அமெரிக்காவுடன் நெருக்கம்- மிரட்டும் சீனா: சிக்கலில் இருக்கிறதா தைவான்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரூபர்ட் விங்ஃபீல்ட்-ஹேஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி இடையேயான சந்திப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீனா ராணுவ ஒத்திகையை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஹட்சன் கல்வி நிறுவனம் சாய் இங்-வென்னுக்கு சர்வதேச தலைமைத்துவ விருது விழங்கி கௌரவித்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின் கலிஃபோர்னியாவில் புதன்கிழமையன்று இருவருக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா - தைவான் இடையேயான உறுதியான, தனித்துவ கூட்டாண்மையை சாய் பாராட்டி பேசினார். இதேபோல், தைவானுடனான தங்களின் ஆயுத விற்பனை தொடரும் என்று மெக்கார்த்தி கூறினார்.
தங்களின் ஒருபகுதிதான் தைவான் என்று கூறிவரும் சீனாவுக்கு இந்த சந்திப்பு ஆத்திரமூட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவானை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.
இதனால், ஆபத்தான முக்கோண உறவில் தைவான் சிக்கிக்கொண்டது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
சாயின் இந்த அமெரிக்க பயணத்தை நாம் தற்செயலான ஒன்றாக பார்க்க முடியாது. அமெரிக்காவில் சீனா மீது ஆழமான வெறுப்பு வளர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருவரையொருவர் முறியடிக்கப் போட்டியிடுவதால், தைவானை வெளிப்படையாக ஆதரிக்க இரு கட்சிகளையும் இது தூண்டுகிறது.
அமெரிக்க முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தைவான் சென்றபோது சீனா கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியது. இருந்தபோதிலும் அவர் தைவானுக்கு செல்வதற்கு ஆர்வமாக இருந்ததற்கு அமெரிக்க அரசியல் சூழலும் முக்கிய காரணமாக இருந்தது.
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒருபகுதியாக சீனா குறிப்பிட்டுவரும் இந்த சுயாட்சி அதிகாரம் பெற்ற தீவு தொடர்பாக அமெரிக்கா- சீனா இடையே எப்போதுமே பதற்றமான சூழல் இருந்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
“ தனிப்பட்ட முறையில் பெலோசியின் தைவான் பயணத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன் ” என்று கூறுகிறார் தைவானில் உள்ள அமெரிக்க கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான வில்லியம் ஸ்டாண்டன். “அமெரிக்காவைச் சேர்ந்த உயர்மட்ட அரசியல்வாதி ஒருவர் தீவுக்குச் செல்வது சீனாவை உசுப்பேத்தும் விதமாக இருந்தது. அதன் விளைவுகள் அச்சப்படும் வகையில் இருந்தன” என்றும் அவர் தெரிவித்தார்.
தைவான் தீவை சுற்றி சீனாவின் ஏவுகணைகள் பறந்தன. தலைநகரை சுற்றியுள்ள பிராந்தியங்களின் அரசுகள், தைவான் மீது சீனா படையெடுப்பை எப்போது நடத்தக்கூடும் என்பது பற்றி விவாதித்தன.
இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட மெக்கார்த்தி, பெலோசியின் வழியை பின்பற்றுவது தொடர்பான தனது விருப்பத்தை பகிரங்கப்படுத்தினார். எனினும், இது சிறந்த முடிவாக இருக்காது என்று தைவான் அதிபர் சாய் முடிவு செய்தார் என்று ஸ்டாண்டன் கூறுகிறார்.
“ பெலோசியை போன்று தைவானுக்கு செல்ல மெக்கார்த்தி திட்டமிட்டதும், அதற்கு பதிலாக, கலிஃபோர்னியாவில் சந்திக்கலாமே என்று சாய் கூறியிருப்பதும் தெளிவாக தெரிகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
தைவானுக்கு அமெரிக்கத் தலைவர் ஒருவரின் மற்றொரு சர்ச்சைக்குரிய வருகையை அதிபர் சாய் இன்னும் விரும்பவில்லை - ஆனால் தைபேயில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் அதன் மிக சக்திவாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்பை தடுத்து நிறுத்துவதில் சீனா வெற்றிபெறாது என்பதையும் அவர் காட்ட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
அதனால்தான், `தைவான் பிரச்சனையில் அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது` என்று சீனா எச்சரித்த போதிலும் கலிஃபோர்னியாவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த சந்திப்பு தொடர்பாக சீனா அதிகமாக செயலாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க வெள்ளை மாளிகை கூறியது.
பின்னர் வெள்ளை மாளிகை, இந்த சந்திப்பு தொடர்பாக பெய்ஜிங் "அதிகமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறியது.
இத்தகைய போக்கு தைவானுக்கு மிகவும் முக்கியமானது என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலறிஞர் வென்-டி சுங் கூறுகிறார்.
பல ஆண்டுகளாக, தைவானின் பல முறையான நட்பு நாடுகளை சீனா வெற்றிகரமாக வேட்டையாடியுள்ளது, தைபேயை அங்கீகரிக்கும் அரசாங்கங்களின் எண்ணிக்கையை வெறும் 13 ஆகக் குறைத்தது.
" சர்வதேச அங்கீகாரத்திற்கான தைவானின் தேவைகளுடன் இந்த சர்வதேச பயணங்கள் பொருந்திப்போகின்றன" என்று சுங் குறிப்பிடுகிறார்.
"சர்வதேச அங்கீகாரம் இல்லாதபோது, சர்வதேச ஆதரவு பெற்றது போன்ற இந்த ஏற்பாடுகள் தைவானியர்களுக்கு முக்கியமானவை." என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதிபர் சாய்வுக்கு முன்பு தைவானின் அதிபராக இருந்த மா யிங்-ஜியோவை சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய அழைத்ததன் மூலம், அதன் எதிர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தனது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 5 நாட்கள் பயணமாக அவர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மத்திய சீனாவில் உள்ள அவர்களின் கல்லறைகளை மா பார்வையிட்டார். ஆனால், இந்த பயணமும் அரசியல் நிறைந்ததுதான். 1949ல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து தைவானின் முன்னாள் அதிபர் ஒருவருக்கு சுற்றுப்பயணத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

பட மூலாதாரம், Getty Images
“தைவான் தொடர்பான தங்களின் போக்கை மென்மையானதாக காட்டிக்கொள்ள சீனா முயல்கிறது. அங்குள்ள மக்களின் இதயங்களையும், மனங்களையும் அதிகளவு வென்றெடுக்கிறது. மேலும் 2024ஆம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது தைவானிய தேசியவாத எழுச்சி ஏற்படுவதை தவிர்க்கிறது ” என்று சுங் கூறுகிறார்.
இதற்கு தேவையான அரசியல் சமாளிப்புகளை மாவின் சீன பயணம் வழங்கியதாகவும் அவர் கூறுகிறார்.
மா கடந்த வாரம் நான்ஜிங்கில் தரையிறங்கியபோது, ஒரு அற்புதமான அரசியல் உரையை நிகழ்த்தினார். "தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள மக்கள் சீனர்கள்தான். இருவரும் யான்,மஞ்சள் பேரரசர்களின் வழித்தோன்றல்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
சீனாவிடம் தைவான் சரணடைவதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதால் மாவுடன் சீன அரசின் உறவு நல்ல முறையில் உள்ளது என்று கூறும் ஸ்டாண்டன். "நாம் அனைவரும் சீனர்கள் என்று அவர் கூறுகிறார். அது அவருக்கும் சீனர்களுக்கும் உடன்பாடான ஒன்று, ஆனால் தைவானியர்கள் இந்த கருத்தில் உடன்படவில்லை." என்றார்.
மாவின் கூற்றில் உள்ள ஆபத்து என்னவென்றால், தைவானில் வசிப்பவர்களில் 60% க்கும் அதிகமானோர், கணக்கெடுப்பின்படி, தங்களை தைவானியர்கள் என்று விவரிக்கிறார்கள், சீனர்களாக அல்ல.
ஆனால், அவரது பேச்சால் அவருக்கு வெகுமதியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தைவானில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தைவான் - சீனா இடையே போர் ஏற்படலாம் என்று நம்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே போர் ஏற்படும் சூழலை தவிர்க்க முடியும் என்று தைவான் வாக்காளர்களை நம்ப வைப்பதே மாவின் நோக்கமாக இருக்கும் என்று சுங் கூறுகிறார். சீனாவுடன் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று மாவின் கட்சியான KMT கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தற்போது முக்கிய பிரச்சனையாக இருப்பது தைவான் தொடர்பாக அமெரிக்கா, சீனாவின் உறவு மோசமடைந்து வருவது . 1979ல் அமெரிக்காவும் சீனாவும் அதிகாரப்பூர்வமாக ஒருவரையொருவர் அங்கீகரித்ததில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத வகையில் தற்போது அவர்களுக்கு இடையேயான உறவு மோசமாக உள்ளது என்று அமெரிக்காவின் ஜெர்மன் மார்ஷல் நிதியத்தின் ஆசிய திட்டத்தின் தலைவர் போனி கிளேசர் கூறுகிறார்.
"அவர்கள் [பெய்ஜிங்] அதிபர் பைடன் அல்லது பென்டகனிடமிருந்து வரும் அழைப்புகளை எடுப்பதில்லை. அமெரிக்க நாடாளுமன்றம் சீனாவை அச்சுறுத்தலாக அறிவித்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.
சீனாவுக்கும் தைவானுக்கும் ஒரே அரசுதான் என்று கூறப்படும் விவகாரத்தில் தனது முந்தைய நிலைப்பாட்டிலேயே அமெரிக்கா இருந்து வருகிறது. அது 1979ல் இருந்து அந்த அரசாங்கத்துடன் உத்தியோகபூர்வ உறவுகளைப் பேணி வருகிறது, தைவானுடன் அல்ல. ஆனால், தைபேயுடன் உறுதியான நட்பு நாடாக இருந்து, தீவைத் தற்காத்துக் கொள்வதற்கும் அமெரிக்கா உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், கடந்த 40 வருடங்களாக தைவான் ஜலசந்தியில் அமைதியை நிலைநாட்ட உதவிய தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சீனா இப்போது நம்புகிறது.
"தைவானை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை என்றும், தைவானை சீனாவிலிருந்து பிரிப்பதை ஆதரிக்கவில்லை என்றும் ஜி ஜின்பிங்கிடம் அதிபர் பிடன் கூறினார்" என்று கிளேசர் குறிப்பிடுகிறார்.
ஆனால், தைவான் தலைவர்களுடான அரசு பயணங்கள் அல்லது அதிகாரப்பூர்வ சந்திப்புகள் ஆகியவற்றின் பின்னணியில் இத்தகைய உறுதிமொழிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தைவான் அதிபர் சாயின் கலிஃபோர்னிய பயணம், முன்னாள் அதிபர் மாவின் சீன பயணத்துக்கு மத்தியில் தைவானுக்கு தேவைப்படுவது, அமெரிக்காவின் அழைப்புகளை அவர் ஏற்கவேண்டும் என்பதே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












