கூடுதலாக பி.எஃப். ஓய்வூதியம் பெறும் திட்டம் - என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியில் இருக்கும் பணியாளர்கள், ஓய்வுப் பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் (பென்சன்) பெற புதிய வழி ஒன்று உள்ளது.
கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) புதிய வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள மாத ஊதியதாரர்கள் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் இதை அறிந்து கொள்வதற்கு முன்பு EPS, EPF, EPFO என்பதன் விளங்கங்ளை அறிந்து கொள்வது அவசியம்.
இதற்காக வரும் ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி மாத ஊதியம் பெறும் லட்சக்கணக்கான நபர்களுக்கு மே 3ஆம் தேதி ஏன் முக்கியமானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
EPFO என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
EPFO என்பது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்(Employees Provident Fund Organization) ஆகும். இது இந்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசின் அமைப்பாகும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் (Pension) மற்றும் பணப்பலன்களை வழங்குவதற்காக இந்த நிறுவனம் இயங்குகிறது.
ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் பெறப்படும் நிதியைக் கொண்டு, குறிப்பிட்ட ஊழியரின் கணக்கில் வரவு வைக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது கணக்கில் இருக்கும் நிதிக்கு வட்டியுடன் சேர்த்து வருங்கால வைப்பு தொகையை இந்நிறுவனம் வழங்கும்.
மேலும் ஊழியரின் பணிக்காலத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையை அவரின் நிறுவனத்திடமிருந்து ஓய்வூதியத்திற்காக பெற்றுக் கொண்டு, 58 வயதுக்கு பிறகு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது.

பட மூலாதாரம், Getty Images
EPF என்றால் என்ன?
EPF என்பது வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund) ஆகும்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்தால், அந்நிறுவனம் ஊழியர்களின் நலனுக்காக EPFO-விடம் ஊழியர்களின் பெயரில் கணக்கு தொடங்கி வருங்கால வைப்பு நிதியை செலுத்தத் தொடங்கும்.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் சேர ஒரு ஊழியர் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் ஊதியமாக பெற வேண்டும்.
வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்காக மாதந்தோறும் பணியாளர்களின் அடிப்படை ஊதியத்தில்(Basic Pay) 12% மற்றும் நிறுவனத்தின் பங்கு(Employer Contribution) 12% பிடித்தம் செய்யப்பட்டு பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தை தொழிலாளர்களின் நீண்ட கால சேமிப்பு திட்டம் என்றே கூறலாம்.
EPS என்றால் என்ன?
EPS என்பது தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம் ( Employee Pension Scheme). இத்திட்டம் இந்திய அரசால் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே பணி ஓய்வுக்கு பிறகு தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒரு நிரந்தர வருமானமாக ஓய்வூதியத்தை வழங்குவதுதான்.
EPS எப்படி கணக்கிடப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் 12% அடிப்படை ஊதியம் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
அதே போல நிறுவனங்கள், தொழிலாளர்களுக்காக 12% அடிப்படை ஊதியத்தை EPFO-விடம் செலுத்துகின்றன.
இதில் தொழிலாளர்கள் செலுத்தும் 12% அவர்களின் வருங்கால வைப்பு நிதிக்காக வரவு வைக்கப்படும்.
நிறுவனங்கள் செலுத்தும் 12% ஊதியத்தில், 3.67% வருங்கால வைப்பு நிதிக்கும் மீதமுள்ள 8.33% தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு(EPS) செலுத்தப்படுகிறது.
இது மட்டுமின்றி, இந்திய அரசும் மாதந்தோறும் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தில் அவர்களின் அடிப்படை மாத ஊதியத்தில் 1.16%-ஐ ஓய்வூதியதிற்காக செலுத்துகிறது.
யாரால் ஓய்வூதியம் பெற முடியும்?
- ஓய்வூதியத் திட்டம் 1995ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த போது, குறைந்தபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மாத ஊதியமாக பெறுபவர்களால் மட்டுமே ஓய்வூதியம் பெற முடியும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
- பின்னர் இந்த தொகை 6,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. செப்டெம்பர் 01, 2014ஆம் ஆண்டு முதல் இத்தொகை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது.அதாவது மாத ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வரை பெறும் நபர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், ANI
2014 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம், ஓய்வூதியத் திட்டத்தில் இரண்டு முக்கிய மாற்றங்களைச் செய்தது.
ஒன்று, ஓய்வூதிய வருமான வரம்பை 6,500 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.
மற்றொன்று, அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் நபர்களின் விருப்பதிற்கேற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவீதத்தை பென்சனுக்காக செலுத்த வேண்டும்.
உதாரணமாக மாத ஊதியமாக 50 ஆயிரம் ரூபாய் பெறும் ஒருவருக்கு, அடிப்படை ஊதியமான 15 ஆயிரம் என்ற வரம்பின்றி முழு தொகைக்கும் 8.33 சதவீதத்தை ஓய்வூதியமாக பங்களிக்கலாம்.
முன்பு எவ்வளவு அதிக ஊதியம் பெற்றாலும் 15 ஆயிரம் ரூபாயை உச்ச வரம்பாக கொண்டு 8.33% ஓய்வூதியத்திற்காக நிறுவனங்கள் செலுத்தலாம் என்ற விதி இருந்தது.
இதன் பொருள் அவர்கள் எதிர்காலத்திற்காக அதிக பணத்தை சேமிக்க முடியும்.
ஆனால் இதற்கு சில விதிமுறைகளுக்குள் உங்கள் கணக்கு வரவேண்டும் என அந்த தீர்ப்பு சொல்கிறது.

பட மூலாதாரம், ANI
செப்டெம்பர் 01, 2014க்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- 2014 செப். 01க்கு முன் ஓய்வு பெற்றவர்கள், அதிக ஓய்வூதியம் பெற அப்போதே விண்ணப்பித்திருக்க வேண்டும். இதற்கு EPFO ஒப்புதல் வழங்கியிருந்தால், அவர்களுக்கு எந்த மாறுதலுமின்றி இத்திட்டம் தொடரும்.
- செப்டெம்பர் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு அதிக ஊதியம் பெற்றவராக இருந்து ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்து அதை EPFO நிராகரித்து இருந்தால், அவர்கள் மீண்டும் இத்திட்டத்திற்காக மே 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
செப்டெம்பர் 01, 2014க்கு முன் பணியில் சேர்ந்து தற்போது வரை பணியில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- செப்டெம்பர் 1, 2014க்கு முன்னர் EPFO-இல் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் உள்ளவர்கள் அதிக ஓய்வூதிய வசதியைப் பெறாமல் இருந்தால் இவர்கள் மே 3, 2023-க்குள் இத்திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம்.
- அத்தகைய நபர்களின் முந்தைய விண்ணப்பங்கள் EPFO-வால் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதிக ஓய்வூதியத்திற்கு பங்களிக்க மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் மே 3ஆம் தேதி கடைசி நாளாகும்.

பட மூலாதாரம், Getty Images
15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- மாதம் ரூ. 15 ஆயிரத்துக்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
செப்டெம்பர் 01, 2014ல் ஊதியம் ரூ. 15 ஆயிரத்திற்கு கீழ் இருந்து, இப்போது அதிகரித்திருந்தால் என்ன செய்வது?
- செப்டம்பர் 1, 2014 நிலவரப்படி ரூ.15 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தும்.
செப்டம்பர் 1, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்திருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு EPFO-வில் சேர்ந்து அவர்களின் மாத சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் அவர்கள் EPS-இல் சேர தகுதியற்றவர்கள். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு பொருந்தாது.

பட மூலாதாரம், Getty Images
பழைய ஓய்வூதிய திட்டம் எப்படி செயல்படுகிறது?
உதாரணமாக A என்ற பெயருடைய ஒரு நபரின் மாத அடிப்படை ஊதியம் ரூபாய் 50,000 என்று எடுத்துக் கொள்வோம்.
ஊழியரின் பங்கு, தற்போதைய அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்கு(PF) ஊழியரின் பங்கின் கீழ் டெபாசிட் செய்யப்படுகிறது.
அப்படியெனில் A பெயரில் ரூ.50,000-ல் 12%, அதாவது ரூ. 6,000 அவரின் PF கணக்கிற்குச் செல்லும்.
அதே அளவுக்கு நிறுவனம் 12 சதவீதம் செலுத்தும். இந்த தொகை, இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதில், 8.33% (அதிகபட்சமாக ரூ.15,000) பென்சன் திட்டத்திற்கு (EPS) செல்லும்.
Aவைப் பொறுத்தவரை, முதலாளியின் பங்கு ரூ.1,250 (ரூ.15,000 இல் 8.33%) பென்சனுக்காக டெபாசிட் செய்யப்படுகிறது.
நிறுவனங்களின் PF பங்கைக் கணக்கிட்டால், ரூ. 50 ஆயிரத்தில் அடிப்படை ஊதியத்தில் 12% என்பது ரூ. 6,000.
இதில் பென்சனுக்கு வழங்கப்பட்ட 1250வை கழித்தால் மீதமுள்ள தொகை 4,750 ஆகும்.
இது நிறுவனங்களின் PF உரிமைப் பங்காக ஊழியரின் கணக்கில் செலுத்தப்படுகிறது.
அதிக ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தால் என்ன நடக்கும்?
ஊழியர்களின் பங்குத் தொகை மாறும். பென்சனுக்கு 1.16% சதவீதம் செலுத்த வேண்டும். அடிப்படை சம்பளம் ரூ.15,000-க்கு மேல் இருந்தால் மொத்தத்தில் 1.16% கணக்கிடப்படும்.
அப்படியென்றால் A-வின் ஊதியமான ரூ.50 ஆயிரத்தில் இருந்து அடிப்படை ஊதியமான ரூ.15,000-ஐ கழித்தால் ரூ.35,000 கிடைக்கும்.
இந்த ரூ.35,000-ல் 1.16% அதாவது ரூ. 406 ஊழியரின் பங்காக பென்சன் திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படும்.
ஊழியரின் PF பங்களிப்பிலும் மாற்றம் ஏற்படும். வருங்கால வைப்பு நிதிக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக பென்சனுக்கு பிடிக்கப்படும் 406 ரூபாய் நீங்கலாக 5,594 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்
அதாவது A-வின் கணக்கில் ரூ. 5,594 வருங்கால வைப்பு நிதிக்கும், ரூ. 406 பென்சன் திட்டத்திற்கும் பிடித்தம் செய்யப்படும்.
எனவே அதிக ஓய்வூதிய திட்டத்தில் சேரும் போது வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகை சற்றுக் குறையும்.
நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் அதிக ஓய்வூதியத் திட்டத்தில் பழைய முறையைப் போல ஊதிய உச்சவரம்பு கணக்கிடப்படாது. மொத்த தொகையில் இருந்து கணக்கிடப்படும்.
A என்ற நபருக்கு அவரது ஊதியமான ரூ.50 ஆயிரத்தில், பென்சனுக்கு 8.33% மற்றும் வருங்கால வைப்பு நிதி 3.67% ஆகவும் அவரது நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரூ.50,000-இல் 8.33% = ரூ. 4,165. இந்த தொகை ஓய்வூதியத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும்.
ரூ.50,000-இல் 3.67%= ரூ.1,835. இந்த தொகை PF கணக்கில் செலுத்தப்படும்.
மொத்தம் 5,594 + 1,835 = ரூ.7,429 PF கணக்கிலும், 406 + 4,165 = ரூ. 4,571 ஓய்வூதியக் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படும்.
இதன் மூலம் மாதந்தோறும் பெறும் ஓய்வூதிய தொகை அதிகமாகும்.
அதிக ஓய்வூதியத் திட்டத்தினால் மாதச் சம்பளம் குறையுமா?
- மாத ஊதியத்தில் எந்த மாற்றமும் இருக்காது.
அதிக ஓய்வூதியத் பங்களிப்பை எதிர்காலத்தில் மாற்ற முடியுமா?
- இல்லை, ஒரு முறை தேர்வு செய்தால் அதை ரத்து செய்ய முடியாது.
அதிக ஓய்வூதியத் திட்டம் கட்டாயமா?
- இல்லை, ஊழியர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.
எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
- விண்ணப்பிக்க கடைசி நாள் மே 03, 2023.
ஓய்வூதியம் எப்போது எனக்கு கிடைக்கும்?
- ஓய்வுப் பெற்ற பிறகே பென்சன் வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும்.
- 58 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும்.
- தொடர்ந்து பணியில் இருந்தவர்கள், 50 முதல் 57 வயதிற்குள் விருப்ப ஓய்வை தேர்தெடுத்தால் அவர்களுக்கு ஓய்வு பெற்ற நாளில் இருந்தே வழங்கப்படும்.
பென்சன் எந்த வயது வரை வழங்கப்படும்?
- ஊழியர்கள் தங்களின் இறப்பு வரை ஓய்வூதியம் பெற முஇட்யும். அவர்களுக்கு பிறகு குடும்பத்தில் மனைவிக்கு வழங்கப்படும். அல்லது குழந்தைகள் 25 வயதுக்கு மிகாமல் இருந்தால் அவர்களுக்கும் வழங்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













