சௌரப் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு சமூகத்தை சேர்ந்த நீதிபதியா?

சௌரப் கிர்பால்

பட மூலாதாரம், TWITTER/ SAURABH KIRPAL

படக்குறிப்பு, சௌரப் கிர்பால்
    • எழுதியவர், சுசித்ரா மொகந்தி
    • பதவி, சட்டத்துறை செய்தியாளர்

தன்பாலின ஈர்ப்பு கொண்ட வழக்குரைஞர் சௌரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மீண்டும் பரிந்துரைத்து அம்முடிவில் தன் உறுதியை நிலைநிறுத்தியுள்ளது உச்ச நீதிமன்ற கொலீஜியம்.

இதன்மூலம், இந்தியாவில் முதன்முறையாக தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒருவர் நீதிபதியாகும் வாய்ப்பு உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உச்ச நீதிமன்ற கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியுள்ள இந்தப் பரிந்துரை தொடர்பான ஆவணம் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றது. அதில், சௌரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைப்பது, எல்ஜிபிடி சமூகத்தினரின் உரிமைகளை நிலைநாட்டும் ”மைல்கல்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவை இந்தியாவின் சட்ட நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

கொலீஜியத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், மூத்த வழக்குரைஞர் சௌரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு மூன்றாவது முறையாகப் பரிந்துரைத்துள்ளார்.

கொலீஜியத்தின் முடிவு குறித்துக் கேட்டறிய சௌரப் கிர்பாலை பிபிசி தொடர்புகொண்ட போது அவர் அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இந்தியாவில் கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் அதன்பின் இந்திய அரசின் அதிகாரபூர்வ ஒப்புதலுக்குப் பின்னரே ஒருவரை நீதிபதியாக நியமிக்க முடியும். அந்த வகையில், கிர்பாலை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியிருப்பது முக்கியமானதாக உள்ளது. 

சௌரப் கிர்பாலை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, அவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரை துணையாகக் கொண்டுள்ளதாகவும் இருவரும் “நெருக்கமான உறவில்” இருப்பதாகவும், சௌரப் தன் “பாலின தேர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும்” தெரிவித்துள்ளதாக, கொலீஜியம் தன் பரிந்துரையில் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், கிர்பாலுக்கு "தன்பாலினத்தவர்களின் உரிமைகள் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது" என்றும் அரசாங்கம் கவலைப்படுவதாக கொலீஜியம் கூறியுள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்தை சேர்ந்த கிர்பாலின் காதலர், இந்திய தேசத்திற்கு எதிரானவர் என அரசாங்கம் யூகிக்க முடியாது என்று கொலீஜியம் தெரிவித்துள்ளது.

மேலும், சுவிட்சர்லாந்து இந்தியாவின் நட்பு நாடு என்றும் சட்டத்துறையில் உள்ள பலரும் இதற்கு முன்பு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களைத் தங்களின் துணையாகக் கொண்டுள்ளனர் என்றும் கொலீஜியம் தெரிவித்துள்ளது.

ஒவ்வோர் இந்தியரும் தன்னுடைய பாலின சார்பு மற்றும் கண்ணியத்திற்கு தகுதியானவர் என, கொலீஜியம் இந்திய அரசுக்கு நினைவூட்டியுள்ளது. "கிர்பால் தன்னுடைய பாலின சார்பை வெளிப்படையாகத் தெரிவித்தது பெருமையளிக்கும் விஷயம். அவர் நீதித்துறையின் சொத்தாக இருப்பார்,” என கொலீஜியம் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது. 

2018ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் தன்பாலின ஈர்ப்பை குற்றமற்றது என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கில் இரண்டு முக்கிய மனுதாரர்களின் வழக்கறிஞராக இருந்தவர் கிர்பால்.

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

சட்ட நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரையை இந்தியாவின் சட்ட நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்திய அரசின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான கே.சி.கௌஷிக், கிர்பாலை பல ஆண்டுகளாக அறிந்தவர். பிபிசியிடம் பேசிய அவர், கொலீஜியத்தின் முடிவை வரவேற்றார். மேலும், கிர்பால் சிறந்த வழக்குரைஞர் என்றும் அவர் சிறந்த நீதிபதியாகவும் இருப்பார் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார். 

”இந்தியா காலத்திற்கு ஏற்றவாறு பரிணமித்து வருகிறது. கிர்பால் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் சட்ட அறிவில் தெளிவு பெற்றவர்" என்று கௌஷிக் பிபிசியிடம் கூறினார்.

சௌரப் கிர்பால் “தெளிவான, அறிவார்ந்த, விதிவிலக்கான, தகுதியான நபர்” என்று மூத்த வழக்குரைஞர் கீதா லூத்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

“டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக சௌரப் கிர்பாலை நியமிக்கும் பரிந்துரையில், அவருடைய தனிப்பட்ட விருப்பமான பாலின சார்பு நிலைக்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது. தகுதி மற்றும் திறமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். 

”அவருடைய பாலின சார்பு நிலைக்காக பாகுபாடு காட்டக்கூடாது. இப்போது இந்தப் பரிந்துரையானது, இத்தகைய பதவிகளுக்குத் தகுதியான மற்றவர்களுக்கும் நுழைவுவாயிலாகவும் பார்க்கப்படும்,” என அவர் தெரிவித்தார். 

சட்ட நிபுணரும் இந்தியாவின் முக்கியமான குற்றவியல் வழக்குரைஞருமான காமினி ஜெய்ஸ்வால், நீதிபதியாவதற்கு சௌரப் கிர்பால் தகுதியானவர் எனத் தெரிவித்தார். "அவரை நீதிபதியாக நியமிப்பதைத் தவிர இந்திய அரசுக்கு வேறு வாய்ப்பில்லை. இதுதான் இந்தியாவின் சட்டம். கிர்பால், தகுதியான, கடமை உணர்வு கொண்ட நபர்,” என பிபிசியிடம் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

"இதன்மூலம், தகுதியான பலருக்கும் கதவுகள் திறக்கப்படும். ஆனால் பரிந்துரைகளின் அளவுகோல் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்," என ஜெய்ஸ்வால் பிபிசியிடம் கூறினார்.

புதுடெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் படித்த கிர்பால், பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை மூலம் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

1990களில் இந்தியா திரும்புவதற்கு முன்பு, ஜெனீவாவில் ஐநா சபையில் சிறிது காலம் பணியாற்றினார். அதன்பின், அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சிவில், குற்றவியல், அரசியலமைப்பு சார்ந்த முக்கியமான வழக்குகள் பலவற்றில் அவர் வாதாடியுள்ளார். 

இரண்டு நபர்கள் சட்டத் துறையில் தன் மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர்களாகக் குறிப்பிட்டுள்ளார் கிர்பால். ஒருவர் தன் தந்தை எனவும் மற்றொருவர் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி என்றும் தெரிவித்துள்ளார்.

மே 06, 2002 முதல் தான் ஓய்வு பெற்ற நவம்பர் 7, 2002 வரை இந்தியாவின் 31வது தலைமை நீதிபதியாக இருந்த பூபிந்தர் நாத் கிர்பால் தான் சௌரப் கிர்பாலின் தந்தை. 

"கிர்பால் திறமை, ஒருமைப்பாடு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளார். அவரது நியமனம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மதிப்பைச் சேர்க்கும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மையை வழங்கும்," என்று உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் கூறியுள்ளது.

எல்ஜிபிடி

பட மூலாதாரம், Getty Images

”இது நிச்சயம் ஒரு புரட்சிதான்”

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் எல்ஜிபிடி சமூகத்தினரின் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வரும் ‘சகோதரன்’ அமைப்பின் பொது மேலாளர் ஜெயா பிபிசி தமிழிடம் கூறுகையில், “தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஒருவர் நீதிபதியாக வரும்போது எல்ஜிபிடி சமூகத்தினரின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தன்பாலின ஈர்ப்பு குற்றம் இல்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் பெரும்பாலானோர் தங்கள் அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்தனர். எனவே, இதற்கு ஆதரவாக ஒரு விஷயம் நடக்கும்போது சமூகத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் நிச்சயம் அதுவொரு புரட்சிதான்,” எனக் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் சௌரப் கிர்பாலை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் கூறிய ஜெயா, தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் அங்கீகரிக்கப்படுவது குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் அந்நிகழ்வில் சௌரப் கருத்துகளை எடுத்துரைத்ததாகக் கூறினார்.

சமூகம் இதற்காக என்ன செய்ய வேண்டும், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களுக்கான விவாகரத்து, ஜீவனாம்சம் உரிமைகள், போக்சோ சட்டத்தில் எல்ஜிபிடி சமூகத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை குறித்து விரிவான பார்வையை சௌரப் கொண்டிருப்பதாக ஜெயா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: