அருணாச்சல பிரதேச மாநிலத்தில் புதிய பெயர்களை சூட்டிய சீனா: நிராகரித்த இந்தியா

பட மூலாதாரம், Getty Images
அருணாச்சல பிரதேசத்தின் மீது நீண்டகாலமாக உரிமைக்கோரி வரும் சீனா, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டி அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பை தற்போது இந்தியா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி இன்று கூறுகையில், ”அருணாச்சல பிரதேச மாநிலம் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மற்றும் இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இமயமலையை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நீண்டகாலமாக பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இந்த எல்லை பகுதியில் இருக்கும் 11 இடங்களுக்குதான் சீனா புதியதாக பெயர்களை அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பிற்கு பின்னர், தற்போது இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அதை இந்தியா முற்றிலும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இந்த நிராகரிப்பிற்கு சீனா இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
இந்தியாவும், சீனாவும் மிக நீளமான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியை தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றன. சுமார் 3440கிமீ தூரத்திற்கு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான அந்த எல்லைப்பகுதிகள் நீள்கின்றன. இந்தப் பகுதியை மெய்யான கட்டுப்பாட்டு கோடு என குறிப்பிடுகின்றனர். அதேசமயம் இந்த எல்லைப்பகுதியானது மிக மோசமான வகையில் வரையறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் இவற்றுக்கு இடையில் ஆறுகள், குளங்கள் மற்றும் பனி படலங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக அந்த எல்லை கோடுகளில் அவ்வபோது மாற்றங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தின் முழுப் பகுதியையும் சீனா உரிமை கோருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா ‘தெற்கு திபெத்’ (South Tibet) என அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரும் இரு ராணுவப்படைகள், இந்த எல்லை பிரச்னைகளின் காரணமாக, பலமுறை நேருக்கு நேர் மோத வேண்டிய சூழல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடைசியாக டிசம்பர் மாதத்தில், தவாங் நகரத்தில் இரு நாட்டின் ராணுவப் படைகளும் மோதி கொண்டன.
அதேபோல், எல்லைப்பகுதி இடங்களுக்கு சீனா இதுபோன்று புதிதாக பெயர்களை அறிவிப்பது முதல்முறை அல்ல. ஏற்கனவே சிலமுறை இதுபோன்ற செயல்களில் சீனா ஈடுபட்டுள்ளது அது இந்தியாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி, சீனாவின் உள்நாட்டு விவகாரத் துறை அமைச்சகம், “தெற்கு திபெத்தில் (அருணாச்சல பிரதேசம்) உள்ள இடங்களின் பெயர்களை மாற்றியதன்" மூலம் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமான இடாநகர் பகுதியை ஒட்டியுள்ள மலை, ஆறு மற்றும் மக்கள் வசிப்பிட பகுதிகளும் அந்த 'பெயர் மாற்றப்பட்ட இடங்களுக்குள்' வருகின்றன.
இந்தியாவின் வடகிழக்கு மாநில பகுதிகளில், சீனாவால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என இந்தியா அறிவித்துள்ளது.
”இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சீனாவிற்கு முதல் முறை அல்ல. ஆனால் அதேசமயம் சீனாவின் இந்த செயல்களை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது” என்று அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
”அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். புதிய பெயர்களை சூட்டும் முயற்சிகளின் மூலம் சீனாவால் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு தலாய் லாமா வருகை புரிந்ததற்கு, "பதிலடி கொடுக்கும் விதமாக", அருணாச்சல பிரதேசத்தின் 6 மாவட்டங்களுக்கு சீனா புதியதாக பெயர்களை அறிவித்தது. திபெத்தியர்களின் மத குருவாக கருதப்படும் தலாய் லாமா, இந்தியாவிற்கு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வருகை புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு, இரண்டாம் முறையாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் மற்றொரு 15 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியது சீனா. ஆனால் சீன அரசின் இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா கடுமையான மறுப்புகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












