திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - மேகாலயாவில் ஆட்சியமைக்க ஆதரவு

தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஏதுவாக தமது பழைய கூட்டணியை பாஜக புதுப்பிக்கவிருக்கிறது.

இந்த நிலையில், திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக 32 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் ஐபிஎஃப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

please wait...

நாகாலாந்து

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் 37 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 12 இடங்களிலும், என்டிபிபி 25 இடங்களிலும் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.

நாகாலாந்து அரசியல் முன்னோடியும் என்டிபிபி தலைவருமான நெய்ஃபியூ ரியோ தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு உறுதியான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் அம்மாநிலத்தில் ஐந்தாவது முறையாக அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவர் மொத்தம் 17,045 வாக்குகளைப் பெற்றார், இது அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 92.87% ஆகும்.

please wait...

60 சட்டப்பேரவை இடங்களை கொண்ட நாகாலாந்து 1963இல் 'மாநில அந்தஸ்தை' பெற்றது, ஆனால் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இங்குள்ள பெண்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அம்மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இந்த முறை நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அவர்களில் நான்கு பேர் மட்டுமே பெண்கள்.

இதில், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) சார்பில் ஹெகானி ஜக்லு (திமாப்பூர்-III தொகுதி) மற்றும் சல்ஹவுடுவோனுவோ (மேற்கு அங்கமி தொகுதி) ஆகிய இரு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

மேகாலயா

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 26 இடங்களை வென்றது என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி (VPP) நான்கு இடங்களையும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களையும் வென்றன.

அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதாகக் கூறினார்.

மேகாலாவில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மாநில பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சர்மா மேலும் கூறினார்.

please wait...

தேர்தல் வாக்குறுதிகள்

திரிபுராவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு பாஜக இந்த தேர்தலை "கோவில் மற்றும் தேசியவாதம்" என்ற அம்சத்தில் அணுகும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் திரிபுராவின் இடதுசாரி கட்சிகள் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தன.

மேகாலயாவில் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

மாநிலத்தில் 36 சட்டமன்ற தொகுதியில் ஆண்களின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல்வேறு கட்சிகள் பெண்களை முன்னிலைப்படுத்தி பல வாக்குறுதிகளை வழங்கின.

நாகாலாந்தில், 'நாகாலாந்தை முன்னேற்றுவோம்' என்ற அம்சத்தை முன்னிலைப் படுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

காங்கிரஸ் கட்சி, நாகாலாந்தில் ஆட்சியமைத்தால் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கிடு வழங்கப்படும் மற்றும் முதியவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்