அரபு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திடீர் முடிவு - என்ன காரணம்? இதனால் இந்தியாவுக்கு பாதிப்பா?

கச்சா எண்ணெய் உற்பத்தி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

செளதி அரேபியா, இராக், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் திடீரென எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.

செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைக்கிறது.

இராக் உற்பத்தியை 2,11,000 பீப்பாய்கள் குறைக்கிறது.

உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

உலகின் பல பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் திடீரென எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு 5 டாலர்கள் வரை உயர்ந்தது. அதாவது, சுமார் 7 சதவிகித அதிகரிப்புடன் பீப்பாய் ஒன்றின் விலை 85 டாலர்களை எட்டியது.

செளதி அரேபியா, இராக் மற்றும் பல வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு பத்து லட்சம் பீப்பாய்கள் வரை குறைக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன. இந்த அறிவிப்பால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுத்தபோது, கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை எட்டியிருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை போர் தொடங்கும் முன் இருந்த நிலையை அடைந்துள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் கடந்த ஆண்டு உலக அளவில் விலைவாசி அதிகரித்தது. எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் சாமானிய மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமாகிவிட்டது.

அதே நேரத்தில் எண்ணெய் விலை குறைவாக இருக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்குமாறு எண்ணெய் உற்பத்தியாளர்களிடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது. "சந்தையில் தற்போது நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு உற்பத்தி குறைப்பு பொருத்தமானது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். இதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்." என்று எண்ணெய் உற்பத்தி குறைப்பு அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அமீன் நாசிர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, அமீன் நாசிர்

எண்ணெய் விலை அதிகரித்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது கடினம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயரும் பட்சத்தில், போக்குவரத்துச் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

OPEC உடன் தொடர்புடைய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை வெட்டுக்களை அறிவித்துள்ளன. ரஷ்யா ஏற்கனவே தனது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைத்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியில் இந்த குறைப்பு OPEC பிளஸ் உறுப்பு நாடுகளால் செய்யப்பட்டுள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 சதவிகிதம், OPEC குழும நாடுகளால் செய்யப்படுகிறது.

செளதி அரேபியா ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்களை குறைக்கப் போகிறது. இராக் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் பீப்பாய்களை குறைக்கும். இது தவிர ஐக்கிய அரபு ஆமீரகம், ஓமன், குவைத், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் உற்பத்தியை குறைக்கப் போகின்றன.

எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி சேவையான அரப் நியூஸ் தெரிவிக்கிறது.

மறுபுறம், குவைத்தின் எண்ணெய் அமைச்சர் பத்ர் அல் முல்லாவும் ஒரு அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை அதிகரித்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது கடினம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கச்சா எண்ணெய் விலை உயரும் பட்சத்தில், போக்குவரத்துச் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

OPEC உடன் தொடர்புடைய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை வெட்டுக்களை அறிவித்துள்ளன. ரஷ்யா ஏற்கனவே தனது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைத்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியில் இந்த குறைப்பு OPEC பிளஸ் உறுப்பு நாடுகளால் செய்யப்பட்டுள்ளது. உலகின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 சதவிகிதம், OPEC குழும நாடுகளால் செய்யப்படுகிறது.

செளதி அரேபியா ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்களை குறைக்கப் போகிறது. இராக் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 11 ஆயிரம் பீப்பாய்களை குறைக்கும். இது தவிர ஐக்கிய அரபு ஆமீரகம், ஓமன், குவைத், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் உற்பத்தியை குறைக்கப் போகின்றன.

எண்ணெய் சந்தையின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செளதி அரேபியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என்று செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ செய்தி சேவையான அரப் நியூஸ் தெரிவிக்கிறது.

மறுபுறம், குவைத்தின் எண்ணெய் அமைச்சர் பத்ர் அல் முல்லாவும் ஒரு அறிக்கையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"சந்தை நிலையற்றதாக உள்ளது. உலக சந்தையில் தேவைக்கு அதிகமான எண்ணெய் கிடைப்பதாலும் எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் பிளஸ் ஒப்புக் கொண்டுள்ளது" என்று ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

யுக்ரேன் போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வங்கி நெருக்கடிக்கு மத்தியில், உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டால், அதன் காரணமாக எண்ணெய் பயன்பாடு குறையக்கூடும்.

சர்வதேசப் பொருளாதாரத்தின் மீதான மந்தநிலையின் அச்சத்தைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் விலையை நிலையானதாக வைத்திருக்க எண்ணெய் உற்பத்தி நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

" ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய்க்கு 80 டாலராக ஆகியிருக்கும் நேரத்தில், முன்னெச்சரிக்கை அல்லது இழப்பை நிறுத்துதல் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்வது எளிதானது அல்ல. கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது,” என்று எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான Vanda Insights இன் நிறுவனர் வந்தனா ஹரி, செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் கூறினார்,

அரபு நாடுகள் ஏன் உற்பத்தியை குறைக்கின்றன?

எண்ணெய்

பட மூலாதாரம், Getty Images

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூறுகின்றன. இருப்பினும், இதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"ஒரு நாளைக்கு சுமார் 16 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி குறைக்கப்படும். இது மே முதல் செயல்படுத்தப்படும்." என்று பிரபல எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா கூறினார்.

அமெரிக்காவின் செயல் உத்தி இருப்பு (அவசரகால நிலைமைகளுக்கான எண்ணெய் இருப்பு) மிகக் குறைந்த அளவில் இருக்கும் நேரத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது இருப்பை நிரப்ப அதிக அளவு எண்ணெய் வாங்க வேண்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அமெரிக்கா மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும். அமெரிக்க பொருளாதாரம் ஏற்கனவே மந்தநிலையின் அதிர்வுகளை சந்தித்து வருகிறது. இப்போது எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால் அமெரிக்கா அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

"இப்போது நாங்களே விலையை முடிவு செய்து உற்பத்தியை நிர்ணயம் செய்வோம். யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்பதை எண்ணெய் உற்பத்தி நாடுகள் காட்டுகின்றன. முன்பு அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் செளதி அரேபியா இருந்தது. ஆனால் எண்ணெய் விஷயத்தில் நாங்கள்தான் முடிவெடுப்போம் என்ற சிமிஞ்சையை செளதி அரேபியா அமெரிக்காவுக்கு கொடுப்பதுபோல காணப்படுகிறது,” என்று நரேந்திர தனேஜா கூறினார்.

மாறிவரும் உலகின் எண்ணெய் அமைப்புமுறை

உலகின் எண்ணெய் அமைப்புமுறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளையும் இந்த புதிய நிகழ்வுகளில் ஆய்வாளர்கள் காண்கிறார்கள்.

"யுக்ரேன் போருக்குப் பிறகு சர்வதேச எண்ணெய் அமைப்புமுறை நிலையற்றதாக ஆகியுள்ளது. போருக்கு முன்பு, எண்ணெய் அமைப்பு மற்றும் சந்தை நிலையானதாக இருந்தது. ஆனால் யுக்ரேன் போருக்குப் பிறகு எண்ணெய், ஆயுதம் போல பயம்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெயை தடை செய்துள்ளன. ரஷ்யா தனது எண்ணெயின் விலையைக் குறைத்தபோது, அதை ஐரோப்பிய சந்தையில் விற்கக் கூடாது என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் அதன் கொள்முதலைத் தடை செய்தன. யுக்ரேன் போர் எண்ணெய் அமைப்பை சீர்குலைத்தது. புதிய அமைப்பை உருவாக்க முடியவில்லை."என்று நரேந்திர தனேஜா தெரிவித்தார்.

"செளதி அரேபியா, இராக், குவைத் போன்ற நாடுகள், யாரையும் பொருட்படுத்தாமல் எண்ணெய் உற்பத்தியை குறைத்துவிட்டன. இதை OPEC கூட்டத்திற்கு முன்பே இந்த நாடுகள் அறிவித்தன. மேற்கத்திய நாடுகள் மீது அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றுகூட இந்த நாடுகள் யோசிக்கவே இல்லை. ஒரு நாளைக்கு 16 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தியை குறைப்பது ஒரு புதிய சர்வதேச எண்ணெய் அமைப்புமுறை பிறக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆனால் அதன் வரையறைகள் என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம்." என்றார் அவர்.

”எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் இந்த முடிவுக்குப் பிறகு விலை மேலும் அதிகரித்தால், உலகின் பல பகுதிகளில் விலைவாசி அதிகரிப்பு ஏற்படக்கூடும். ஒருதலைப்பட்சமான வெட்டுக்களை அறிவித்ததன் மூலம் இப்போது யாருடைய அழுத்தத்திலும் தாங்கள் இல்லை என்பதை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்கிறார் தனேஜா.

இந்தியா மீது என்ன தாக்கம்?

எண்ணெய் கப்பல்

பட மூலாதாரம், REUTERS/TATIANA MEEL

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் இந்தியா. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மிகப்பெரிய சந்தை.

"எண்ணெய் உற்பத்தி குறைந்து, எண்ணெய் விலை அதிகரித்தால், அது இந்தியப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்தியாவின் பொருளாதாரம் எண்ணெயை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது." என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.

ரஷ்யா மற்றும் செளதி அரேபியாவுடன் இந்தியா சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளது. எனவே எண்ணெய் விலை அதிகரித்தாலும் இந்தியாவுக்கு தொடர்ந்து எண்ணெய் கிடைக்கும்.

யுக்ரேன் போருக்கு முன்பு ரஷ்யாவிடம் இருந்து இரண்டு சதவிகித எண்ணெயை மட்டுமே வாங்கிய இந்தியா, தற்போது ரஷ்யாவிடம் இருந்து 27 சதவிகித எண்ணெயை வாங்குகிறது. ரஷ்யாவுடன் இந்தியா, வரலாற்று உறவுகளையும் கொண்டுள்ளது.

ஆனால் இந்த மாற்றத்தின் பின்னணியில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை விட தேவைகள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு ரஷ்யாவுக்கு புதிய சந்தை தேவைப்பட்டது. இந்தியாவுக்கு மலிவான எண்ணெய் தேவைப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், எண்ணெய் வணிகம் இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கிறது. சர்வதேச சந்தையை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு மலிவான எண்ணெய் கிடைத்தது. இது தவிர ரஷ்யா இந்த எண்ணெயை இந்தியாவின் துறைமுகங்களுக்குக் கொண்டு சேர்த்தது. பணம் செலுத்துவதிலும் இந்தியாவுக்கு ரஷ்யாவிடமிருந்து நிவாரணம் கிடைத்தது. அதிகரித்து வரும் எண்ணெய் விலையால் இந்தியப் பொருளாதாரம் திணறிக் கொண்டிருந்தது. ரஷ்யாவிடமிருந்து கிடைத்த மலிவான எண்ணெயால் இந்தியா நிச்சயமாக நிம்மதி அடைந்தது," என்கிறார் தனேஜா.

இந்தியாவுக்கு தேவை இருப்பதால், மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தையும் புறக்கணித்து அது ரஷ்ய எண்ணெயை வாங்கிவருகிறது. இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் எண்ணெய் எவ்வளவு காலம் கிடைக்கும் என்பது இந்தியாவின் முன் உள்ள பெரிய கேள்வி.

"இந்தியாவைத் தவிர, உலகின் பல நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்குகின்றன. உலக நாடுகளில் 80% எண்ணெய் இறக்குமதி செய்கின்றன. துருக்கி, பாகிஸ்தான், மொராக்கோ போன்ற நாடுகள் இப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை வாங்குகின்றன. ரஷ்யாவின் சந்தை வளர்ந்து வருவதால், இந்தியாவுக்குக் கிடைக்கும் சலுகைகள் குறையும்,” என்று தனேஜா குறிப்பிட்டார்.

எண்ணெய் விலை உயருமா?

எதிர்காலத்தில் எண்ணெய் விலை என்னவாக இருக்கும் என்று சொல்வது கடினம். எண்ணெய் விலை பல காரணிகளைப் பொருத்தது. இந்த நிலையில் உற்பத்தியை குறைத்தால் அடுத்த சில மாதங்களில் எண்ணெய் விலை கணிசமான அளவு அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படி நடக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"அடுத்த மூன்று மாதங்களில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 முதல் 90 டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடலாம். எண்ணெய் 90 டாலரை எட்டினால், இந்தியா போன்ற பொருளாதாரம் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். ஆனால் அதை சமாளிக்க முடியும். அதைத்தாண்டி எண்ணெய் விலை உயர்ந்தால் பிரச்சனை வரலாம்,” என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.

மறுபுறம் கச்சா எண்ணெயை பீப்பாய்க்கு 80 டாலர்கள் என்ற விலைக்குக் கீழே விற்பது லாபகரமானது அல்ல என்று செளதி அரேபியா போன்ற எண்ணெய் உற்பத்தியாளர்கள் வாதிடுகின்றனர். எனவே தேவை மற்றும் விநியோகத்தை சமப்படுத்த அந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கின்றன.

"எதிர்காலத்தில் யுக்ரேன் போர் கைமீறிப்போனால் அல்லது கொரோனா தொற்றுநோய் மீண்டும் திரும்பினால் அல்லது சீனாவின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்தால், இது போன்ற ஏதாவது நடந்தால், எண்ணெய் விலை மேலும் உயரலாம். இதுபோல பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றால் குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்களுக்கு எண்ணெய் விலை அதிகம் உயராது. இந்திய நுகர்வோரும் எண்ணெய் விலை அதிகரிப்பால் சிரமப்பட வாய்ப்பில்லை,”என்று நரேந்திர தனேஜா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: