செல்போன்களை உளவு பார்த்த குற்றச்சாட்டு: மத்திய அரசு ஆப்பிள் நிறுவனத்தை மிரட்டுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீர்த்தி துபே
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, காலை 9.30 மணிக்கு, அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் சிலர், செல்ஃபோன் தகவல்களை திருட முயன்றனர் என்று ஆப்பிள் நிறுவனத்திலிருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாக, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெஹுவா மொய்த்ரா, X தளத்தில், பதிவிட்டிருந்தார்.
மெஹுவா மொய்த்ரா மட்டுமல்ல, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் உள்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில பத்திரிகையாளர்களும் கூட தங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து உளவு எச்சரிக்கை செய்தி கிடைத்ததாக கூறினர்.
அப்போது அந்த குற்றச்சாட்டுகளை அரசு மறுத்துவிட்டது. “ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை செய்தி குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து டிசம்பர் 28ம் தேதி அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் செக்யூரிட்டி லேப் இணைந்து இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையின்படி, ஆப்பிள் நிறுவனம் உளவு எச்சரிக்கை செய்தியை அனுப்பிய மறுநாள், மோதி அரசின் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் மீது தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் இந்த குறுஞ்செய்தி தவறாக அனுப்பப்பட்டது என்று கூற “அழுத்தம்” தரப்பட்டது என்று அறிக்கை கூறுகிறது.
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையை மறுத்துள்ளார். “அரைவேக்காட்டு தகவல்கள் அடிப்படையில் முற்றிலும் திரிக்கப்பட்ட” அறிக்கை என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், X/@MahuaMoitra
உளவு சர்ச்சையில் திரைமறைவில் நடந்தது என்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்த போது, பல பாஜக தலைவர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் ஆபத்து கால கட்டுப்பாட்டு செய்தி தவறாக அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.
ஆனால், வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் படி, பொது வெளியில் இந்த குறுஞ்செய்தியை மறுத்தது மட்டுமல்லாமல், மோதி அரசின் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகளை அழைத்து, “இந்த எச்சரிக்கை செய்தியின் அரசியல் தாக்கத்தை குறைக்க ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல், ஆப்பிள் நிறுவனத்துக்கு வெளியில் இருக்கும் நிபுணர் ஒருவரிடம், ஆப்பிள் நிறுவனம் இந்த எச்சரிக்கை செய்தி குறித்து எந்த மாதிரியான விளக்கங்களை கொடுக்கலாம் என்றும் கேட்டறிந்து அறிக்கை தயாரித்தது.
இந்த விவரம் அறிந்த மூன்று பேர் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாமல், இந்த தகவலை உறுதி செய்திருப்பதாக அமெரிக்க நாளிதழ் தெரிவித்துள்ளது.
அதில் ஒருவர், “அரசு அதிகாரிகள் மிகவும் கோபமாக இருந்தனர்” என்று கூறினார்.
அமெரிக்க நாளிதழ் படி, ஆப்பிளின் அதிகாரிகள், நிறுவனத்தின் எச்சரிக்கை செய்தி சரியே என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் விதத்திலும், ஆப்பிள் அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கும் வகையிலும் செயல்பட்ட இந்திய அரசின் நடவடிக்கைகள் குபர்டினோவில் இருக்கும் ஆப்பிள் தலைமையக அதிகாரிகள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தான் செய்தது.
இந்த விவகாரத்திலிருந்து ஒரு விசயம் நிச்சயம். “உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய அரசிடமிருந்து அழுத்தத்தை சந்திக்க நேரிட்டது. ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியா, வரும் ஆண்டுகளில் ஒரு முக்கிய சந்தையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது”. என்று அறிக்கை கூறியது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் அறிக்கையை மறுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். “வாஷிங்டன் போஸ்டின் தவறான இதழியலுக்கு பதில் கூறுவது அயர்ச்சி தரும் செயலாகும். ஆனால் யாராவது ஒருவர் பதில் கூறித்தானே ஆக வேண்டும். இந்த கதை பாதி உண்மை, முழுவதும் புனைவு” என்று பதிவிட்டிருந்தார். ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை செய்தி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான அறிக்கை அக்டோபர் 31 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் கொடுத்த தகவலை குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், “தகவல் தொழில்நுட்ப அமைச்சரகத்தின் நிலைப்பாடு இந்த விவகாரத்தில் தெளிவாக உள்ளது. எப்போதும் ஒரே மாதிரியாகவும் இருக்கிறது. இந்த எச்சரிக்கை செய்தி எதனால் கொடுக்கப்பட்டது என்று விளக்கம் கொடுக்க வேண்டியது ஆப்பிள் நிறுவனம். இந்திய அரசின் விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தை இணைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவையே உண்மை தகவல்கள் மற்றவை எல்லாம் கற்பனை கதையே”என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனம் 20 பேருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது. அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள். அமெரிக்க நாளிதழில் வெளியான அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தி அனுப்பிய இரண்டு பத்திரிகையாளர்கள் ஆனந்த் மங்கனாலே மற்றும் சித்தார்த் வரதராஜன். ஆனந்த் மங்கனாலே Organized Crime and Corruption Reporting Project-ன் (OCCRP) தெற்காசிய செய்தி ஆசிரியர். இது புலனாய்வு இதழியல் செய்து வரும் லாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அமைப்பு பிரிட்டிஷ் நாளிதழ்கள் ‘த கார்டியன்’ ‘ ஃபைனான்சியல் டைம்ஸ்’ ஆகியவற்றோடு இணைந்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

பட மூலாதாரம், X/@Rajeev_GoI
கருப்பு பணத்தின் புகலிடமாக இருக்கும் மொரிஷியஸ் நாட்டில் இருந்து கிடைக்கும் இரண்டு நிதி ஆதாரங்கள் - எமர்ஜிங் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்டு மற்றும் இ எம் ரிசர்சண்ட் ஃபண்ட், அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களில் 2013 ஆண்டு முதல் 2018 ஆண்டுக்குள் முதலீடு செய்தும், அவர்களின் பங்குகளையும் வாங்கியும் விற்றும் உள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி OCCRP அமைப்பு இந்த விவகாரம் குறித்து அதானி குழுமத்திடம் விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியது. அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு 10 நாட்கள் கழித்து இந்த அறிக்கை வெளியானது. ஆனால் ஆனந்த் மங்கனாலேவின் செல்ஃபோனை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தடயவியல் பரிசோதனை செய்தபோது, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் அவர் அந்த மின்னஞ்சல் அனுப்பி 24 மணி நேரத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டது தெரிய வந்தது. பெகாசஸ் என்பது NSO க்ரூப் என்ற இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருள் ஆகும். மேலும் அந்த மென்பொருளை அந்த நிறுவனம் அரசுகளுக்கு மட்டுமே விற்கிறது.
மங்கனாலேவின் செல்ஃபோனில் ஊடுருவ பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐடி தான், இந்திய செய்தி இணையதளமான ‘த வயர்’ இணை நிறுவனர் சித்தார்த் வரதராஜனின் செல்ஃபோனையும் ஊடுருவ பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆப்பிள் ஐடி- [email protected] என்பதாகும்.
“உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை”- வரதராஜன்
ஆப்பிள் நிறுவனம் அழுத்தத்தில் இருப்பதாகக் கூறும் அறிக்கையை சித்தார்த் வரதராஜன் எவ்வாறு பார்க்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அவரிடம் பிபிசி பேசியது.
“ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் உடன் இணைந்து 2021 இரண்டு ஆண்டு பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து நாங்கள் செய்து வெளியிட்டோம். அந்த மென்பொருள் பல செல்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் அதில் நானும் ஒருவன் என்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விசாரணை குழுவுக்கு எந்த ஒத்துழைப்பையும் அரசு வழங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியது. இது ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த விவகாரம் நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை ஏன் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் என் கேள்வி. மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது பலரது செல்ஃபோன்கள் இலக்காகி உள்ளன.” என்றார்
அக்டோபர் 16-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை செய்தி தனக்கு கிடைத்ததாக சித்தார்த் வரதராஜன் கூறுகிறார். “அப்போது நான் எந்தவித சர்ச்சைக்குறிய செய்தியையும் கையாளவில்லை ஆனால் த வயர் வெளியிடும் செய்திகளில் 90% அரசுக்கு பிடிக்காது. பெகாசஸ் மென்பொருள் பட்டியலில் ஏற்கனவே நான் முதல் ஆளாக இருந்தேன். இந்த முறையும் இருக்கிறேன். நாம் வேலை செய்யும் போது அரசு நம் மீது ஒரு கண் வைத்திருக்கிறது என்பது தெரியும். இது போன்ற மென் பொருள்களால், நாம் எந்த செய்தி குறித்து வேலை செய்துவருகிறோம் நமக்கு தகவல் அளிக்க கூடியவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அந்த அறிக்கையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியா ஒரு பெரிய சந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது ட்விட்டரில் சிலர் வெளியிட்ட பதிவுகளை நீக்கக்கோரி அரசு அழுத்தம் அளித்ததாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக வரும் தகவல் எப்படி பார்க்கப்படுகிறது?
இந்த கேள்விக்கு பதிலளித்த சித்தார்த் வரதராஜன், “ ஆப்பிள் செல்ஃபோன்கள் அதன் பாதுகாப்புக்கு பெயர் போனவை. இதுதான் உலகிலேயே பெரிய செல் ஃபோன் நிறுவனமாகும். ஆனால் ஆப்பிள் நிறுவனமே இந்திய அரசின் அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாக அறிக்கை கூறுகிறது. தங்கள் வலுவான நெறிமுறைகளுக்கு நம்பிக்கை வாய்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமா அல்லது அரசுகளின் அழுத்தத்துக்கு உள்ளாகும் நிர்வாணமாக இருக்க வேண்டுமா என்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மோதி அரசின் நெருக்கடிக்கு பணிந்ததா ஆப்பிள் நிறுவனம்?
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை செய்தி குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் X தளத்தில் வெளியிட்டு விவாதித்துக் கொண்டிருந்த போது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஆப்பிள் இந்தியாவின் நிறுவன இயக்குனர் விராத் பாட்டியாவை அழைத்துள்ளார். இந்த விவரம் தெரிந்த இரண்டு பேர் வாஷிங்டன் நாளிதழுக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.
அதில் ஒருவர், இந்திய அதிகாரி ஆப்பிள் நிறுவனத்திடம் அந்த எச்சரிக்கை செய்தியை தவறு என்று கூறி திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார் என்று வாஷிங்டன் நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்துக்கும் அரசு அதிகாரிக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது. ஆப்பிள் இணையதளத்தில் ஏற்கனவே இருப்பது போல சில எச்சரிக்கைகள் குறித்து ஒரு அறிக்கை வேண்டுமானால் வெளியிடுவது மட்டுமே சாத்தியம் என்று ஆப்பிள் இந்தியாவின் அதிகாரி தெரிவித்ததாக அறிக்கை கூறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்வீட் செய்து சில மணி நேரங்களுக்கு பிறகு ஆப்பிள் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “இது போன்ற தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகள் ஆபத்து உளவுத் துறையின் தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படும். இவை பல நேரம் முழுமை இல்லாமலும் தவறாகவும் இருக்கலாம்” என்று தெரிவித்து இருந்தது.
“இதுபோன்ற எச்சரிக்கை செய்திகள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வெளியிடப்படும் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் ஏனென்றால் அரசு ஆதரவுடன் செயல்படும் ஹாக்கர்கள் எதிர்காலத்தில் அதனை கண்டறிந்து செயல்படக்கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிக்கையின் மூலம், தனது எச்சரிக்கை செய்தியை ஆப்பிள் நிறுவனமே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது போன்று தெரிந்தது.

பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிடம் பேசிய ஒருவர், அரசிடமிருந்து மிகுந்த அழுத்தத்துக்கு தான் ஆளாகியிருப்பதாக பாட்டியா நிறுவனத்தில் சிலரிடம் கூறியதாக தெரிவித்தார். ஆனால் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனம் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கையில் தகவல் தொழில்நுட்பம் குறித்த செய்திகளை வெளியிடும் இரண்டு பத்திரிகையாளர்கள் பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசியதாகவும் அவர்கள் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் கார்பரேட் தொடர்புகள் துறையில் இருந்து தங்களிடம் ஆப்பிளின் எச்சரிக்கைகள் பொய்யாக இருக்கலாம் என்று செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இன்று நாங்கள், நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இலக்காகலாம்” - பிரியங்கா சதுர்வேதி
அக்டோபர் 31 ஆம் தேதி எச்சரிக்கை செய்தி கிடைக்கப் பெற்றவர்களில் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதியும் ஒருவர். அவர் பிபிசியிடம் பேசியபோது, “விலை உயர்ந்த செல்போன்களை வாங்குவதற்கான காரணம் அதில் பாதுகாப்பு அம்சங்கள் உறுதியாக இருக்கும் என்பதால்தான். ஆனால் உலகின் மிகப்பெரிய நிறுவனமே அரசின் அழுத்தத்துக்கு ஆளாகி அரசுடன் கைகோர்த்து தங்கள் வர்த்தகத்துக்காக தங்கள் நெறிமுறைகளை சமரசம் செய்து கொண்டால், அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள்” என்றார்.
இது அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட பிரியங்கா, “உச்ச நீதிமன்றத்துக்கு உரிய மரியாதையை கொண்டிருக்கும் நான் தனி உரிமை ஒரு அடிப்படை உரிமை என்று கூற விரும்புகிறேன். இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது உளவு பார்க்கப்படும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் புறம் தள்ளினால், நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செல்ஃபோனைக் கூட இலக்காக்கும் அளவு இந்த அரசின் தைரியம் அதிகரிக்கும். யாருமே பாதுகாப்பாக இருக்க முடியாது. “ என்றார்.
“முகநூல் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோது அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் சக்கர்பர்க் மீது எப்படி கடினமான கேள்விகள் எழுப்பப்பட்டன என்று நாம் பார்த்தோம். ஆனால் இங்கே எங்கள் செல்ஃபோன்கள் வேவு பார்க்கப் படுகின்றன என்று கூறிய பிறகும் எதுவும் நடப்பதில்லை.
பெகாசஸ் என்ற மென்பொருள் செல்ஃபோனில் பொருத்தப்பட்டால் செல்ஃபோனில் உள்ள மைக், கேமரா, புகைப்படங்கள் ஆகியவற்றை தொலைவிலிருந்தே ஒருவரால் பார்க்க முடியும். ஒரு பெண்ணாக இருந்து எனக்கு இது மிகவும் கவலையாக இருக்கிறது. நான் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கும்போது, தவறாக திரித்து பேசக்கூடிய விஷயங்களை விளையாட்டாக கூட நான் பேசுவதில்லை.
எப்போதும் யாராவது என்னை கவனித்துக்கொண்டிருக்கிறார்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. என்னை கண்காணிக்க வேண்டிய நான்கு பேருக்கு எனது தனிப்பட்ட புகைப்படங்களையும் பார்க்க முடியும். இவர்கள் குஜராத்தில் என்ன செய்தார்கள் என்பது நமக்கு தெரியும். இது தனி உரிமை மீறல் மட்டுமல்ல நடைபெறவிருக்கும் தேர்தல்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மக்களின் கருவிகள் மற்றும் அவரது தரவுகள் உங்கள் கையில் இருப்பதால் அவர்களின் விருப்பங்களின் மீது உங்களால் தாக்கம் செலுத்த முடியும்.” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அரசு இப்படி தன்னை எதிர்த்து முறையான விசாரணை நடத்த முடியும்?
எந்த அரசும் தன் மீதான கூரிய விமர்சனத்தை விரும்பாது என்கிறார் சித்தார்த் வரதராஜன். இன்னும் சில அரசுகளால் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியும் சிலவற்றால் துளியும் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தான் வித்தியாசம் என்கிறார் அவர். “ஆனால் எங்களை போன்றவர்கள் இந்த பணிக்கு வரும்போது இதழியலில் பயத்துக்கு இடமே இல்லை இன்று தெரிந்து தான் வந்தோம். ஜனநாயகத்தில் அச்சத்துக்கு இடமில்லை என்றும் கூறலாம். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் அச்சத்தை முழுவதுமாக விட்டொழிய வேண்டும்” என்று வரதராஜன் கூறுகிறார்.
இந்தசூழலில் உளவு பார்ப்பது நிறுத்தப்படாது என்று கருதுவதாக பிரியங்கா சதுர்வேதி கூறுகிறார். “ நாட்டுக்காக குரல் எழுப்புவதற்கு கொடுக்க வேண்டிய விலை இதுதான் என்றால் நான் அதை கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றும் கூறுகிறார்.
வாஷிங்டன் போஸ்ட் அறிக்கைக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை, “இந்த விவகாரம் குறித்தான தொழில்நுட்ப விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரையில் விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனம் முழுவதுமாக ஒத்துழைத்துள்ளது” என்று தெரிவித்தது.
நிக்கில் பாவா, Medianama என்ற செய்தித்தளத்தின் நிறுவனர், இந்திய அரசு தன் மீதான குற்றச்சாட்டுகளை நடுநிலையாக எப்படி தானே விசாரணை செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசு இந்த விஷயத்தைத் தணிக்கவே இதுபோன்ற கருத்துக்களைச் சொல்கிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2021 ஜூலை மாதத்தில், அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் சில செய்தி நிறுவனங்கள் சில, ஃபார்பிடன் ஸ்டோரீஸ் உடன் இணைந்து ஒரு புலனாய்வு அறிக்கையை வெளியிட்டன. அதில் உலகெங்கிலும் உள்ள பல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக சேவகர்களின் தொலைபேசிகள் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பெகாசஸ் உளவு மென்பொருளை உருவாக்கிய NSO நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, இந்த மென்பொருளை நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பதாகவும், அதன் நோக்கம் "பயங்கரவாதம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடுவது" என்றும் கூறியது.
அந்த சமயத்தில், இந்தியாவில் த வயர் இந்த அறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டில் 40 பத்திரிகையாளர்கள் உட்பட பல தொழிலதிபர்கள், மூன்று மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் சாசன பதவி வகிப்பவர் ஒருவர், மோதி அரசின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு துறையின் தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் மீது பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த சமயத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்றத்தில் அறிக்கை குறித்து கூறுகையில், மிகவும் பரபரப்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். பருவகால கூட்டத்தொடருக்கு ஒரு நாள் முன்னதாக செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பது தற்செயலாக இருக்க முடியாது. இது இந்திய ஜனநாயகத்தை அவதூறு செய்யும் சதி, என்றார். மேலும், இந்த உளவு பார்க்கும் விவகாரத்துடன் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், இந்திய அரசு NSO Group-இலிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கவில்லை என்று ஒருபோதும் தெளிவாகக் கூறவில்லை.

பட மூலாதாரம், AFP
பெகாசஸ் எவ்வாறு செயல்படுகிறது?
பெகாசஸ் என்பது இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான NSO Group Technologies உருவாக்கிய உளவு மென்பொருள்.
இது ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டால், ஹேக்கர் அந்த ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோன், கேமரா, ஆடியோ மற்றும் எழுத்து குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் மற்றும் இருக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பெற அனுமதிக்கும்.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் அறிக்கையின்படி, பெகாசஸ் குறியாற்றப்பட்ட ஆடியோவைக் கேட்கவும் குறியாற்றப்பட்ட செய்திகளைப் படிக்கவும் அனுமதிக்கிறது.
குறியாற்றப்பட்ட செய்திகள் என்பவை அனுப்பவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அறிந்திருக்கும் செய்திகள் ஆகும். இதுபோன்ற செய்திகளை, செய்தி அனுப்பப்படும் தளத்தின் நிறுவனம் கூட பார்க்கவோ கேட்கவோ முடியாது.
பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் ஒரு நபரின் தொலைபேசியுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
பெகாசஸ் பற்றிய தகவல்கள் முதலில் 2016 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூருக்குக் கிடைத்தன.
அவர் சந்தேகத்திற்குரிய பல குறுஞ்செய்திகளைப் பெற்றிருந்தார். அவற்றில் இருந்த இணைப்புகள் தவறான நோக்கங்களுக்காக அனுப்பப்பட்டவை என்று அவர் நம்பினார்.
அவர் தனது தொலைபேசியை டொரண்டோ பல்கலைக்கழகத்தின் "சிட்டிசன் லாப்" நிபுணர்களிடம் காண்பித்தார். மேலும் மற்றொரு சைபர் பாதுகாப்பு நிறுவனமான "லுக்அவுட்" இடமிருந்து உதவி பெற்றார்.
மன்சூரின் சந்தேகம் சரியாக இருந்தது. அவர்கள் அந்த இணைப்பில் கிளிக் செய்திருந்தால், அவர்களின் ஐஃபோன் மால்வேர் எனப்படும் தீய மென்பொருளால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த மால்வேருக்கு பெகாசஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. "இதுவரை எதிர்கொண்டதிலேயே மிகவும் சிக்கலான தாக்குதல்" என்று லுக்அவுட் ஆராய்ச்சியாளர்கள் அதை விவரித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படும் ஆப்பிள் ஃபோன்களின் பாதுகாப்பில் ஊடுருவ இந்த திட்டம் வெற்றிபெற்றது. இருப்பினும், இதைச் சமாளிக்க ஆப்பிள் ஒரு அப்டேட் கொண்டுவந்தது.
2017 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, பெகாசஸ் உளவு கருவியைப் பயன்படுத்தி மெக்சிகோ அரசு மொபைல் உளவு சாதனத்தை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்த அறிக்கையின்படி, மெக்சிகோவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
புகழ்பெற்ற மெக்சிகன் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் மொபைல் ஃபோன்களை உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி தங்கள் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த அறிக்கையில், பெகாசஸ் மென்பொருள் இஸ்ரேலிய நிறுவனமான NSO மெக்சிகன் அரசுக்கு விற்றதாகவும், குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகள் மீது மட்டுமே அதைப் பயன்படுத்தும் நிபந்தனையுடன் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் கூறுகையில், இந்த மென்பொருளின் சிறப்பு, ஸ்மார்ட்போன்களைக் கண்டறிந்து அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் பிற தகவல்தொடர்புகளைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது ஃபோனின் மைக்ரோஃபோன் அல்லது கேமராவையும் இயக்கலாம்.
இந்த நிறுவனம் சவுதி அரசுக்கு மென்பொருள் வழங்கியதாகவும், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்படுவதற்கு முன் அவரை உளவு பார்க்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
NSO நிறுவனம் எப்போதும் இந்த திட்டத்தை அங்கீகாரம் பெற்ற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்கிறது என்றும், அதன் நோக்கம் "பயங்கரவாதம் மற்றும் குற்றத்திற்கு எதிராக போராடுவது" என்றும் கூறி வருகிறது.
இந்த நிறுவனம் கலிபோர்னியா நீதிமன்றத்தில், தங்கள் உளவு மென்பொருளை தாங்கள் ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும், இறையாண்மையுள்ள அரசுகள் மட்டுமே அதைப் பயன்படுத்துகின்றன என்றும் தெரிவித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












