திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை - பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?

- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 31 இடங்கள் தேவை.
வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. ஆயினும் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
2018 சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, இம்முறையும் பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) உடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. 2018 இல் IPFT 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அக்கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த ஒரு இடத்தையும் சேர்த்து பாஜக கூட்டணிக்கு மொத்தம் 33 இடங்கள் கிடைத்துள்ளது. இது ஆட்சி அமைக்க போதுமானது.
இடங்கள் குறைந்துள்ளதால், பாஜகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் 44 சதவிகிதமாக இருந்தது. இம்முறை அது 39 சதவிகிதமாக குறைந்துள்ளது.

பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள் என்ன?
கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள துரித வளர்ச்சிப் பணிகள்தான் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று திரிபுராவின் அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.
"புதிய ரயில் இணைப்புகள், புதிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலர் வீடுகளைப் பெற்றனர். சமூக ஓய்வூதியங்கள் அதிகரிக்கப்பட்டன. கழிப்பறைகள் கட்டப்பட்டன. பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பாஜகவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன,” என்று அகர்தலாவில் பிடிஐ மூத்த செய்தியாளர் ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.
அகர்தலாவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளரான தேப்ராஜ் தேப், இந்திய அரசின் வளர்ச்சி தொடர்பான முக்கிய திட்டங்கள் பாஜகவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்ததாக கருதுகிறார். இதனுடன், பல பெரிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்கள் வந்ததன் காரணமாகவும் பாஜக பயனடைந்ததாக அவர் கூறுகிறார்.
முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில், ஃபெனி ஆற்றின் மீது இந்திய-வங்காள நட்புறவு பாலம் மற்றும் தெற்கு திரிபுராவின் பங்களாதேஷ் பக்கத்தில் உள்ள சப்ரூமில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஆகியவற்றை தேப்ராஜ் தேப் குறிப்பிடுகிறார். இதனுடன், பங்களாதேஷில் உள்ள அகர்தலா மற்றும் அகௌரா இடையே தொடங்கவிருக்கும் ரயில் இணைப்புத் திட்டத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த எல்லா உள்கட்டமைப்பு திட்டங்களால் திரிபுராவை வணிக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேப்ராஜ் தேப் கூறுகிறார். "வரும் காலங்களில் குவஹாட்டிக்கு பிறகு திரிபுரா, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக ஆகலாம் என்றும் கூறப்படுகிறது."
2014-ல் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திரிபுராவின் கனெக்டிவிட்டி துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அகல ரயில் பாதை இணைப்பு மற்றும் திரிபுராவின் புதிய விமான நிலைய முனையம் ஆகியவையும் இதில் அடங்கும்.
"பாஜக ஆட்சியில் வீடு, குடிநீர், இணைப்பு, வணிகம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்னைகளில் உழைத்ததன் பலன் கிடைத்ததாக பாஜகவும் நம்புகிறது," என்று தேப் கூறுகிறார்.

'இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணி பலனளிக்கவில்லை'
இந்தத்தேர்தலில், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜகவின் நேரடிப்போட்டி இருந்தது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், கடந்த தேர்தலில் 16 இடங்களை பெற்ற சிபிஎம், இந்த முறை 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
திரிபுராவின் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், இடதுசாரிகளுக்கும், காங்கிரசுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றமும், வன்முறையும் நிலவி வருவது தெளிவாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரு தரப்பினரும் கடந்த காலங்களில் வன்முறை, அரசியல் குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.
"அந்த வன்முறை சம்பவங்களின் நினைவு இன்னும் மக்கள் மனதில் உள்ளது. இந்த இரண்டு போட்டியாளர்களும் தேர்தலுக்கு முன்பு ஒன்றாக இணைந்தனர். தான் போட்டியிடாத இடத்தில் தனது கூட்டணி கட்சிக்கு அந்த வாக்குகள் கிடைக்கும் என்று இரு கட்சிகளும் நம்பின. ஒருவேளை அவ்வாறு நடக்கவில்லை" என்று தேப்ராஜ் தேப் கூறுகிறார்.
இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் காங்கிரசுக்கு சில நன்மைகள் கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த கூட்டணியால் இடதுசாரிகளுக்கு சிறப்புப் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே கெமிஸ்ட்ரி இல்லாததால் பாஜக வெற்றி பெறுவது எளிதாகிவிட்டது என்கிறார் தேப்ராஜ் தேப்.
டிப்ரா மோதா கட்சியின் எழுச்சி
திரிபுராவின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசான பிரத்யோத் டெபர்மா தலைமையில் முதன்முறையாக சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்ட டிப்ரா மோதா கட்சி, இம்முறை தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தை செய்திருக்கிறது.
பழங்குடியின மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தை முன்வைத்த டிப்ரா மோதா, கடந்த காலங்களில் 'க்ரேட்டர் டிப்ராலாண்ட்' பற்றியும் பேசி வருகிறது.
"தனி மாநிலம் கிடைத்தால், தங்களின் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, தங்கள் ஆசைகள் நிறைவேறும் என மக்கள் நினைத்தனர். அதனால்தான், இந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது," என்று டிப்ரா மோதாவின் செயல்பாடு குறித்து ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.
டிப்ரா மோதா கட்சி தேர்தல் களத்தில் இறங்கியதால் இடதுசாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று அவர் நம்புகிறார். "டிப்ரா மோதா ஒதுக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளுக்கு வெளியேயும் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும் சில பகுதிகளில் சிபிஎம் ஆதரவாளர்களாக இருந்த பல பழங்குடியினர் டிப்ரா மோதாவை நோக்கிச் சென்றனர். அத்தகைய சூழ்நிலையில் சிபிஎம் கட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தேப்ராஜ் தேப்பும் இதை ஒப்புக்கொள்கிறார். ”இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல வேண்டிய பழங்குடியின ஓட்டுகள் டிப்ரா மோதாவை நோக்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதுவும் பாஜகவின் வெற்றியை எளிதாக்கியது,” என்று அவர் குறிப்பிட்டார்.
டிப்ரா மோதாவின் எழுச்சி காரணமான இழப்பை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த IPFT கட்சி தாங்க வேண்டியிருந்தது என்று ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.
"ஐபிஎஃப்டி மற்றும் டிப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏறக்குறைய ஒன்றுதான். எனவே, ஐபிஎஃப்டியின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டிப்ரா மோதாவை நோக்கிச் சென்றனர். இதுவே ஐபிஎஃப்டியின் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
டிப்ரா மோதாவை நோக்கி பாஜக நட்பு கரம் நீட்டுமா?
பா.ஜ.க கூட்டணிக்கு 33 இடங்கள் உள்ளதால், டிப்ரா மோதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பாஜக, சிந்திக்குமா என்ற பெரிய விவாதமும் நடந்து வருகிறது.
டிப்ரா மோதாவுடன் கைக்கோர்ப்பதன் மூலம் பாஜக கூட்டணிக்கு 46 இடங்கள் கிடைக்கும் என்றும், அது அக்கட்சிக்கு வசதியாக நிலையை ஏற்படுத்தும் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேர்தலுக்கு முன்பே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், டிப்ரா மோதாவுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், டிப்ரா மோதாவின் தனி மாநிலக் கோரிக்கை இரு தேசியக் கட்சிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதால் கூட்டணி அமைக்க முடியவில்லை.
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐபிஎஃப்டியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, பாஜக மீண்டும் டிப்ரா மோதாவை நோக்கி நட்புக் கரம் நீட்டக்கூடும் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன.
இதற்கிடையில், தனி மாநில கோரிக்கையை தவிர, டிப்ரா மோதாவின் மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயார் என பாஜக தரப்பில் இருந்து சிமிஞ்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
ஆயினும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அக்கட்சியும் டிப்ரா மோதாவும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு காணப்படவில்லை என்று ஜெயந்தா பட்டாச்சார்யா கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












