அதானி குழுமத்துக்கு 'உயிர் கொடுக்கும்' அபுதாபி நிறுவனத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images
அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபரில்(FPO) முதலீடு செய்துள்ளது.
திங்கட்கிழமை பங்குச்சந்தை முடிவில், இந்த FPO பங்குகளில் 3% மட்டுமே வாங்கப்பட்டிருந்தன.
ஆனால் இதற்குப் பிறகு அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இன்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது.
'அதானி குழுமத்தின் மீதான எங்கள் ஆர்வத்திற்கு காரணம் அதானி எண்டர்பிரைசஸின் பொருளாதார ஆரோக்கியத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். இந்த நிறுவனத்தில் நீண்ட கால வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்,” என்று இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சையத் பஸர் ஷுயேப் கூறினார்.
அதானி குழுமம் எல்லா தரப்பிலிருந்தும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

பட மூலாதாரம், REUTERS/AMIT DAVE
ஹிண்டன்பர்க் அறிக்கை நஷ்டம் விளைவித்ததா?
அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது நிதி முறைகேடுகள் தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த வாரம் முன்வைத்தது.
அதன்பிறகு அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மூன்று வணிக நாட்களில் அதாவது ஜனவரி 25, 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவிகிதம் சரிவை பதிவு செய்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
இது இந்திய மதிப்பில் சுமார் 5.6 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதானி குழுமம் ஞாயிற்றுக்கிழமை மாலை இது தொடர்பாக 413 பக்க விளக்க அறிக்கையை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கையை இந்தியாவுக்கு எதிரான தாக்குதல் என்று அது கூறியது.
இருப்பினும் இதற்குப் பிறகும் அதானி குழுமங்களின் பங்குகள் திங்கள்கிழமை சரிந்து, அதன் சந்தை மூலதனத்தில் 1.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அபுதாபியின் IHC நிறுவனத்தின் முதலீட்டு அறிவிப்புக்குப் பிறகு வேறு சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன.
துபாய் மற்றும் இந்தியாவில் அமைந்துள்ள சில குடும்ப நிறுவனங்களும் அதானி குழுமத்தின் FPO இல் 9000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடும் என்று இந்து பிசினஸ் லைன், செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதானி குழுமத்தில் ஐ.ஹெச்.சி. முதலீடு புதிதல்ல
அபுதாபியின் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்வது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு இந்தக்குழு, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி குழுமத்தின் பிற நிறுவனங்களில் இரண்டு பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சகோதரர் ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் இந்த நிறுவனத்தின் தலைவர்.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அபுதாபியின் பங்குச் சந்தையின் வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏறியுள்ளது. இந்த நிறுவனம் அபுதாபியின் பங்குச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளது.
இந்த நிறுவனம் இந்த ஆண்டு வெளிநாடுகளில் தனது முதலீட்டை 70 சதவிகிதம் அதிகரிக்க முயற்சிக்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை கூறுகிறது.
வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் போது இந்த நிறுவனம், தூய்மையான எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறது.
ஆனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததில் இருந்தே இந்த நிறுவனம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
40 பணியாளர்களைக் கொண்ட நிறுவனம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிறுவனத்தில் நாற்பது பேர் மட்டுமே பணிபுரிந்தனர் என்று இந்த நிறுவனம் தொடர்பான ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனத்தின் பெயரை பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த நிறுவனம் மீன் வளர்ப்பில் இருந்து உணவு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் வரை செயல்பட்டு வந்தது என்று பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் இப்போது அபுதாபியில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த குழுமத்தின் சந்தை மூலதனம் 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
சந்தை மூலதனத்தைப் பொருத்தவரை இந்த நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான சீமென்ஸ் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 42,000 சதவிகிதம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் இந்த நிறுவனம் இப்போது செளதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

பட மூலாதாரம், IHC
வானளாவிய வெற்றியின் ரகசியம் என்ன?
இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனியின் மகத்தான வெற்றிக்கான காரணம் புரியாத புதிர் தான். உலகின் பிற நாடுகளில் இந்த நிறுவனத்தின் பொருளாதார வெற்றியைப் பற்றி குறைவான தகவல்களே கிடைக்கின்றன.
அதே நேரம் அபுதாபியின் பொருளாதார உலகத்துடன் தொடர்புடைய நபர்களிடமும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அதிக தகவல்கள் இல்லை.
இந்த நிறுவனம் எப்படி இவ்வளவு வேகமாக வளர்ந்தது என்பது யாருக்கும் தெரியாது என்று வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு சர்வதேச வங்கியாளர், பைனான்சியல் டைம்ஸ் உடனான உரையாடலில் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சையத் பாஸர் ஷுயேப், இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தை ’சிறப்பானது’ என்று விவரிக்கிறார்.
"நாங்கள் எந்த விதமான டிவிடெண்டும் தருவதில்லை. 2020, 2021-ம் ஆண்டுகளில் கிடைத்த லாபம், திரும்ப முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு மாபெரும் நிறுவனத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்... உலக அளவில் பெரிய நிறுவனமாக மாற முயற்சிக்கிறோம்,"என்று அவர் கூறினார்.
இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் வணிகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையே’மங்கலாகும் கோடு’ என்று சிலர் இந்த நிறுவனத்தை பார்க்கின்றனர்.
நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் இந்த மாபெரும் வளர்ச்சியைப் பற்றிய கவலைகள் இருக்கும் காரணத்தால் துபாய் அதிகாரிகள் தங்கள் பங்குச் சந்தையை ADX உடன் இணைக்கும் வாய்ப்பில் இருந்து பின்வாங்கத்தொடங்கியுள்ளனர் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












