தமிழக அரசியல் அரங்கில் அடுத்தடுத்து மாறிய காட்சிகள் - 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில், விஜய் நேற்று (07-05-2026) பதவியேற்பார் என்று தகவல்கள் பரவின. இதனால், தவெக தொண்டர்கள் பலரும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்று காத்திருந்தனர். ஆனால், அரசியல் களமோ எதிர்பார்ப்புக்கு மாறானதாக அமைந்துவிட்டது.
விஜயை பதவியேற்க ஆளுநர் அழைக்காத நிலையில் நேரு உள் விளையாட்டரங்கில் காத்திருந்த பெண்கள் சிலர் கண்ணீருடன் பேசிய வீடியோ ஊடகங்களில் வெளியானது. விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று அக்கட்சித் தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தமிழக அரசியல் அரங்கில் அடுத்தடுத்து மாறிய காட்சிகளால் என்ன ஆனது?

பட மூலாதாரம், Handout
ஆளுநர் கூறியது என்ன?
இதையடுத்து மீண்டும் நேற்று (மே 7) காலை மீண்டும் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்தார்.
பொறுப்பு ஆளுநரை சந்தித்துவிட்டு விஜய் சென்ற சில மணி நேரத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், "தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜயை இன்று (மே 7) அழைத்தார். இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைப்பதற்கு அவசியமான, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என்று ஆளுநர் விளக்கினார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்கள் பொறுப்பு ஆளுநரை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டனர்.
சென்னையில் நேற்று (மே 7) செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "பாஜகவும் அமித் ஷா- மோதி ஆகியோரும் தமிழ்நாடு அரசியலில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகின்றனர். தவெக தனிப்பெரும் கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அவரை பதவியேற்க அனுமதிக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டும் வழிகாட்டுதல். அவர் ஆதரவு கோரிய நிலையில் இன்னும் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இங்கு குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார்." என்று கூறினார்.
"மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் பதவியேற்பதுதான் சரி, அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம். பாஜக, ஆர் எஸ் எஸ், சங் பரிவார் அவரை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புகிறோம் என அவர் கூறியிருப்பதை நாங்கள் பரிசீலிக்கிறோம். முன்கூட்டியே முடிவை அறிவிக்க முடியாது, பரிசீலித்து அறிவிக்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.
"சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. எனினும், தவெகவுக்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல." என்று அவர் கூறினார்.
"தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
விஜயை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
திமுக- அதிமுக கூட்டணி குறித்த விவாதம்
மே 6ஆம் தேதி இரவு அதிமுக-திமுக கூட்டணி குறித்த ஊகங்கள் தொலைக்காட்சி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் பெரியளவில் பேசுபொருளாக மாறியது. ஆனால், அதை திமுக மறுத்தது.
ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு காபந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பொறுத்திருந்து பார்ப்போம்" என தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அக்கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்திவிட்டது. விசிக மற்றும் இடதுசாரிகளிடம் அக்கட்சி ஆதரவு கேட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு நேற்று (மே 7) நேரில் சென்ற தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆட்சியமைக்க ஆதரவு கோரினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், "விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவித்த நிர்மல் குமார், "அதற்கான எண்ணமும் இல்லை," என்று கூறினார்.
மேலும், விஜயின் பாதுகாப்பு வாகனங்கள் விலக்கப்பட்டது தொடர்பாக விளக்கமளித்த அவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் பாதுகாப்பு வாகனங்கள் வேண்டாம் என விஜய் முடிவு செய்தார் என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், DMK
விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆலோசனை
அதேபோல, தவெக நிர்வாகி அருண்ராஜ் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்திற்கு நேற்று நேரில் சென்று ஆதரவு கோரினார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், ''திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றதால் முடிவெடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை'' என்று கூறினார்.
''அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை அழைத்து பதவிப்பிரமாணம் செய்யவேண்டிய கடமையை ஆளுநர் செய்ய வேண்டும்'' என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற திமுக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (மே 7) ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிப்பது, முடிவெடுக்கும் அதிகாரத்தை ஸ்டாலினுக்கு வழங்குவது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்தத் தீர்மானத்தில், ''காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை'' என்று குறிப்பிட்ட திமுக, ''தேர்தலுக்கு முன்பும் பின்பும் உண்மையாக நடந்துகொள்ளாத கட்சி காங்கிரஸ்'' என்று விமர்சித்தது.
மேலும், ''கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால்தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல் நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரம் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்படுகிறது'' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இன்று (மே 8) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூடுகிறது. அதேபோல, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்துகின்றன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





























