டேட்டிங் செயலிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இரா.சிவா
- பதவி, பிபிசி தமிழ்
"சமூகவலைதளங்களும் டேட்டிங் தளங்களும் ஒன்றல்ல, புகைப்படம் பதிவிடும் எல்லா தளங்களும் சமூகவலைதளம்தான் என்ற புரிதல் மக்களிடம் உள்ளது. டேட்டிங் தளங்கள் ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பானது." என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு.
இந்தியாவில் இணைய வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, அதையொட்டி நடக்கும் மோசடி குற்றங்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, டேட்டிங் தளங்களை மையமாக வைத்து நடக்கும் குற்றங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன.
டேட்டிங் செயலியில் அறிமுகமானவரை சந்திக்கச் சென்றவரிடம் பணம் பறிப்பு, டேட்டிங் செயலியில் செய்த ரகசிய உரையாடலை வைத்து மிரட்டல் என்பன போன்ற பல செய்திகளை ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது.
குறிப்பாக, இந்த மாதிரியான மோசடிகளுக்கு தன்பாலின ஈர்ப்பாளர்களே அதிகம் இலக்காகின்றனர். இந்த வாரத்தில்கூட தமிழகத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் கிரைண்டர் (GRINDR) என்ற தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர் மற்றும் பால் புதுமையர்களுக்கான டேட்டிங் செயலியில் அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்று தன்னுடைய பணம், நகை மற்றும் ஏடிஎம் கார்டுகளை இழந்துள்ளார். அவரை 6 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்தி, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்குப் பதிவாகியுள்ளது.
இது மாதிரியான செய்திகளைப் படிக்கும் போது, டேட்டிங் செயலியை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
"டேட்டிங் செயலி ஒருவரின் அந்தரங்கத்தோடு தொடர்புடையதால் மோசடி செய்பவர்களுக்கும் ஏற்ற களமாக அது இருக்கிறது. வசீகரமான பின்னணி தகவல்களுடன் போலியான கணக்கு தொடங்கி, மற்றவர்களைக் குறிவைக்கும் செயலை ஆங்கிலத்தில் Catfishing என்று கூறுவோம். சமூக ஊடகங்களைவிட டேட்டிங் செயலிலேயே அதிகமாக Catfishing நடக்கிறது" என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுநர் ஹரிஹரசுதன் தங்கவேலு.
டேட்டிங் செயலிகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "எந்த டேட்டிங் செயலியில் கணக்குத் தொடங்கினாலும் தனி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த வேண்டும். எளிமையாக தொடங்க வேண்டும் என்பதற்காக பலர் தங்களது மொபைலில் இருக்கும் கூகுள் கணக்கு மூலமாகவோ அல்லது சமூகவலைத்தள கணக்கு மூலமாகவே தொடங்கிவிடுகின்றனர். இதனால் நம்மைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் மோசடியாளர்களின் கைகளுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு, நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்க வாய்ப்புள்ளது" என எச்சரிக்கிறார்.
இயற்கைக்கு மாறானது அல்ல

பட மூலாதாரம், Getty Images
நமக்கு உரிய சுதந்திரம் இல்லை, நம்முடைய பாலியல் விருப்பம் இயற்கைக்கு மாறானது என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் நினைப்பதே இது மாதிரியான மோசடியில் அவர்கள் சிக்கிக்கொள்ள காரணமாக அமைகிறது என்கிறார் எல்ஜிபிடி சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் 'சகோதரன்` என்ற தன்னார்வ அமைப்பின் பொதுமேலாளர் ஜெயா.
"2018, செப்டம்பர் 6ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு வயது வந்தோருக்கு இடையேயான தன்பாலின உறவை குற்றமற்றதாக கூறுகிறது. 2021, ஜூன் 8ஆம் தேதி sushma vs commissioner of police வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், ஒருமித்த உணர்வுடன் இருவர் தன்பாலின உறவு வைத்துக்கொண்டால் அவர்களை பெற்றோர்கள் பிரிக்கக்கூடாது, அவர்களுக்கான உரிமைகளை பெற்றோர் மட்டுமல்ல அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இயற்கைக்கு மாறான உறவு கொள்பவர்களை தண்டைக்குரியவர்களாக கூறிய இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 377 இன்றைக்கு அமலில் இல்லை. எல்ஜிபிடி சமூகத்தினருக்காக இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், இவை பெரும்பாலான தன்பாலின ஈர்ப்பாளருக்கு தெரியவில்லை. எனவே தங்களது பாலியல் உறவை ரகசியமாக வைத்துக்கொள்ள அவர்கள் நினைக்கின்றனர்" என்கிறார் ஜெயா.
டேட்டிங் செயலியில் சுதந்திரம்
தங்கள் பாலியல் விருப்பத்திற்கேற்ப துணையைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு குறைவாக இருப்பதே டேட்டிங் செயலியில் உள்ள போலிக்கணக்குகளை அவர்கள் எளிதாக நம்பிவிடுவதற்கான காரணம் என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.

"சமூகவலைதளங்களைவிட டேட்டிங் செயலிகளிலேயே தங்களால் சுதந்திரமாக இயங்க முடிவதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் கருதுகின்றனர். அது உண்மையும்கூட. சமூகவலைதளங்களில் தன்னுடைய பாலியல் விருப்பத்தை அவர்களால் வெளிப்படையாக குறிப்பிட முடிவதில்லை. ஆனால், டேட்டிங் தளங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டு அதன் மூலம் அதே விருப்பம் கொண்ட துணையை அவர்களால் தேடிக்கொள்ளவும் முடிகிறது. தங்களது பாலியல் விருப்பமும் உறவும் ரகசியமாக இருக்க வேண்டும் என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் கருதுவதாலும், அதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதால் போலிக்கணக்கை எளிதாக அவர்கள் நம்பிவிடுகின்றனர். எனவே மோசடியாளர்களால் தன்பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக குறிவைக்க முடிகிறது" என்கிறார் அவர்.
நவீன உத்தி
நேரடியாக அழைத்து தாக்குதல் நடத்தி பணம் பறிப்பது, ரகசிய உரையாடலை காட்டி மிரட்டுவது என்றில்லாமல், மோசடியாளர்கள் பல புதிய உத்திகளைத் தற்போது கடைபிடிப்பதாகக் கூறுகிறார் ஜெயா.
தங்கள் அமைப்பிற்கு உதவிகோரி வந்த ஒருவரின் கதையை பகிர்ந்த ஜெயா, "இரண்டு ஆண் தன்பாலின ஈர்ப்பாளர்கள் நெருங்கிப் பழகியுள்ளனர். அதில் ஒருவர் மற்றொருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடய அம்மாவிடம்கூட அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்கள் குடும்பம் சற்று வசதியான குடும்பம் என்று தெரிந்ததும் அவர்களை மோசடிக்குள்ளாக்க நினைத்த அந்த நபர், அவர்கள் வீட்டில் தன்னுடைய உடைமையை வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்துள்ளார். பிறகு அதைக் கொரியரில் அனுப்பும்படி அவர் கேட்டதும், நண்பரும் கொரியரில் அனுப்பியுள்ளார். பார்சல் அனுப்பியதும் கொரியர் முகவர் என்ற பெயரில் ஒருவர் அழைத்து உங்கள் கொரியரில் போதைப்பொருள் உள்ளது, போலீசார் அதை எடுத்துச் சென்றுள்ளனர் என்று கூறியுள்ளார். அந்தத் தகவலை இவரிடம் சொன்ன போது போலீஸ்வரைக்கும் பிரச்னை சென்றுவிட்டது, உன் வீட்டு முகவரியில் இருந்து வந்துள்ளதால் நீ பிரச்னையில் சிக்க நேரிடும். எனக்குத் தெரிந்த நபரை வைத்து இதை நான் முடிக்கிறேன், ஆனால் பணம் கொஞ்சம் செலவாகும் என்று கூறி அவரிடம் 70 ஆயிரம் ரூபாய்வரை கேட்டுள்ளார். அவரும் நம்பி 10 ஆயிரம்வரை பணம் கொடுத்துள்ளார். தற்போது இந்த நபர் மீது எங்கள் அமைப்பு மூலம் புகார் கொடுத்துள்ளோம். அனைவருமே இப்படி செய்வார்கள் என்று கூறவில்லை, ஆனால், இது போன்ற நபர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்" என விவரித்தார்.
டேட்டிங் செயலிகளைப் பொறுத்தவரை முடிந்தவரை நம்மைப் பற்றிய விவரங்களை அதிகம் பகிராமல் இருப்பதே பாதுகாப்பானது என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
"உண்மையான பெயரில் கணக்கு தொடங்காமல் வேறு ஏதாவது பெயரில் கணக்கு தொடங்கலாம். ஒரு கணக்கில் இருந்து நட்பு அழைப்பு வருகிறது என்றால் அந்தக் கணக்கு எவ்வளவு நாளாக பயன்பாட்டில் உள்ளது, அந்தக் கணக்கில் உள்ள முகப்புப்படம் உண்மையானதா இல்லையா என்பதை google reverse image மூலம் உறுதி செய்துகொள்ளலாம். நம்மைப் பற்றிய விவரங்கள் டேட்டிங் செயலியில் எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்த அளவிற்கு நமக்கு ஆபத்துகளும் குறைவு.
என்ன வேலை செய்கிறோம், என்ன நிறுவனத்தில் வேலை செய்கிறோம் என்று சமூகவலைதளத்தில் குறிப்பிடுவது போல டேட்டிங் செயலியிலும் அந்தத் தகவல்களை பலரும் பகிர்கின்றனர். பணரீதியாக உங்களைக் குறிக்கவைக்க மோசடியாளர்களுக்கு உதவும் முதல் தகவலே இதுதான். இந்தத் தகவல் மூலம் உங்களது பொருளாதார நிலை என்ன என்பதை அவர்களால் எளிதில் கணிக்க முடியும்" என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
நேரில் சந்திக்கையில் கவனம்
டேட்டிங் செயலியில் அறிமுகமானவர்களை சந்திக்கச் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கை இருக்க வேண்டும் என்கிறார் ஜெயா.

"என்னைப் பொறுத்தவரை அறிமுகமில்லாத நபரை நேரில் சந்திக்கவே கூடாது. பாலியல் தேவை மட்டும் வாழ்க்கையில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை, முன்பின் அறிமுகமில்லாத நபரை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்றால் சந்திப்பு நடக்கும் இடத்தின் பாதுகாப்புத்தன்மையை முதலில் உறுதிசெய்துகொள்ள வேண்டும். அந்த சந்திப்பிற்கு முன்னதாகவே அது குறித்து உங்களது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்துவிட வேண்டும். எதாவது அசம்பாவிதம் நேரும் என்று எனக்குத் தெரிந்தால் உனக்கு போன் செய்கிறேன் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகும் என்னிடம் இருந்து போன் வரவில்லை என்றால் நீ நேரில் வா என்று அவர்களிடம் கூறிவிட வேண்டும்" என்கிறார் ஜெயா.
டேட்டிங் செயலியில் ஒருவருடன் பழகும் போது உங்களுக்கு ஏதேனும் போதைப்பழக்கங்கள் இருந்தால் அது குறித்து கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறும் ஜெயா, தங்கள் அமைப்பிற்கு உதவிகோரி வரும் பாதிக்கப்பட்டவர்கள் பலர், போதைப்பொருள் கொடுத்து மோசடியில் சிக்கவைக்கப்பட்டவர்கள் என்கிறார்.
உங்கள் புகார் மற்றவர்களைக் காப்பாற்றும்

பட மூலாதாரம், Getty Images
சந்தேகத்திற்கிடமான கணக்கு இருந்தால் அது குறித்து நீங்கள் அளிக்கும் புகார் மற்றவர்களைக் காப்பாற்றும் என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
"டேட்டிங் செயலியில் அறிமுகமானவர்களிடம் தனிப்பட்ட மொபைல் எண்களை அளிக்காமல், அந்தச் செயலியில் உள்ள போன் பேசுவதற்கான வசதியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஒருவேளை சந்தேகத்திற்கிடமாக ஒரு கணக்கு உள்ளது என்றால் அதை வெறுமனே கடந்துவராமல் அந்தத் தளத்திலேயே புகார் அளிப்பது பலரையும் காப்பாற்றும். குறிப்பிட்ட அந்தக் கணக்கால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் செய்யலாம் அல்லது cybercrime.co.in என்ற தளத்தில் ஸ்கீரின்ஷாட் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்" என்கிறார் அவர்.
இன்றைக்கு 50க்கும் மேற்பட்ட டேட்டிங் செயலிகள் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக, கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் டேட்டிங் செயலிகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரபலமான ஒரு ப்ரெஞ்சு டேட்டிங் தளம் இந்தியாவில் தங்களது பயனர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தது.
இப்படியான சூழலில், இது போன்ற ஆபத்துகளில் இருந்து கவனமாக இருப்பது முழுக்க முழுக்க தனிநபர் சார்ந்தது என்கிறார் ஹரிஹரசுதன் தங்கவேலு.
"இன்றைக்கு பல அதிகாரப்பூர்வமற்ற டேட்டிங் செயலிகள் பயன்பாட்டில் உள்ளதால், ஒரு டேட்டிங் செயலியில் கணக்கு தொடங்குவதற்கு முன் அதன் பின்னணியை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அதில் கணக்கு வைத்துள்ளவர்கள் அந்த செயலிக்கு என்ன ரேட்டிங் கொடுத்துள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். ரேட்டிங் கொடுத்துள்ளவரின் பின்னணியையும் சரிபார்க்கும் போது அவை உண்மையான ரேட்டிங்கா இல்லையா என்பது தெரிந்துவிடும்.
இன்றைக்கு ஒரு போன் வாங்கும் போதே அதனோடு 50 செயலிகள் வருகின்றன. எனவே ஒவ்வொரு செயலியும் நம்முடைய தகவல்களை எப்படி பயன்படுத்துகிறது என்ற அடிப்படை புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். அந்தப் புரிதல் வந்துவிட்டாலே தேவையற்ற விவரங்களை நாம் பதிவிட மாட்டோம். பாதிக்கப்பட்டவர்கள் இதை தைரியமாக வெளியே வந்து சொல்லும் போது மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு கிடைக்கும்" என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












