காதலியிடம் பேசியவரின் இதயத்தை வெட்டி எடுத்த இளைஞர்

பட மூலாதாரம், UGC
ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் செல்போனில் பேசியதற்காக தனது நண்பரையே கொலை செய்துள்ளார். மேலும் இறந்தவரின் உடல் பாகங்களை தனியாக வெட்டியெடுத்து தனது காதலியின் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய இளைஞர் பின்னர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.
ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான அப்துல்லாபூர்மெட்டில் பொறியியல் மாணவர் நவீன் கொலை செய்யப்பட்டது தொடர்பான முதல் தகவல் அறிக்கையின்(FIR) விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதன் நகல் ஹயாத் நகர் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறது?
என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
"கொலை செய்யப்பட்ட நவீன், ஹைதராபாத்தின் தில்சுக் நகரில் உள்ள ஐடியல் ஜூனியர் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிக்கும்போது ஓர் இளம் பெண்ணைக் காதலித்தார். இருவரும் நெருக்கமாக இருந்தனர். வெவ்வேறு இடங்களுக்கு அப்போது சென்று வந்துள்ளனர்.
நவீன் இங்கு படிக்கும்போது அவருடனே ஹரிஹர கிருஷ்ணாவும் படித்து வந்துள்ளார்.
நவீனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஹரிஹர கிருஷ்ணா அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக அவரிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக ஹரிஹரகிருஷ்ணா கூறுகிறார்.
பின்னர், நவீன் அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி ஃபோன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளார். இதனால் நவீனுக்கு எதிராக ஹரிஹரகிருஷ்ணா களமிறங்கி கொலை செய்துள்ளார்."
இவ்வாறு அப்துல்லாபூர்மெட் காவல்துறையினர் ஹயாத் நகர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முதல் தகவல் அறிக்கையின் நகலில் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்துவிட்டு சரணடையும்போது ஹரிஹரகிருஷ்ணா இந்த விஷயங்களை காவல்துறையிடம் தெரிவித்ததாக FIR-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரமாக நடந்த கொலை

பட மூலாதாரம், ANI
பிபிசிக்கு கிடைத்த அந்த முதல் தகவல் அறிக்கையின் நகலில், நெனாவத் நவீன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இன்னும் பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில் ஹரிஹரகிருஷ்ணா நவீனை எவ்வளவு கொடூரமாக கொலை செய்துள்ளார் என விவரிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மதியம், நல்கொண்டா எம்.ஜி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் நவீனை, ஹரிஹரகிருஷ்ணா அழைத்துள்ளார். இருவரும் ஹைதராபாத் எல்.பி நகரில் சந்தித்துள்ளனர்.
"இரவு வெகுநேரமாகிவிட்டது, நான் கல்லூரி விடுதிக்குத்தான் செல்ல வேண்டும்" என நவீன் அவரது நண்பரான ஹரிஹர கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் 'TS 07 JD 0244' என்ற இருசக்கர வாகனத்தில் ஒன்றாகப் புறப்பட்டுள்ளனர்.
பின்னர், பைக்கில் செல்லும்போது பெத்த அம்பர்பேட்டை பகுதியில் உள்ள ரமாதேவி பள்ளிக்கு அருகிலுள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார் ஹரிஹர கிருஷ்ணா. "அங்கு நவீனை நள்ளிரவு 12 மணியளவில் அவர் கொலை செய்துள்ளார்" என்று காவல்துறையினர் FIR-இல் குறிப்பிட்டுள்ளனர்.
'இதயத்தை வெட்டியெடுத்து...'

பட மூலாதாரம், UGC
FIR-இல் கொலையைப் பற்றிய குறிப்புகள் கீழ்காணுமாறு இடம் பெற்றுள்ளன.
"ஹரிஹரகிருஷ்ணா திட்டமிட்டு நவீனை கொலை செய்துள்ளார். முதலில் நவீனின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.
பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து உடலில் இருந்து தலையை வெட்டி எடுத்துள்ளார். உடலின் அந்தரங்க உறுப்புகளை (ஆணுறுப்பு) வெட்டினார்.
நவீனின் உடலில் இருந்து இதயத்தையும் வெட்டி வெளியே எடுத்துள்ளார். அவரது விரல்களைத் தனியாக நறுக்கி வீசிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்."
இந்த வழக்கு குறித்து பிபிசியிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் பேசினார்.
"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரலா ஹரிஹரகிருஷ்ணா, அப்துல்லாபூர்மெட் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை வைத்து இந்த வழக்கிற்குத் தேவையான பல விவரங்களைச் சேகரித்தோம். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகிறோம்," என்று பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
கொலை நடந்த இடத்தில் கையுறைகள்

பட மூலாதாரம், UGC
"நவீனின் இந்தக் கொலை திட்டமிட்டு நடந்திருக்கலாம். கொலை நடந்த இடத்தில் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. மேலும் கையுறைகள், மாஸ்க் போன்றவற்றையும் அங்கிருந்து கைப்பற்றினோம். கத்தியால் குத்துவதற்கு முன்பு கையுறைகளை ஹரிஹர கிருஷ்ணா பயன்படுத்தி இருக்கிறார்.
கொலை நடந்த இடத்தை முன்பே வந்து பார்வையிட்டு ஹரிஹர கிருஷ்ணா தேர்வு செய்துள்ளார். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் தரிசு நிலமாக இருப்பதைப் பார்த்து அதைத் தனக்குச் சாதகமாக்கி இந்த கொலையை அவர் செய்திருக்கலாம்," என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்த படம்

பட மூலாதாரம், Getty Images
நவீனை கொலை செய்து அவரின் உடல் பாகங்களை வெட்டியெடுத்தது மட்டுமின்றி, அதை புகைப்படமாக எடுத்து தனது காதலிக்கு வாட்சாப்பில் ஹரிஹரி கிருஷ்ணா அனுப்பியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
22 வயது இளைஞர் செய்த இந்தக் கொலை தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
"நவீனின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறேன்"
ஹரிஹர கிருஷ்ணாவின் தந்தை பிரபாகர், வாரங்கல் மாவட்டத்திலுள்ள கரிமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நவீனின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். சிவராத்திரி தினத்தன்று ஹரி வாரங்கல் வந்திருந்தார்.
கவலையுடன் இருந்த அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவன் எதுவும் பேசாமல் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றான். இரண்டு நாட்கள் கழித்து அவனின் ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆனது. மீண்டும் 23ஆம் தேதி வாரங்கல்லுக்கு வந்தான்.
எங்கள் இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் நவீன் இறந்து விட்டதாக அவன் சொன்னான். நான் போலீசாரிடம் சரணடையச் சொன்னேன்.
நான் உள்ளூர் காவல்துறையிடம் சரணடையச் சொன்னேன். அவன் ஹைதராபாத் சென்று சரணடைவதாக என்னிடம் சொன்னான். ஒரு பெண்ணால் இருவரின் வாழ்க்கையும் பாழாகிவிட்டது.
ஒருவன் இறந்து விட்டான், மற்றொருவன் சிறைக்குச் சென்றுவிட்டான். நவீனின் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று பேசினார் ஹரிஹர கிருஷ்ணாவின் தந்தை.
ஹரிஹர கிருஷ்ணாவுக்கு தனி அறை
கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹர கிருஷ்ணாவை காவல்துறையினர் சார்லபள்ளி சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டு மற்றவர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பெயர் வெளியிட விரும்பாத சிறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













