தவாங்: 1962-இல் சீனா ஆக்கிரமித்த இந்தியப் பகுதியின் இப்போதைய நிலை என்ன?

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தவாங் மடாலயத்தில் விளையாடும் உள்ளூர் குழந்தைகள்
    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"அது தவாங்கில் நெல் அறுவடை நேரம். அவர்கள் இரவும் பகலும் நாலாபுறத்தில் இருந்தும் தாக்கியவாறு தவாங்கிற்கு வந்ததும் மக்கள் இங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்."

அப்போது தூதான் செவாங்கிற்கு 11வயதுதான். ஆனால் தனது கண்களால் பார்த்த பல போர் சம்பவங்களை இன்னும் தெளிவாக அவர் நினைவில் வைத்திருக்கிறார்.

அது 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள வடகிழக்கு எல்லை ஏஜென்சி (இன்றைய அருணாச்சல பிரதேசம்) பகுதியில் சீனா திடீரென தாக்குதல் நடத்தியது. சில பகுதிகளில் பலத்த பதிலடிக்கு பிறகும் இந்திய ராணுவத்தால் சீன ராணுவத்தின் முன் நிற்க முடியாத அளவுக்கு தாக்குதல் கடுமையாக இருந்தது.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தூதான் செவாங் தனது இளமைக்கால படத்துடன்.

எல்லையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள தவாங், விரைவில் சீன ஆக்கிரமிப்பின் கீழ் வந்து அடுத்த ஒரு மாதத்திற்கு சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது.

அறுபது வருடங்கள் கடந்து அந்தப் போரின் நினைவுகள் மறைந்தாலும் அதன் நிழல் இப்பகுதி மக்களின் மனதில் இன்னும் இருக்கிறது.

தூதான் செவாங் வளர்ந்து இந்தியாவில் ஒரு துணை ராணுவ வீரராக ஆனார் மற்றும் 28 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

போரின் போது மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை இன்னமும் தன்னால் மறக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, Caption- 1962 போரில் பயன்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள்

'போர் ஒரு கெட்டகனவு போல் இருந்தது'

"இந்தப் பகுதியில் சாலைகள் இல்லை. மக்கள் காடுகளின் வழியாக இரவும் பகலும் நடந்தே பாதுகாப்பான தாழ்வான பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் கோவேறு கழுதைகளின் மேல் உணவுப்பொருட்களை எடுத்துச் சென்றனர். இது ஒரு கெட்டகனவு போல் இருந்தது." என்று தூதான் செவாங் கூறினார்.

1962-ம் ஆண்டு நடந்த போரை தங்கள் கண்களால் பார்த்த பல பெரியவர்களிடம் பேசி ஒரு புத்தகம் எழுதினார் தவாங்கில் வசிக்கும் நவாங் சோட்டா.

"எல்லோரும் தங்கள் உயிரை நேசித்தார்கள். மக்கள் தங்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான இடத்திற்கு ஓட விரும்பினர்.அப்போது இங்கே வாகனங்கள் இல்லை. நடந்து சென்றாலும் எவ்வளவு தூரம்தான் செல்லமுடியும்," என்று அவர் வினவினார்.

1962 ஆம் ஆண்டு லோப்சாங் செரிங்கிற்கு 11 வயது. சீனத் தாக்குதலுக்குப் பிறகு பெற்றோர் தன்னை அசாமுக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறுகிறார். போர் முடிந்த பின்னரே அவர் தவாங்கிற்கு திரும்ப முடிந்தது.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தனது புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும் நவாங் சோட்டா

சுமார் ஒரு மாதம் கழித்து நவம்பரில் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்து தனது ராணுவத்தை விலக்கிக்கொண்டது. ஆனால் பலரால் இதை நம்ப முடியவில்லை.

​​“சீன ராணுவம் திரும்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. சிலர் இதை பொய் என்று சொல்லத் தொடங்கினர். ஏனெனில் சீனா போரில் வெற்றி பெற்ற பிறகு ஏன் பின்வாங்க வேண்டும் என்று மக்கள் நினைக்கத்தொடங்கினர். ஒரு வேளை இந்தியா தங்களிடம் பொய் சொல்கிறது என்று சிலர் சந்தேகித்தனர். தாங்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அப்படி எதுவும் இல்லை என்று உறுதி அளித்ததும், அவர்கள் திரும்பி வந்தனர்,” என்று தவாங்கில் வசிக்கும் லஹாம் நோர்பு கூறினார்.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, ரிஞ்சின் டோர்ஜே

போரின் பயங்கரமான நினைவுகள்

தவாங்கில் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடியவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு திரும்பி வரும்போது ​​வழியில் பல திகிலூட்டும் காட்சிகளைக் கண்டனர்.

ரிஞ்சின் டோர்ஜே அந்தக் காட்சிகளை நினைத்து இன்னும் நடுங்குகிறார். “நாங்கள் திரும்பி வரும்போது சீன ராணுவம் இந்திய வீரர்களின் உடல்களை தெருக்களில் போட்டதைக் கண்டோம்” என்கிறார்.

லாம் நோர்புவாலும் இன்றுவரை அந்தக் காட்சியை மறக்க முடியவில்லை. "சீன ராணுவம் தனது வீரர்களின் உடல்களை வாகனங்களில் எடுத்துச் சென்றது. இந்திய வீரர்களின் உடல்களை காடுகளில் இருந்து அகற்றி சாலைகளில் வைத்தனர். போரில் பலர் இறந்தனர்" என்கிறார் அவர்.

அந்த நேரத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர்களின் உதவியைப் பெற சீன ராணுவம் கடுமையாக முயற்சித்தது என்று நவாங் சோட்டா குறிப்பிட்டார்.

"இது குறித்து எனது பெரியவர்களிடம் பேசியபோது, ​​சீன ராணுவத்தால் இங்குள்ள மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியவில்லை என்றும், அவர்களிடம் இருந்து சிறிய அளவு உதவி கூடக் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள்,” என்று நவாங் சோட்டா மேலும் கூறினார்.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தவாங் சந்தை

தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் தவாங்

தவாங் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் பகுதி ஆகும். இது கடந்த பல ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் உள்ளது.

பெளத்த மதத்தின் மையமாக இருப்பதுடன், 14வது தலாய் லாமாவான டென்சின் கியாட்ஸோவுடன் சிறப்பான உறவைக் கொண்டுள்ள இடம் இது.

1959 இல் திபெத்தை விட்டு வெளியேறிய பிறகு 14 வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, தவாங் மடாலயத்தில் சில காலம் வாழ்ந்தார்.

தவாங் என்பது 1962-இல் நடந்த இந்திய-சீன போரின் போது சுமார் ஒரு மாத காலம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி.

இந்த பகுதிதான் இரு நாடுகளுக்கு இடையே இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தவாங்கின் யாங்சே பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது இந்த சர்ச்சையின் ஒரு காட்சி புலப்பட்டது.

சீன ராணுவம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) அத்துமீறி நுழைந்து தற்போதைய நிலையை மாற்ற முயன்றதாக இந்தியா அப்போது கூறியது.

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் தடுத்தது. சீன ராணவத்தை தங்கள் நிலைக்கு பின்வாங்க வைத்தது என்று இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்தப் பகுதியில் இது முதல் மோதல் அல்ல. 2021 அக்டோபரிலும், இரு நாட்டுப் படைகளும் யாங்சேயில் நேருக்கு நேர் மோதின.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, பும்-லா கணவாய்

'மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு' பயணம்

தற்போதைய மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு தவாங் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பும்-லா கணவாயின் வளைந்த சாலைகள் வழியாக சென்றால் மட்டுமே எல்ஏசியை அடைய முடியும்.

பும்-லா கணவாய் வழியாக செல்லும் போது, ​​பதினைந்தாயிரம் அடி உயரத்தில் உள்ள காற்றில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது.

இதனுடன், குறைந்த தட்பநிலை காரணமாக நீர் உறைந்திருக்கும் பல இயற்கை ஏரிகள் காணப்படுகின்றன.

இதே இடத்தில்தான் 1962-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரின் போது பல சண்டைகள் நடந்துள்ளன.

அந்த சண்டைகளின் சில அடையாளங்கள் இன்னும் இந்தப் பகுதியில் காணப்படுகின்றன.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, 1962 போரில் பயன்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள்

இந்திய ராணுவம் சாலையோரத்தில் எந்த பதுங்கு குழிகளில் மறைந்திருந்து சீன ராணவத்தை எதிர்கொண்டதோ, அந்த பதுங்கு குழிகள் இன்னும் அங்கே காணப்படுகின்றன.

இந்த பதுங்கு குழிகள் இன்று காலியாக உள்ளன, ஆனால் LAC க்கு அருகில் உள்ள பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ஒரு பெரிய இருப்பைக் காண முடிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே சில காலமாக நிலவி வரும் பதற்றத்தை கருத்தில்கொண்டு பார்க்கும்போது இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ராணவ வீரர்கள் அங்கு உள்ளபோதிலும் ஒவ்வொரு நாளும் டஜன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்று தவாங்கிலிருந்து LAC க்கு பயணிக்கின்றனர்.

பம்-லா கணவாய் வழியாக சுற்றுலாப் பயணிகளை எல்ஏசிக்கு அழைத்துச் செல்வது தவாங்கில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாகும்.

தவாங் போர் நினைவுச்சின்னம்

இந்தப் போரின்போது கமெங் செக்டாரில் 2,420 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவாங்கில் போர் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

1959 ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து தப்பி ஓடிய 14 வது தலாய் லாமா இந்தியாவில் காணப்பட்ட புகைப்படமும், இங்கு வைக்கப்பட்டுள்ள சில அரிய புகைப்படங்களில் அடங்கும்.

இந்த நினைவுச்சின்னத்தில் வைக்கப்பட்டுள்ள போர் படங்கள், ஆயுதங்கள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள், 1962 இன் பயங்கரமான நினைவுகளை இன்னும் பசுமையாக வைத்திருக்கின்றன.

"எதிரியின் இனிமையான வார்த்தைகளை நம்பக்கூடாது என்பது எங்களுக்கு ஒரு பெரிய பாடம் என்பதால், அந்த சம்பவத்தை நாங்கள் மறக்கவில்லை. நாங்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்," என்று நவாங் சோட்டா கூறுகிறார்.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தவாங்

'கஃபே 62'

1962 போரின் நினைவுகள் மங்கியிருக்கலாம். ஆனால் அவை மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

தவாங்கிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள ஜங் என்ற சிறிய நகரத்தில் இதுபோன்ற ஒரு உதாரணத்தைப் பார்த்தோம்.

21 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபிறகு ரிஞ்சின் ட்ரெமா ​​ஒரு ஓட்டலைத் திறந்தார்....அதன் பெயர் 'கஃபே 62'.

1962-ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின்போது அந்த நபர்களால் எங்கள் பெரியோர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். அதன் நினைவாக ஓட்டலுக்கு இந்தப்பெயரை சூட்டியுள்ளேன் என்கிறார் ரிஞ்சின் ட்ரேமா.

'கஃபே 62' மூலம், 1962 போரின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார் ரிஞ்சின் ட்ரேமா.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, டென்சின் டார்கே

'எல்லை மோதல் புதிதல்ல'

இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே எல்லை மோதல்கள் ஏற்படுவது சாதாரண விஷயமாகி விட்டது என்று தவாங் நகர மக்கள் கூறுகிறார்கள்.

டிசம்பர் மோதலுக்குப் பிறகும் தவாங்கில் பயமோ பதற்றமோ இல்லை. ஆனால் வணிகம் நிச்சயமாகப் பாதிக்கப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கர்மு, தவாங்கின் சந்தையில் துணிக்கடை நடத்தி வருகிறார். "உள்ளூர் மக்களாகிய எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஊடகங்களில் செய்தி வந்த பிறகுதான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஊடகங்களில் வரும் கூக்குரல்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது,” என்று அவர் கூறினார்.

தவாங் சந்தையில் பரிசுப்பொருட்கள் கடை நடத்தி வரும் டென்சின் டார்கே, எல்லையில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் தவாங் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று வலியுறுத்துகிறார்.

"இங்கு வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. எல்லையில் மோதல்கள் நடந்ததாக செய்திகள் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். இங்கு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். பெரிய மாற்றம் ஏதும் இல்லை" என்கிறார் அவர்.

தவாங் - எல்லை பகுதி
படக்குறிப்பு, தவாங்

1962-இல் இருந்ததைக்காட்டிலும் இப்போது எந்த சூழலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக தவாங்கில் உள்ள பலர் கருதுகின்றனர். 1962-இல் இருந்த இந்திய ராணுவத்துக்கும், இன்றைய இந்திய ராணுவத்துக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்த பகுதி முழுவதும் சாலைகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இந்திய ராணுவம் எல்லைக்கு மிக விரைவாக வீரர்கள் மற்றும் தளவாடங்களை கொண்டுசெல்லும் நிலைக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறுகிறார். .

"தவாங்கின் எந்த உள்ளூர் மக்களிடம் நீங்கள் பேசினாலும், ’இந்திய ராணுவம் இருக்கவே இருக்கிறது, தேவை ஏற்பட்டால், நாங்களும் அதற்குப் பின்னால் நிற்கிறோம்’ என்றுதான் சொல்வார்கள்,” என்று நவாங் சோட்டா கூறுகிறார்,

ஆனால் சீனாவைப் பொருத்தவரை கவனமாக இருப்பதுதான் நல்லது என்று சிலர் கூறுகிறார்கள்.

"அவர்கள் (சீனா) தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பகலில் கூட்டங்களை நடத்துகிறார்கள், இரவில் தாக்குகிறார்கள். அதனால் நாம் எப்போதும் கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும். அவர்களைச் சிறிதளவும் நம்ப முடியாது."என்று துதான் செவாங் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: