பாலகோட் தாக்குதலில் அபிநந்தன் விமானம் வீழ்த்தப்பட்டது எப்படி? நேரில் கண்டவர்களின் வாக்குமூலம்

அபிநந்தன்

பட மூலாதாரம், ISPR HANDOUT

    • எழுதியவர், ஷுமைலா ஜாஃப்ரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிப்ரவரி 27, 2019 அன்று முகமது ரசாக் சௌத்ரி தனது வீட்டின் முன்பாகக் கட்டிலில் அமர்ந்து, சிறிய நகரமான ஹவுராவில் இருக்கும் தனது உறவினருடன் தொலைபேசியில் பேசுகிறார்.

இந்த நகரம் பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் சம்ஹானி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது.

ரசாக்கின் வீடு ஒரு சிறிய குன்றின் மீது உள்ளது.

“நிலைமை மிகவும் தீவிரமானது” என அன்றைய நிகழ்வுகளை ரசாக் நினைவுகூர்ந்தார்.

அதற்கு முந்தைய நாள், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் என்ற பகுதியில் குண்டுகளை வீசியது. இந்தப் பகுதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது.

“இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காலை 10 மணியளவில் இரண்டு பெரிய வெடிச்சத்தம் கேட்டது.”

ஏதோ நடந்துவிட்டதைப் போல ஒரு கணம் தனது செயல்களை நிறுத்தியவர் மீண்டும் ஃபோனில் பேசத் தொடங்கினார்.

“சிறிது நேரத்தில் வானத்தில் புகை போல எழுந்தது. அது வேகமாகக் கிழே வந்துகொண்டிருந்தது. அருகில் வந்தபோது ஒரு பெரிய நெருப்புக் கட்டியைப் போல் இருந்ததைக் கண்டோம்,” என்கிறார் ரசாக்.

அருகில் வந்து பார்த்த ரசாக், அதுவொரு விமானத்தின் துண்டு என்பதை உணர்ந்தார்.

ரசாக் இருந்த இடத்திலிருந்து ஒரு கி.மீ தொலைவில் விமானம் தீப்பிடித்து நொறுங்கியது. அது பாகிஸ்தான் விமானமா அல்லது இந்திய விமானமா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று ரசாக் கூறினார்.

முகமது ரசாக்
படக்குறிப்பு, முகமது ரசாக்

மறுபுறம், பாராசூட்டுடன் ஒரு நபர் மலையில் தரை இறங்குவதை ரசாக் பார்த்தார். அவர் இருந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அந்த நபர் பாராசூட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்.

ரசாக் உடனடியாக அப்துல் ரஹ்மானை அவரது வீட்டிலிருந்து அழைத்து, அதைப் போய்ப் பார்க்கச் சொன்னார்.

அப்துல் ரஹ்மான் பாராசூட்டை ஏற்கெனவே பார்த்ததாகக் கூறினார்.

கீழே இறங்கியது பாகிஸ்தான் வீரராக இருக்கலாம் என எண்ணி, ஒரு குடத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி ஓடினார்.

“அந்த பாராசூட் எங்கள் வீட்டின் முன்பு இருந்த மலையிலுள்ள மரத்தின் மீது விழ இருந்தது. ஆனால் அவர் (இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்) சாமர்த்தியமாகத் திசையை மாற்றி மலையின் ஒரு சமதளமான இடத்தில் தரையிறங்கினார்,” என்று அப்துல் ரஹ்மான் கூறினார்.

அபிநந்தன் பறந்த விமானத்தின் துண்டு
படக்குறிப்பு, அபிநந்தன் பறந்த விமானத்தின் துண்டு

பாராசூட்டில் இந்தியக் கொடியைப் பார்த்ததாகவும் வேகமாக அவரிடம் சென்றதாகவும் அப்துல் கூறினார்.

“அபிநந்தன் என்னைப் பார்த்தார். அப்போதும் அவருடைய உடலைச் சுற்றி பாராசூட் இருந்தது. பாக்கெட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கிக் காட்டியபடி, ‘இது இந்தியாவா பாகிஸ்தானா?’ என்று கேட்டார். நான் பாகிஸ்தான் என்றேன்.

பிறகு, ‘இது எந்த ஏரியா?’ என்று கேட்டார். கிலா என்று என் வாய்க்கு வந்ததைச் சொன்னேன். உடனே தரையில் அமர்ந்தார். துப்பாக்கியை வயிற்றில் வைத்துக்கொண்டு இரு கைகளையும் உயர்த்தி ‘ஜெய்ஹிந்த் காளி மாதாகி ஜெய்’ என்று கத்தினார். அவர் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாக விளக்கியதோடு தண்ணீரை கொடுக்கச் சொன்னார்,” என்று கூறினார் அப்துல் ரஹ்மான்.

அபிநந்தன்

இதற்கிடையில், கிராம மக்கள் அப்பகுதியில் கூட்டம் சேரத் தொடங்கினர் என்று ரஹ்மான் கூறினார். அவர்களில் சிலர் “பாகிஸ்தான் கா மத்லப் கியா-லா இலாஹா இல்லல்லாஹ், பாக் ஃபவுஸ் ஜிந்தாபாத்” என்று கோஷங்களை எழுப்பினார்கள் என்கிறார் ரஹ்மான்.

அபிநந்தன் பதறினார். ஒரு கையில் கைத்துப்பாக்கியைப் பிடித்தபடி, மறு கையால் கால் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய காகிதத்தை எடுத்தார். அதை மென்று விழுங்கினார்.

இன்னொரு பெரிய காகிதம் இருந்தது. அவரால் அதை விழுங்க முடியவில்லை. அதைச் சிறு துண்டுகளாகக் கிழித்தார்,” என்றார் ரஹ்மான், அதன் பிறகு, அபிநந்தன் மலையில் இருந்து கீழ்நோக்கி ஓடத் தொங்கியதாக விளக்கினார்.

“நான் அவரைப் பிடிக்க விரும்பினேன். ஆனால், அவரிடம் ஆயுதம் இருந்தது. அதனால் திரும்பி ஓடினேன். என்னுடன் சில கிராம மக்களும் வந்தார்கள்,” என்றார்.

அபிநந்தன்

அபிநந்தன் முதலில் மண் சாலையில் ஓடியதாகவும் சிறிது நேரத்தில் திசை மாறி புகை வந்த திசையை நோக்கிச் செல்ல முயன்றதாகவும் ரஹ்மான் கூறினார்.

“விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து புகை வருகிறது. கிராம மக்கள் சிலர் அபிநந்தன் மீது கற்களை வீசினார்கள். அவர் ஓடினார். அந்தப் பாதையில் ஒரு சிறிய கால்வாய் வந்தது. அதில் குதித்தார்,” என்று விளக்கினார் ரஹ்மான்.

ரஹ்மான் தனது வீட்டின் அருகே வசித்த முகமது ரஃபீக்கை அழைத்து துப்பாக்கியைக் கொண்டு வருமாறு சொன்னதாகக் கூறினார்.

உடனே வீட்டிற்குச் சென்று துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கால்வாயை நோக்கி ஓடத் தொடங்கியதாக ரஃபீக் கூறினார்.

அப்துல் ரஹ்மான்
படக்குறிப்பு, அப்துல் ரஹ்மான்

“நான் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் இளைஞர்கள் என்னிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கினார்கள். அபிநந்தனை சுட வேண்டாம் என்று கூறியவர் உயிருடன், பத்திரமாகப் பிடிக்க வேண்டும் என்றார். அபிநந்தன் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். அதற்குள் ராணுவம் எங்கள் பகுதிக்கு வந்துவிட்டது.

ராணுவ வீரர்களில் ஒருவரும் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தண்ணீரில் குதித்தார். ‘நாரா-இ-ஹைத்ரி, யா அலி’ என்று கத்திக்கொண்டே அவரைப் பிடித்தார்கள். அப்போது அபிநந்தன் கையில் இருந்த கைத்துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு கைகளை உயர்த்தி சரணடைந்தார். ராணுவ வீரர்கள் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள்,” என்று ரஃபீக் கூறினார்.

அபிநந்தன் பிடிபட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோட்லா என்ற பகுதி உள்ளது. இது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. இங்கு முகமது இஸ்மாயில் பள்ளி நடத்தி வருகிறார்.

பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட அபிநந்தனின் பொருட்கள்
படக்குறிப்பு, பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட அபிநந்தனின் பொருட்கள்

அபிநந்தன் ஓட்டிய விமானத்தின் சிதைவுகள் இந்தப் பகுதியில் விழுந்தது.

பள்ளியில் இருந்து விமானம் காற்றில் சுழல்வதைத் தான் பார்த்ததாக இஸ்மாயில் கூறினார்.

“கடவுள் அருளால் ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தில் தரையிறங்கியது. நான் சென்றபோதும் அது எரிந்துகொண்டிருந்தது. அதில் இன்னும் சில வெடிப்புகள் நடந்துகொண்டிருந்தன. அதில் இந்தியக் கொடி முத்திரை காணப்பட்டது. சில மணிநேரத்திற்கு விமானம் எரிந்துகொண்டிருந்தது,” என்று அவர் விளக்கினார்.

சில வாரங்களுக்கு அந்தத் துண்டுகள் அங்கேயே இருந்ததாகவும் அதற்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவம் வந்து அவற்றை எடுத்துச் சென்றதாகவும் இஸ்மாயில் கூறினார்.

“விமானம் விழுந்த இடத்தில் இன்னமும் ஒரு பள்ளம் உள்ளது. சில இடிபாடுகள் இன்னும் காணப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

இந்தப் பகுதி பல நாட்களாக சுற்றுலா தலத்தைப் போல இருந்ததாகவும் அந்தத் துண்டுகளைக் காண ஏராளமானோர் வந்து சென்றதாகவும் இஸ்மாயில் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: