகையில், "பிரதமர் முதுமலைக்கு வந்து சென்றது எங்கள் ஊருக்கே பெருமை தான். உன்னைப் போல யானை வளர்ப்பதற்கு யாரும் இல்லை எனக் கூறினார். நான் இப்போது ரகு மற்றும் பொம்மியை வளர்க்கவில்லையா எனக் கேட்டார். நான் இல்லையென்றதும் உங்கள் குழந்தை மாதிரி தானே நீங்களே வளர்க்கலாமே எனக் கேட்டார். நாங்கள் கொடுத்துவிட்டோம் எனக் கூறினேன். என்ன தேவை உள்ளது என தனியாக கேட்டறிந்தார்.
நான் எனக்கென்று எதுவும் கேட்கவில்லை. ஆதிவாசி மக்களின் வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. சரியான சாலை வசதி இருக்காது. அதையெல்லாம் சரி செய்து தரக் கோரினேன். எங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு கணினி வசதி வேண்டும் எனக் கேட்டோம். எல்லா வசதிகளும் செய்து தரச் சொல்வதாகக் கூறினார்.
இந்த ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது வந்த பிறகு ஆதிவாசிகள் பற்றி அதிகம் வெளியே தெரிகிறது. ஆனால் பெரிய அளவில் மாற்றங்கள் இன்னும் நடக்கவில்லை. கூலி வேலை செய்யும் மக்கள் சம்பாதித்து சால்வை வாங்கி வந்து பாராட்டிச் செல்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது பெருமையாக தான் உள்ளது. இதனுடன் ஆதிவாசி மக்களின் தேவைகளும், கோரிக்கைகளும் நிறைவேறினால் எங்களுக்கு சந்தோஷம்," என்றார்.

பட மூலாதாரம், @narendramodi/Twitter
பிரதமரின் இரண்டு நாள் தமிழ்நாடு பயணம்
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோதி, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை தொடங்கிவைத்து, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைத்து, பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கிவைத்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் மைசூரு கிளம்பினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கர்நாடக மாநிலம் பந்திப்புரா புலிகள் காப்பகத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோதி, அங்கு ஜீப்பில் சென்று வனவிலங்குகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி, அவற்றுக்கு உணவும் வழங்கினார். பின்னர் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை சந்தித்துப் பேசினார் நரேந்திர மோதி. இதைத்தொடர்ந்து தெப்பக்காட்டில் இருந்து மீண்டும் மைசூருக்கு புறப்பட்டு சென்ற மோதி, மசினக்குடியில் காரில் இருந்து இறங்கி பொதுமக்களை பார்த்து கையசைத்து சென்றார்.

பட மூலாதாரம், @narendramodi/Twitter
புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்ற ஆஸ்கர் விருது
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியின் கதையை அடிப்படையாக கொண்ட தி எலிஃப்பென் ட் விஸ்பரரஸ் என்ற குறும் ஆவணப்படம் கடந்த மாதம் ஆஸ்கர் விருது வென்றது.
படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ், தயாரிப்பாளர் குணீத் மோங்கா ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்த குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை பெற்றதைத் தொடர்ந்து பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரையும் கௌரவப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 15ஆம் தேதி அவர்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவர்களிடம் வழங்கினார் முதல்வர்.
இது தொடர்பாக அப்போது பிபிசி தமிழிடம் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட பொம்மன் - பெள்ளி தம்பதி, ''நாங்கள் யானை குட்டியை வளர்த்த கதையை உலகம் முழுவதும் பலரும் பார்க்கிறார்கள். எங்களைப் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது. மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. சென்னை நகருக்கு முதல் முறையாக வந்திருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திப்போம் என்பதை நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை,'' என்று கூறியிருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












