அமெரிக்காவின் நெருக்கத்தால் ஆத்திரம் - தைவானை சுற்றி வளைக்கும் ஒத்திகையை நடத்தும் சீனா

பட மூலாதாரம், Getty Images
தைவான் அரசாங்கத்தைக் கடுமையாக எச்சரிக்கும் விதமாக, தைவானை சுற்றி வளைக்கும் மூன்று நாள் ஒத்திகையை சீன ராணுவம் தொடங்கியுள்ளது.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும் அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததும் சீனாவை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்தச் சந்திப்பால் கோபமடைந்த சீனா, தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்காவுக்குப் பயணம் செய்து திரும்பிய சில மணி நேரங்களிலேயே எல்லையில் போர் ஒத்திகைகளைத் தொடங்கியுள்ளது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம், 42 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 8 கப்பல்கள் தைவான் ஜலசந்தி இடைநிலைக் கோட்டைக் கடந்ததாகத் தெரிவித்தது.
இந்தக் கோடு சீனா மற்றும் தைவான் பிரதேசங்களுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பிளவுக்கோடு.
இந்த ராணுவப் பயிற்சிகள் "தைவான் தீவைச் சுற்றி ரோந்து மற்றும் முன்னேற்றங்களை ஒரே நேரத்தில் ஒழுங்கமைக்கும், சுற்றிவளைப்பு மற்றும் தடுப்புத் தோரணையை வடிவமைக்கும்" என்று சீன அரசு ஊடகம் கூறியது.
"நீண்ட தூர ராக்கெட் பீரங்கிகள், கடற்படை அழிப்பான்கள், ஏவுகணை படகுகள், விமானப்படை போர் விமானங்கள், ஜாமர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் கருவிகள்" அனைத்தும் சீனாவின் ராணுவத்தால் நிறுத்தப்பட்டுள்ளன.
தைவான் அதன் சொந்த அரசமைப்பு மற்றும் தலைவர்களுடன் தன்னை இறையாண்மை கொண்ட நாடாகக் கருதுகிறது. ஆனால் சீனா, தைவானை தன்னிடம் இருந்து பிரிந்த ஒரு மாகாணமாகப் பார்க்கிறது.
அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் பலவந்தமாக தைவான் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என சீனா அடிக்கடி கூறி வருகிறது.
தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. தைவானுடனான "மறு இணைவு" "நிறைவேற்றப்பட வேண்டும்" என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.
தைவானை சுற்றி சீனா அடிக்கடி பயிற்சிகளை மேற்கொண்டாலும், தைவானின் அதிபர் சாய், புதன்கிழமை அமெரிக்க அவையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்குப் பதிலளிக்கும் விதமாகவே, தற்போதைய சுற்றிவளைப்பு கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தைவான், சீனாவிடமிருந்து "தொடர்ச்சியான சர்வாதிகார விரிவாக்க அச்சுறுத்தலை" எதிர்கொள்வதால், தனது அரசாங்கம் அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அதிபர் சாய் இங் வென் சனிக்கிழமை தெரிவித்தார்.
அந்நாட்டின் வெளியுறவுக் குழுத் தலைவர் மைக்கேல் மெக்கால் தலைமையில், தைபேயில் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
தைவானுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக மெக்கால் கூறினார். அது, "போருக்காக அல்ல, அமைதிக்காக" என்றும் அவர் கூறினார்.
தைவானை சுற்றி சீனாவின் இந்த மூன்று நாள் ராணுவ ஒத்திகை நடவடிக்கை - "யுனைடெட் ஷார்ப் ஸ்வார்ட்" என்று அழைக்கப்படுகிறது. திங்கள்கிழமை வரை இது நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டில், கெவின் மெக்கார்த்திக்கு முன்பு அமெரிக்க சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைபேக்கு பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், சீன ராணுவம் தைவானை சுற்றி கிட்டத்தட்ட ஒரு வாரம் போர் பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், "தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை யாராலும் சீனாவிடமிருந்து பிரிக்க முடியாது. சீனாவின் இறையாண்மை, பிராந்திய உரிமை எப்போதும் துண்டாடப்பட முடியாத ஒன்று. தைவானின் எதிர்காலம் அதன் தாய் மண்ணுடன் இணைவதில்தான் இருக்கிறது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












