விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியை தாக்கி பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

.

விழுப்புரம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி மற்றும் மாணவனைத் தாக்கிவிட்டு, அவர்களிடம் இருந்த செல்பேசி மற்றும் நகைகளை பறித்துச் சென்றதாக, மூன்று இளைஞர்களை விழுப்புரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

இந்த மூவரில் ஒருவர் அம்மாணவியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகவும் அவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை எனவும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

இச்சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அரசுப் பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை நேற்று (பிப். 25) அருகேயுள்ள ஏரிக்கரை பகுதியில் சந்தித்துள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அப்பகுதியிலிருந்த மாணவி மற்றும் மாணவர் இருவரையும் மிரட்டித் தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் மாணவனைக் கடுமையாக தாக்கிவிட்டு, 17 வயது சிறுமியை அந்த மூவரில் ஒருவர் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தெரிவித்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்த இரண்டு செல்பேசிகள், வெள்ளி சங்கிலி, மோதிரம் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை

குறிப்பாக, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரை இழந்து அவரது உறவினர் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார். இதனிடையே இந்த சம்பவத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மாணவி நடந்த விஷயத்தை வீட்டில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் அச்சிறுமியையும் உடன் இருந்த மாணவரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

"கூட்டுப் பாலியல் வல்லுறவு இல்லை"

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கூறுகையில், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மாணவர் இருவருமே 17 வயது உடையவர்கள். இவர்கள் இருவருமே நேற்றிரவு தனியாக ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, அப்பகுதியில் வந்த மூன்று பேர் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, இவர்களிடம் இருந்து செல்பேசி மற்றும் வெள்ளி சங்கிலியைப் பறித்துள்ளனர். மேலும், இந்த மூன்று பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: