சென்னை மற்றும் புறநகரில் குத்தகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து நூதன மோசடி - எப்படி நடக்கிறது?

குத்தகைக்கு வீடு தேடுகிறவர்களை குறிவைத்து சென்னை மற்றும் புறநகரில் ஏராளமான பணமோசடிக் கும்பல்கள் இயங்கி வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"சென்னைதான் எங்களுக்கு பூர்வீகம். பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்ததால் பெரிய வீடு வேணும்னு ரூ.23 லட்சம் குத்தகை கொடுத்து இந்த வீட்டுக்கு வந்தோம். இப்ப லோன் சரியா கட்டலைன்னு வீட்டை ஜப்தி பண்ணிட்டாங்க. வீட்டு ஓனர் எங்கேன்னு தெரியலை. எங்களோட மொத்த சேமிப்பும் அந்தப் பணம்தான்" - தான் குடியிருந்த வளசரவாக்கம் வீட்டின் வாசலில் அமர்ந்தபடியே அழுகிறார் துர்கா தேவி.

கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஜெகன், குன்றத்தூர் அருகில் ஆறு லட்ச ரூபாயை கொடுத்து ஒரு வீட்டை குத்தகைக்கு எடுத்து குடியேறினார். அவரும் துர்கா தேவியை போலவே பிரச்னையை எதிர்கொண்டதாக பிபிசி தமிழிடம் வேதனைப்பட்டார்.

இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக பல புகார்கள் வந்திருப்பதால் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதாகக் கூறுகிறார் தாம்பரம் காவல் துணை ஆணையர்.

குத்தகை அடிப்படையில் குடியேறுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தலைமறைவான வீட்டு உரிமையாளர்

குத்தகைக்கு வீடு தேடுகிறவர்களை குறிவைத்து சென்னை மற்றும் புறநகரில் ஏராளமான பணமோசடிக் கும்பல்கள் இயங்கி வருகிறது.
படக்குறிப்பு,

"வளசரவாக்கத்தில் எங்கள் வீட்டின் உரிமையாளராக இருந்தவர் வீட்டின் பேரில் வாங்கிய கடனுக்கான தவணையை சரியாக செலுத்தவில்லை. இதனால் வங்கியில் இருந்து ஆட்கள் வரத் தொடங்கினர். ஒருகட்டத்தில் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டினர். அதன் பிறகு தான், வீட்டின் பேரில் அவர் 88 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளது தெரியவந்தது", என்கிறார் துர்கா தேவி.

ஒருகட்டத்தில், வீட்டைக் காலி செய்யுமாறு வங்கித் தரப்பில் இருந்து துர்காவுக்கு நெருக்கடிகள் வந்துள்ளன.

''வீட்டு உரிமையாளரின் மனைவி உள்பட அவரது உறவினர்களிடம் பேசியும் உரிமையாளர் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், ஆகஸ்ட் 27 அன்று வீட்டை தனியார் வங்கி நிர்வாகம் ஜப்தி செய்துவிட்டது" என்கிறார், துர்கா தேவி

இதன்பிறகு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் துர்கா தேவி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது நடந்த விசாரணையில் மேலும் சில இடங்களில் இதேபோல் அந்த நபர் மோசடி செய்திருப்பது தங்களுக்குத் தெரியவந்ததாக பிபிசி தமிழிடம் துர்கா தேவி குறிப்பிட்டார்.

இதுகுறித்து, அந்த நபரின் மனைவியிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் பலமுறை தொடர்பு கொண்டும் அவரிடம் இருந்து பதில் வரவில்லை.

குடும்பத்தினருடன் துர்கா தேவி
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட துர்கா தேவி குடும்பத்தினர் (வீட்டு உரிமையாளருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை கையில் வைத்துள்ளனர்)

இவரைப் போலவே, தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெகன் என்பவர், 2020 ஆம் ஆண்டில் குன்றத்தூர் அருகில் உள்ள கோவூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆறு லட்ச ரூபாய்க்கு குத்தகைக்கு சென்றுள்ளார்.

''ஒரு வங்கியில் இருந்து வாங்கிய வீட்டுக்கடனை வீட்டின் உரிமையாளர் செலுத்தாததால் வீடு ஜப்தி செய்யப்பட்டது'' என்று கூறும் ஜெகன் தான் கொடுத்த பணத்தில் 2 லட்ச ரூபாய் மட்டுமே திரும்ப கிடைத்ததாக தெரிவித்தார்.

" என்னுடைய வீட்டு உரிமையாளர் கொடுத்த காசோலை திரும்பி வந்துவிட்டதால் (cheque bounce) சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறேன்" என்கிறார் ஜெகன்.

மோசடி செய்த நபர் கைது

இதே பாணியிலான மோசடி கிழக்கு தாம்பரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. 'வாடகை மற்றும் வீடு குத்தகைக்குக் கிடைக்கும்' என விளம்பரம் செய்து 'சென்னை ஹோப்ஸ் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' என்ற கம்பெனி செயல்பட்டு வந்துள்ளது.

இதனை நடத்தி வந்த பிரேம்பாபு என்ற நபரை போலீஸ் கைது செய்தது. இவர்களின் விளம்பரத்தை நம்பி 8.5 லட்ச ரூபாயை கொடுத்து ஏமாந்துவிட்டதாக முகமது பாரூக் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல்துறை கூறியது என்ன?

"வீடுகளில் குத்தகைக்கு செல்பவர்கள் சார்-பதிவாளர் அலுவலங்களில் முறையாக பதிவு செய்யப்படாததுதான் இதுபோன்ற மோசடிகளுக்குக் காரணம்" என்கிறார், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வீடுகளை குத்தகைக்கு விடுவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த ஆண்டு பிரேம்பாபு என்பவரை தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்ற மோசடிகள் நடக்காத வண்ணம் தடுக்க பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் சைபர் கிரைம் போலீஸுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன" என்கிறார் பவன்குமார் ரெட்டி.

தீர்வு என்ன?

"குத்தகை ஒப்பந்தம் என்பது ஒரு பெரிய தொகையை பெற்றுவிட்டு வீட்டை கொடுப்பது. வீட்டைக் காலி செய்யும் போது பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இதை முறையாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தால் எந்த சிக்கலும் வரப் போவதில்லை" என்கிறார், வழக்கறிஞர் சரவணன் கார்த்திகேயன்.

குத்தகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதற்கு 1 சதவீத முத்திரை தீர்வையும் (stamp duty) 1 சதவீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.

"கார்பரேட் நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தனியார் வங்கிகள் போன்றவை பத்திரப்பதிவு அலுவலகம் வந்து முறையாக பதிவு செய்கின்றன. இவ்வாறு பதிவு செய்தால்தான் காப்பீடு கிடைக்கும் என்பது பிரதான காரணமாக உள்ளது" என்கிறார்

இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளையும் அவர் முன்வைக்கிறார்.

  • ஒருவர் தான் குத்தகைக்கு செல்வதை பத்திரப்பதிவு அலுவலகம் மூலமாக பதிவு செய்யும்போது அந்த வீடு வங்கிக் கடனில் இருப்பது தெரியவரும்.
  • வங்கிக் கடன் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? வீட்டின் மீது வேறு ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா? என்பது தெரியவரும்.
  • வங்கியில் இருந்து வீட்டின் உரிமையாளர் பெயரில் தடையில்லா சான்று கொடுத்தால்தான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.
  • ஓராண்டுக்கு மேற்பட்ட வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்பது பத்திரப்பதிவு விதி. அவ்வாறு பதியும்போது நீதிமன்றத்தில் நிவாரணம் தேடிக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
வழக்கறிஞர் சரவணன் கார்த்திகேயன்
படக்குறிப்பு, வழக்கறிஞர் சரவணன் கார்த்திகேயன்

"முத்திரைத் தீர்வையாக செலுத்தும் தொகை குறைவாக இருந்தால் மக்கள் பதிவு செய்ய முன்வருவார்கள். பதிவுக்கு தனி கட்டணம், வில்லங்க சான்றுக்கு கட்டணம் என அரசு நிர்ணயித்துள்ளதால் பதிவு செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை" என்கிறார் வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் மணிசங்கர்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " வீட்டு உரிமையாளருடன் குத்தகைக்கு செல்வோர் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக பேசிக் கொள்வதால் குத்தகை முடிந்த பின்னர் பிரச்னை எழுகிறது. குத்தகை தொடர்பாக போடப்படும் பத்திரத்தையும் சிலர் புதுப்பிப்பதில்லை " என்கிறார்.

அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் மணிசங்கர்.
படக்குறிப்பு, அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் மணிசங்கர்

புறநகரில் நடக்கும் குத்தகை மோசடிகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் அறிவழகன், "குத்தகைக்கு அடிப்படையில் குடியேற செல்லும் முன்பாக முறையாக பதிவு செய்யப்பட்டால்தான் சட்டரீதியாக அது செல்லுபடியாகும். 11 மாதங்களுக்கு மேல் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது என்றால் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்" என்கிறார்

"குத்தகை தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும். இதுதொடர்பான மோசடிகள் குறித்தும் கோரிக்கைகள் குறித்தும் பதிவுத்துறை தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்" என்கிறார், அறிவழகன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)