சீனாவுடன் எல்லை ஒப்பந்தத்தை விரும்பும் பூடான்: இந்தியா இதை ஏற்குமா ?

பூடான், இந்தியா, சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் (இடது) 2018 இல் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார்.
    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு ஆசிய ஜாம்பவான்களுக்கு இடையே இமயமலையை ஒட்டி அழகிய நாடாக அமைந்திருக்கிறது பூடான். ஆனால் அதன் தனித்துவமான புவியியல் நிலை காரணமாக அங்கே பிரச்னையும் இருக்கிறது.

சீனா தனது நில எல்லை பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளாத இரண்டு நாடுகளில் பூடானும் ஒன்று. மற்றொரு நாடு இந்தியா. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இமய மலை எல்லைப்பகுதியில் நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

சீனாவின் உலகளாவிய எழுச்சியானது பெய்ஜிங்குடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட பூடானுக்கு அழுத்தம் கொடுக்கிறது. ஆனால் இதில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமானால் பூடானின் நட்பு நாடான இந்தியாவின் ஒப்புதல் தேவைப்படும்.

திம்புவும் (பூடான் தலைநகரம்), டெல்லியும் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இந்தியா லட்சக்கணக்கான டாலர்கள் நிதி மற்றும் ராணுவ உதவிகளை திம்புவுக்கு வழங்கி வருகிறது.

இமயமலையின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நிலப்பரப்பை பகிர்ந்து கொள்வதில் பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னைகள் இருக்கின்றன.

குறிப்பாக போர் முக்கியத்துவம் வாய்ந்த டோக்லாம் பீடபூமியை சுற்றியே முக்கிய பிரச்சனை நிலவுகிறது.

இது இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் இருக்கும் முக்கோண சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. பூடானும் சீனாவும் இப்பகுதிக்கு உரிமை கோருகின்றன. திம்புவின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்கிறது.

திம்புவுக்கு ஆதரவளிக்க இந்தியாவுக்கு அதன் சொந்த காரணங்கள் உள்ளன. சீனர்களின் எந்த விதமான ஆதிக்கமும் ’சிக்கன்ஸ் நெக்’ (Chicken's Neck) எனப்படும் சிலிகுரி காரிடாருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் டோக்லாம் பீடபூமி இந்திய பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

22 கிமீ (14 மைல்) நீளமுள்ள இந்தப் பகுதி, இந்திய நிலப்பரப்பை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது.

பூடான் பிரதமர் லோடே ஷெரிங் சமீபத்தில் பெல்ஜிய செய்தித்தாள் லா லிப்ரேக்கு இது தொடர்பாக ஒரு பேட்டி அளித்தார்.

"பூடான் மட்டுமே பிரச்சனையை தீர்க்க முடியாது. நாங்கள் மூன்று பேர் உள்ளோம். பெரிய நாடு, சிறிய நாடு என்று எதுவும் இல்லை. மூன்றுமே சமம் தான். நாங்கள் தயாராக இருக்கிறோம். மற்ற இரண்டு தரப்பும் தயாரானால் நாம் இதுபற்றி விவாதிக்கலாம்," என்று ஷெரிங் கூறினார்.

பூடானும் சீனாவும் ஓரிரு சந்திப்பில் சில எல்லைகளை வரையறுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 1984 ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளும் எல்லைப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. பூடான் எல்லைக்குள் சீன ஊடுருவல் எதுவும் இல்லை என்றும் ஷெரிங் கூறினார்.

ஷெரிங்கின் கருத்துக்கள் இந்தியாவில், குறிப்பாக ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, பூடான் மற்றும் சீனாவுக்கு இடையேயான ’முக்கோண சந்திப்பு’ பரிமாற்ற ஒப்பந்தத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து பல அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

டோக்லாம் மீதான அதன் உரிமைகோரல்களுக்கு திம்பு போதுமான அளவு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர்களில் சிலர் குறிப்பிடுகின்றனர்.

சீன எல்லையில் இந்திய ராணுவம்

"இந்தியாவிற்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவே, எல்லை பிரச்சனையை தீர்க்குமாறு சீனா பூடானுக்கு அழுத்தம் கொடுப்பதாக இந்தியா கவலை கொண்டுள்ளது," என்று இந்தியாவின் முன்னாள் மூத்த தூதரக அதிகாரியும், இமயமலை விவகாரங்களில் நிபுணராக விளங்குபவருமான பி ஸ்டோப்டன் கூறினார்.

" பூடானியர்கள் தங்கள் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த விரும்புகிறார்கள் என்று தெளிவாகிறது. மேலும் தாவாவை தீர்ப்பதில் சீனாவின் பங்கு குறித்து பூடானின் நிலைப்பாட்டில் சமீபத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன" என்று ஸ்டோப்டன் தெரிவித்தார்.

இந்திய ஊடகங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து, பூடான் பிரதமர் ஷெரிங் இந்த மாத தொடக்கத்தில் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தினார்.

"நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை. [பூடானின்] நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை" என்று பூடானின் ஒரு வார இதழிடம் அவர் கூறினார்.

ஷெரிங்கின் கருத்துக்களுக்கு இந்திய ஊடகங்களின் எதிர்வினை பல பூடானியர்களுக்கு வியப்பை அளித்தது. திம்பு டெல்லியின் ஆதரவு இல்லாமல் ஒரு ஒப்பந்தத்தை எட்டப்போராடும் என்பது சீனாவின் பார்வை.

"இந்தியாதான் இங்கு தடையாக இருக்கிறது. சீனாவும் பூடானும் எல்லைப் பிரச்சனையைத் தீர்த்தால், இந்தியா மட்டுமே எஞ்சியிருக்கும். இதை இந்தியா அனுமதிக்காது என்று நான் நினைக்கிறேன்," என்று ஷாங்காய் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் மூத்த உறுப்பினர் லியு சோங்கி பிபிசியிடம் கூறினார்.

பூடான் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

சீனாவும் பூடானும் 1996 ஆம் ஆண்டு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருக்கமாக இருந்தன, ஆனால் இந்தியாவின் தலையீட்டால் இது தோல்வியடைந்தது என்றார் அவர்.

பூடான்-சீனா எல்லைப் பிரச்னைகள், பல தசாப்தங்களாக நிலவும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.இரு நாடுகளும் முழுமையாக வரையறுக்கப்படாத ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

மேலும் பிராந்திய உரிமைகோரல்கள் பரஸ்பரம் எழுப்பப்படுகின்றன. 3,488 கிமீ நீள எல்லை பிரச்சனை என்று இந்தியா சொல்கிறது; ஆனால், சுமார் 2,000 கிமீ பிரச்னை என்று சீனா கூறுகிறது.

நடைமுறை எல்லை இந்தியாவின் வடக்கு லடாக் பகுதியில் தொடங்கி கிழக்கில் அருணாச்சல பிரதேச (சீனர்கள் தெற்கு திபெத் என்று அழைக்கிறார்கள்) மாநிலம் வரை செல்கிறது.

சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையை பல பூடானியர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். விரைவில் பெய்ஜிங்குடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது நாட்டிற்கு நல்லது என்று அவர்கள் கருதுகின்றனர்.

"சீனா ஒரு நிஜம். சீனாவுடன் தூதரக உறவுகளை வைத்துக் கொள்ளாத மாற்று வழி பூடானுக்கு இருக்கிறதா? அது விரும்பத்தக்க ஏற்பாடு என்று நான் நினைக்கவில்லை," என்று பெயர் குறிப்பிடவிரும்பாத பூடான் நிபுணர் ஒருவர் கூறினார்.

இந்தியாவும் பூடானும் 1949 இல் ஒரு சிறப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது டெல்லியின் பாதுகாப்பு கவலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டது. 2007 இல் திருத்தப்பட்ட ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ கொள்முதல் துறைகளில் திம்புவுக்கு அதிக சுதந்திரம் அளித்தது.

பூடானுக்குள் நூற்றுக்கணக்கான இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பூடான் துருப்புக்களுக்கு பயிற்சி அளிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் ராணுவ தலைமையகம் டோக்லாமில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள மேற்கு நகரமான ஹாவில் உள்ளது.

வரைபடம்

பூடான் டோக்லாமை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற டெல்லியின் வலியுறுத்தல் இல்லையென்றால், பூடான் சீனாவுடன் எல்லைத் தீர்வை அடைய முடியும் என்று வாங்சா சாங்கே போன்ற பூடான் வர்ணனையாளர்கள், கருதுகின்றனர்.

"டோக்லாம் மீது நாங்கள் எப்படி உரிமை கோருவது? டோக்லாமின் ஒரு பகுதியாக இப்போது எங்களிடம் இருப்பது இப்போதும் எங்களிடம் உள்ளது. எங்களிடம் இல்லாததை சீனாவிடமிருந்து எடுக்க முடியாது," என்று அவர் கூறினார்.

பூடான் தற்போது அதன் பெரும்பாலான தேவைகளுக்காக குறிப்பாக எண்ணெய்க்காக, இந்தியாவை சார்ந்துள்ளது. திம்பு அதன் வடக்கு அண்டை நாடான சீனாவுடன் மற்றொரு வழியைத் திறப்பதன் மூலம் தன் விநியோகத்தைப் பன்முகப்படுத்த வேண்டும் என்று சாங்கே போன்ற ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.

பூடான் பிரதமரின் கருத்துக்கள் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் எச்சரிக்கையான பதிலைப் பெற்றன."இந்தியாவும் பூடானும் நெருங்கிய தொடர்பில் உள்ளன.

பாதுகாப்பு நலன்கள் உட்பட பகிரப்பட்ட தேசிய நலன்கள் தொடர்பான நெருக்கமான ஒருங்கிணைப்புடன் உள்ளன" என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் வினய் மோகன் குவாத்ரா ஏப்ரல் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

"முச்சந்தி [டோக்லாம்] எல்லைப் புள்ளிகளை நிர்ணயிப்பதில் எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் எங்கள் முந்தைய அறிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன்," என்று குவாத்ரா கூறினார்.

டோக்லாமின் பெரும் பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக அதைச் சுற்றி எந்த பெரிய மறுசீரமைப்பையும் இந்தியா விரும்பவில்லை. மறுபுறம் தனது கோரிக்கையை கைவிடுமாறு பெய்ஜிங் மீது அழுத்தம் கொடுப்பது பூடான் போன்ற ஒரு நாட்டிற்கு கடினமாக இருக்கலாம்.

ஆசிய நூற்றாண்டு பற்றி மக்கள் பேசும் இந்த நேரத்தில் உலகின் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளாதாரங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறந்த நிலையில் பூடான் இருக்கலாம். ஆனால் டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதற்றம் நீடிப்பதால், திம்பு மேலும் மேலும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் தன்னைக் காண்கிறது என்பதையும் மறுக்கமுடியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: