தன்பாலின இளைஞரை துன்புறுத்தி, நிர்வாணமாக படம் பிடித்த கும்பல் - கிரைண்டர் செயலி மூலம் மோசடி

பட மூலாதாரம், Getty Images
கிரைண்டர் ஆப்பை நம்பி தன்பாலின உறவை நாடிய ஐடி இளைஞரை கடற்கரை காட்டுப் பகுதியில் வைத்து அடித்து துன்புறுத்தி, நிர்வாணமாக வீடியோ எடுத்து, பணம் பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கிரைண்டர் (GRINDR) என்ற செயலியில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.
கிரைண்டர் (Grindr) செயலி என்பது, தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருநர், பால் புதுமையர்கள் ஆகியோர் தங்களுக்கான துணையைத் தேடிக் கொள்ள உதவும் ஒரு டேட்டிங் செயலி (Dating App). இந்தச் செயலி தன் மூலம் ஒரு தன்பால் ஈர்ப்பாளரோ, திருநரோ, பால் புதுமையரோ, தாம் வாழும் பகுதியில் தங்கள் பாலின தேர்வுக்கேற்ப ஒரு துணையைத் தேடிக்கொள்ளலாம்.
கிரைண்டர் இணையத்தில் பழக்கம் ஏற்பட்ட நபர் ஒருவர் தன்பாலின உறவுக்காக, மண்டபம் அடுத்துள்ள வேதாளை வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர் கடந்த 20ஆம் தேதி மாலை 4 மணி அளவில் பேருந்தில் வேதாளை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
பின்னர் அந்த கிரைண்டர் கணக்கின் மூலம் வரச் சொன்ன நபர் இருசக்கர வாகனத்தில் வந்து அந்த இளைஞரை ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத வேதாளை கடற்கரைக்குச் செல்வோம் எனக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் ஏற்கெனவே ஐந்து இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
போலீஸ் தரப்பில், அந்த ஐந்து இளைஞர்களும் அழைத்துச் சென்றவரும் சேர்ந்து அந்த ஐ.டி இளைஞரைத் துன்புறுத்தியதாகக் கூறுகின்றனர்.
மேலும், பொறியியல் இளைஞரை பைக்கில் அழைத்துச் சென்ற நபருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் சேர்ந்து ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐடி இளைஞரை அடித்து அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தையும் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலி, வெள்ளி மோதிரம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இரண்டு ஏடிஎம்களை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவரை அடித்து, துன்புறுத்தி அவரது ஏடிஎம் பாஸ்வேர்டை பெற்றுக்கொண்டு அந்த ஏடிஎம்மில் இருந்து 3 ஆயிரம் ரூபாயையும் மற்றொரு ஏடிஎம் கார்டில் இருந்த 13 ரூபாயையும் எடுத்துக்கொண்டு மேலும் அந்த இளைஞன் வீட்டிற்கு அந்த இளைஞரை வைத்து போன் செய்து அவரது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லி மீண்டும் அடித்து, துன்றுத்தியுள்ளனர்.
வலி தாங்க முடியாத அந்த இளைஞர் தனது அண்ணனிடம் 20,000 ரூபாயை வங்கிக் கணக்கில் போடுமாறு கூறியுள்ளார். அந்த 20,000 ரூபாய் உட்பட மொத்தம் 37,000 ரூபாயை இளைஞரின் வங்கி கணக்கில் இருந்து எடுத்த மர்ம நபர்கள், பின்னர் அவரை உடலில் ஆடை இல்லாமல் வீடியோ எடுத்துக்கொண்டு அவரது செல்போனை வாங்கி அதில் இருந்த தகவல்களை முற்றிலுமாக அழித்துவிட்டு, செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் அவர்கள் செல்போனில் ஆடை இல்லாமல் எடுத்த வீடியோவை ஆன்லைனில் வெளியேற்றி விடுவோம் என மிரட்டியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

பிறகு அந்த மர்ம நபர்களில் ஒருவர் பைக்கில் ஏற்றி வந்து வேதாளை மெயின் ரோட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இது குறித்து அடையாளம் தெரியாத ஆறு நபர்கள் மீது மண்டபம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமேஸ்வரம் சரக டிஎஸ்பி தலைமையில் குற்றத்தடுப்புப் பிரிவு தனிப்படையினர் அந்த ஆறு மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ராமேஸ்வரத்தை அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் குறிப்பிட்ட செயலி ஒன்றைப் பயன்படுத்தி ஐடி துறையில் பணியாற்றி வரும் பொறியியல் இளைஞர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளைஞரை ஏமாற்றிய கும்பல் ஏடிஎம் மையத்திற்கு சென்று அந்த இளைஞரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளனர்.

இது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் காவல்துறை குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்," என்று தெரிவித்தார்.
இதேபோல் இந்த செயலி மூலம் கடந்த வாரம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றப்பட்டதன் அடிப்படையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.
"இதிலும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும்," என்று காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












