மாஞ்சோலை முதல் அத்ரிமலை வரை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள்

குத்திரபாஞ்சான் அருவி
படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவி
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் உள்ளன.

அவற்றைப் பற்றிய சுவரசியமான விவரங்களை, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

தேங்காய் உருளி அருவி

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணைக்கு கீழ் பகுதியில் உள்ளது தேங்காய் உருளி அருவி. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் மரக்கூட்டங்களுக்கு நடுவே, காண்போர் கண்களை மட்டுமின்றி, உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கும்.

அருவி அருகே ஒரு பாறையில் ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் சிற்பங்களும் உள்ளன.

இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அருவி வன எல்லைக்கு வெளியே இருப்பதாலும் வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்த அருவிக்கு செல்ல களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து தலையணை செல்லும் சாலையில் பயணிக்க வேண்டும். தலையணைக்கு கீழே வலது புறம் திரும்பும் சாலையில் திரும்பி சென்றால் சிவபுரம் வழியாக தேங்காய் உருளி அருவி க்கு செல்லலாம். சிவபுரம் வரை மட்டுமே கார்கள், டூவீலர்கள் செல்ல முடியும், அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து மட்டுமே செல்ல முடியும்.சுற்றிலும் இதுதவிர பச்சையாறு அணையில் இருந்தும் இந்த அருவிக்கு பாதை உள்ளது.

தேங்காய் உருளி அருவி
படக்குறிப்பு, தேங்காய் உருளி அருவி

பச்சையாறு அணையில் இருந்து ஊட்டு கால்வாய் கரையின் வழியாக சென்றால் தேங்காய் உருளி அருவியை அடையலாம். இரு பாதைகள் வழியாகவும் கார், வேன், டூவீலர்களில் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அங்கிருந்து சிறு தூரம் சென்றால் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு பல அரிய வகை வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் விலங்குகள் உள்ளன.

இங்கு விழும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி தலையணை வழியாக ஓடி வருவதால் அதில் குளித்தால் நோய்கள் அணுகுவதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.

இங்கு வரும் பொது மக்கள் அருவியில் குளித்து மகிழ்வதுடன், குடும்பத்துடன் உணவருந்தி விடுமுறை நாட்களை கழித்து விட்டு செல்கின்றனர்.

குத்திரபாஞ்சான் அருவி

குத்திரபாஞ்சான் அருவி
படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவி

நெல்லை மாவட்டம், பணகுடி பேரூராட்சியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரான மகேந்திரகிரி மலையில் அமைந்துள்ளது, குத்திரபாஞ்சான் அருவி.

இந்த அருவி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவி செங்குத்தாக பாய்வது தனி சிறப்பாகும்.

இந்த அருவிக்குச் செல்ல சரியான பாதை வசதி இல்லாமல் கரடு முரடான மலைப் பாதை மட்டுமே உள்ளது. எனவே வாகனங்களில் வருபவர்கள் அருவிக்கு முன் உள்ள கார் பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திவிட்டு அருவியை நோக்கி நடந்தால் ஒரு ஆற்றை கடக்க செல்ல வேண்டும்

பருவமழையின்போது மட்டுமே இங்கு பெருமளவில் தண்ணீர் வரத்து இருக்கும். அருவியிலிருந்து வரும் தண்ணீர், கன்னிமார்கள் தோப்பு என்னும் தடுப்பணையில் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் மதுரை, சென்னை, திருச்சி, கேரளாவில் இருந்து மக்கள் குடும்பத்துடன் அதிக அளவு வந்து குளித்து மகிழ்கின்றனர்

கார் நிறுத்தும் இடத்தில் வனத்துறையினர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அங்கு சிறுவர் சிறுமியர்களுக்கு திண்பண்டங்கள் மட்டும் கிடைக்கும். அந்த இடம் முழுவதும் ஆலமரங்கள் உள்ளதால் அந்த நிழலில் அமர்ந்து குடும்பத்துடன் உணவருந்த வசதியாக இருக்கிறது. மேலும் உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அருவி ஊரை விட்டு சற்று தொலைவில் மலை அடிவாரத்தில் உள்ளதால் குத்திரபாஞ்சான் அருவிக்கு செல்லும் மக்கள் செல்லும் வழியில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அத்ரி மலை

அத்ரி மலை
படக்குறிப்பு, அத்ரி மலை

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது அத்ரி மலை.

தென்காசியிலிருந்து ஆழ்வார்குறிச்சி சென்றால் அங்கிருந்து மினிபஸ் கடனாநதி அணைக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு வரை செல்கிறது. அங்கிருந்து நடந்து அல்லது ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.

மலைக்கு சென்று விட்டு பக்தர்கள் திரும்பி வருவதற்கு, போகும் பொழுதே ஆட்டோ டிரைவர் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டால் ; மலை இறங்க ஆரம்பிக்கும் பொழுது போன் செய்து அழைத்தால் ஆட்டோ நமக்காக அணையில் வந்து காத்திருக்கிறார்கள்.

மலைமேல் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் அன்னதான உணவு கிடைக்கும், காலை உணவை ஆழ்வார் குறிச்சியில் முடித்துக்கொள்ள வேண்டும், அல்லது பார்சல் வாங்கி கொண்டு அணைக்கட்டில் அல்லது மலைக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் மலைக்குள் பிளாஸ்டிக் பைகள் அனுமதி கண்டிப்பாக இல்லை எனவே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.

செல்லும் வழியில் வனத்துறையினர் சோதனை சாவடி உள்ளது. வனத்துறையினர் வருகை பதிவேடு ஒன்று வைத்திருப்பார்கள் அதில் பெயர் முகவரி செல்போன் எண் எழுதி கையெழுத்திட்டு செல்ல வேண்டும்.

கடனா நதி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் குறைவாக இருந்தால அது வழியாக குறுக்கு பாதையை பயன்படுத்தி கொள்ளலாம்

மலைக்கு நடந்து செல்லும் குறுகலான பாதை கோவில் வரை பாறைகள் இல்லாத பாதை நடப்பதற்கு எளிதாக உள்ளது. கோவில் அருகில் செல்லும் பொழுது மட்டுமே ஏற்றமுள்ள பாதை உள்ளது.

அந்த ஏற்றமும் பாறைகள் இல்லாத மண் பாதையாக உள்ளது, எனவே மழை காலங்களில் வழுக்கும் படியாக உள்ளது. மலை ஏற இரண்டு மணி நேரம் இறங்க இரண்டு மணிநேரம் ஆகிறது. அதன் அருகில் பெரிய பாறை ஒன்றில் குகை ஒன்று உள்ளது. அதனுள் சித்தர்கள் தவம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே பக்தர்கள் அந்த குகையில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

மலை ஏறி சென்றதுடன், அருள்மிகு அனுசுயா தேவி அருள்மிகு அத்திரிமகரிஷி இருவரும் கோவில் கருவறையில் லிங்க வடிவில் காட்சியளிக்கின்றனர்.

கோரக்கர் அமர்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் குகை ஒன்று உள்ளது. இது பார்பதற்கே ரம்மியமாய் இருக்கும். அங்குள்ள மரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று சந்தன மழை பொழியும் என்றும் நம்பப்படுகிறது. அத்ரி மலைக்கு சென்று வருவது ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் பலர் சுற்றுலாவாக சென்று அங்கு தங்கி அருவிகளில் குளிப்பது, கடனாநதி அணையின் அழகை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு

அரியநாயகிபுரம் அணைக்கட்டு
படக்குறிப்பு, அரியநாயகிபுரம் அணைக்கட்டு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து முக்கூடல் செல்லும் வழியில் அரசன் குளத்துக்கு அடுத்துள்ளது வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டு. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி இந்த அணைக்கட்டு வழியாக கடந்து செல்கிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிகளவு சுற்றுலா வந்து செல்கின்றனர்.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு க்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான வயல்வெளிகள் உள்ளது. அரியநாயகிபுரம் அணைக்கட்டு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அரியநாயகிபுரம் அணைக்கட்டு 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு தளவாய் அரியநாதர் என்பவரால் கட்டப்பட்டது.

இந்த அணைக்கட்டு கட்டியதன் முக்கிய நோக்கம் இங்கு வரக்கூடிய தண்ணீரை கால்வாய்களுக்கு திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டது. அணைக்கட்டில் உள்ள மறுகால் வழியாக நடந்து சென்று அக்கரைக்கு செல்ல வேண்டும்.

செல்லும் போது மரு காலில் விழும் தண்ணீரில் செயற்கை அருவி போன்று அமர்ந்து குளிக்க வசதியாக இருக்கும் அதேபோல் அணைக்கட்டின் மறுபுறம் நீச்சல் குளம் போல் மணல் நிறைந்து விழுந்து குளிப்பதற்கு ஏதுவாக இருப்பதால் விடுமுறை நாட்களில்; பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இங்கு குளித்து மகிழ்கின்றனர்.

அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் அங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

அகஸ்தியர் அருவி

அகஸ்தியர் அருவி
படக்குறிப்பு, அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் பாபநாசம் அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வரும். அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது. இரு புறமும் பசுமையான காட்சிகள் ரசித்த படி செல்லும் போது, இடது பக்கத்தில் அகஸ்தியர் அருவி செல்லும் வழி என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த பாதையில் சென்றால், நீர் மின் தொகுப்பு, அதன் அருகே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் இருந்து இறங்கி அருவிக்கு செல்லும் வழியில் ஏராளமான குரங்குகள் கூட்டங்களையும் காண முடியும். அங்கிருந்து கடந்து சென்றால்; அகஸ்தியர் அருவிக்கு சென்று விடலாம்.

இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். தண்ணீர் மிகக் குளிர்ச்சியாகவும், மூலிகைகளின் மணம் கலந்தும் கொட்டுகிறது. இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவியில் பெண் சுற்றுலாப் பயணிகள், ஆண் சுற்றுலாப் பயணிகள் தனித் தனியாக நின்று குளிக்கும் வகையில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெண்களுக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தனியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள்.

மாஞ்சோலை - குதிரைவெட்டி

மாஞ்சோலை - குதிரைவெட்டி
படக்குறிப்பு, மாஞ்சோலை - குதிரைவெட்டி

திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் 3 மணி நேர பயணித்து 3500 அடி உயரத்தில் நாலாபக்கமும் உயரமான மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் வனப்புமிக்க மாஞ்சோலைக்கு செல்லலாம்.

அதற்கு மேல் 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்கள், பசுமை மாறாக் காடுகள் நிறைந்துள்ளன.

மாஞ்சோலை சுற்றுலா தலம் அல்ல, முண்டந்துறை புலிகள் காப்பகத்தோடு இணைத்து பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதி வசதிகள் எதுவும் இல்லை. காலையில் சென்று பார்த்துவிட்டு மாலையில் திரும்பி விட வேண்டும். வழக்கமாகச் சென்று வரும் பேருந்துகளில் சென்று வருவதற்கு அனுமதி தேவையில்லை. சொந்தக் காரில், வாடகைக் காரில் செல்ல வேண்டுமானால் அம்பாசமுத்திரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்து ஒரு நாளைக்கு நான்கு முறையும், பாபநாசத்திலிருந்து 4 முறையும் இயக்கப்படுகின்றன.

நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கல்லிடைக் குறிச்சி வழியாக மாஞ்சோலை போகலாம். சாலை மார்க்கமாக செல்வோர் கல்லிடைக்குறிச்சி அடைந்து அங்கிருந்து செல்லலாம். இங்கிருந்து சில அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாஞ்சோலை அரசுப் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்ட வாட்ச் டவரில் ஏறி நின்று பார்த்தால் நாலாபக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலை காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மாஞ்சோலை க்கும் மேல் ஊத்து வழியாக குதிரைவெட்டி க்கு செல்லலாம்

குதிரைவெட்டியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த ஊரின் வாயிலிலே இடதுபுரம் உள்ளடங்கி ஒரு மேடான இடத்தில் வனத்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. அங்கு தங்குவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். விடுதியில் தங்க வரும்புவர்கள் முன்னதாக

http://kmtr.co.in/home/bookroom

என்ற இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் தங்குமிடத்தில் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

இந்த விடுதி அருகில் காட்சி கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் வயர்லெஸ் கோபுரமும் உள்ளது. இந்த காட்சி கோபுரம் மூலம் இங்கிருந்து கயத்தாறு வரை பார்க்கலாம். மேலும் கரையார், மணிமுத்தாறு ஆகிய அணைகள் தெரியும்.

மாஞ்சோலை - குதிரைவெட்டி
படக்குறிப்பு, மாஞ்சோலை - குதிரைவெட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: