ஒரே நாளில் 93 செ.மீ. மழை பொழிந்த காயல்பட்டினம் தற்போது எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, ஒரே நாளில் 93 செ.மீ. மழை பொழிந்த காயல்பட்டினம் தற்போது எப்படி இருக்கிறது?

டிசம்பர் பதினாறாம் தேதி சனிக்கிழமை பிற்பகலில் மழை லேசாகத் தூற ஆரம்பித்தபோது, அது இவ்வளவு பெரிய மழையாக மாறும் என காயல்பட்டனம் மற்றும் அதற்கு அருகில் உள்ள ஊரைச்சேர்ந்தவர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. திங்கட்கிழமையன்று மழை ஓய்ந்தபோது, அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 93 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

தூத்துக்குடியில் இருந்து காயல்பட்டனத்திற்குச் செல்லும் வழியில் உள்ள பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், அங்கு நிலவரம் என்ன என்பதே பலருக்கும் தெரியவில்லை. ஆத்தூருக்கு அருகில் ஆற்றைக்கடக்கும் இரண்டு பாலங்களுமே வெள்ளத்தால் மூடப்பட்டுவிட்டன. மழை ஓய்ந்து பார்த்தபோது புதிய பாலம் சேதமடைந்திருந்தது. சிறிய பாலம் சின்னாபின்னமாகியிருந்தது.

ஆத்தூரில் பல இடங்களில் ஐந்தடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், கடைத் தெருவில் உள்ள கடைகள் அனைத்திலும் தண்ணீர் புகுந்துவிட்டது.

ஆனால், மாநிலத்திலேயே மிக அதிக அளவில் மழை பெய்த காயல்பட்டனம் நகரத்தில் மிகச் சில இடங்களில் மட்டுமே இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. தற்போது பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டாலும் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் நிற்கிறது.

காயல்பட்டனத்தை அடுத்துள்ள பரமன்குறிச்சி கஸ்பாவில் அருகில் உள்ள குளம் உடைந்ததால் ஊருக்குள் தண்ணீர் வந்திருக்கிறது. அதற்கு அருகில் உள்ள வட்டன்விளை ஊர் முழுவதும் ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அருகில் உள்ள தேவாலயத்தில் தங்கியிருக்கிறார்கள்.

இந்த ஊரின் மற்றொரு பக்கத்தில், மழை நீர் உட்புகுந்துவிடாமல் இருக்க ஊர் மக்களே, மண்ணால் ஒரு சிறிய அணையைக் கட்டியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளாக அறியப்படும் இந்தப் பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த இந்த மழை, மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கிறது. இவர்கள் புதிய வாழ்வை உருவாக்கிக்கொள்ள இன்னும் பல நாட்கள் தேவைப்படும்.

காயல்பட்டினம் மழை

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)