டிரம்ப் உறவில் இருந்த மற்றொரு மாடல் கேரன் மெக்டோகல்: புதுமையான உத்தி மூலம் பேசுவது தடுக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் வழங்கிய வழக்கில், வழக்குரைஞரால் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பெண் பிரபலம் கேரன் மெக்டோகல்.
ஸ்டோர்மியைப் போலவே கேரன் மெக்டோகலுக்கும் பணம் வழங்கப்பட்டதாக வழக்கு சார்ந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பிளேபாய் இதழின் முன்னாள் மாடலான மெக்டோகல் 10 மாதங்கள் டிரம்புடன் தொடர்பில் இருந்ததாக அறிவித்திருந்தார். இதை டிரம்ப் முற்றிலும் மறுத்திருந்த நிலையில், கேரன் மெக்டோகல் யார் என்றும், இந்த வழக்குடன் எப்படி அவர் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறார் என்றும் பார்க்கலாம்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள கேரி என்ற இடத்தில் பிறந்தவர் கேரன் மெக்டோகல். மிச்சிகனில் வளர்ந்த இவர் தனது 20-களில் நீச்சலுடை அழகுபோட்டிகளின் மூலம் தனது மாடலிங் பயணத்தை தொடங்கினார்.
பின்னர் பிளேபாய் இதழில் இணைந்த கேரன், “ 1998ம் ஆண்டின் சிறந்த பிளேமேட் “ என்ற விருதை வென்றதுடன், “ 90-களின் சிறந்த பிளேமேட் “ என்ற விருதிற்கு இரண்டாவது வெற்றியாளராக வாக்களிக்கப்பட்டார்.
பின்னர் ஃபிட்னஸ் மாடலாக பணியாற்றிய கேரன், 1999ம் ஆண்டில் ஆண்களுக்கான ஃபிட்னஸ் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் பெண் ஆனார். சார்லிஸ் ஏஞ்சல்ஸ் உட்பட சில திரைப்படங்களில் சிறிய கௌரவ வேடங்களிலும், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.
2006-ல் நியூ யாக்கர் இதழுக்கு பேட்டியளித்த கேரன் மெக்டோகல், ட்ரம்பை முதன்முதலில் ப்ளேபாய் மேன்ஷனில், தி அப்ரென்டிஸ் தொடரின் படபிடிப்பின்போது சந்தித்ததாக கூறினார். அப்போது திருமணமானவராக இருந்த டிரம்ப் தன்னிடம் தான் அழகாக உள்ளதாகக் கூறி பேசிக் கொண்டே இருந்ததாக கூறினார்.
சிஎன்என் நிறுவனத்திற்கு கேரன் அளித்த பேட்டியில், தானும் ட்ரம்பும் உறவில் இருந்த 10 மாதகாலத்தில், குறைந்தது மாதம் 5 முறையாவது சந்தித்ததாகவும் உறவு காதலுடனும், சம்மதத்துடனும் நிகழ்ந்ததாகவும் கூறியிருந்தார்.
2016 பிரசாரத்தின்போது, தி நேஷனல் என்கொயரர் என்னும் டேப்ளாய்ட் பத்திரிகைக்கு பிரத்தியேகமாக பேட்டியளிக்க ஏறத்தாழ 1.22 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் கேரன்.
டிரம்ப் உடனான தனது உறவைப் பற்றி இந்தப் பத்திரிகை தவிர வேறு எவரிடமும் கேரன் பேசக்கூடாது என்ற நிபந்தனையை உள்ளடக்கியதாக இருந்தது அந்த ஒப்பந்தம்.
ஆனால் அந்தப் பேட்டி வெளிவரவில்லை என்று உணர்ந்த பின்பே தான் தந்திரமாக ஏமாற்றப்பட்டிருப்பது தனக்கு புரிந்ததாக கேரன் கூறினார். அந்த தொடர்பு குறித்து கேரன் பொதுவெளியில் பேசுவதை தடுப்பதன் மூலம் டிரம்புக்கு எதிரான செய்திகள் வெளிவருவதை தடுக்க தி நேஷனல் என்கொயரர் உதவியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
2021-ம் ஆண்டு, அமெரிக்க தேர்தல் ஆணையம் இந்த சம்பவத்தை கண்டறிந்தது. இது டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு மறைமுகமாக உதவியதால் தி நேஷனல் என்கொயரர் பத்திரிக்கைக்கு சுமார் 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது கேரன் மெக்டோகல் தன்னை ஒரு மாடலாகவும், கட்டுரையாளராகவும், வழக்கறிஞராகவும், பேச்சளராகவும் தனது வலைதளத்தின் மூலம் அடையாளப்படுத்தி வருகிறார். மார்பகத்தை பெரிதாக்க உதவும் அழகுசாதன சிகிச்சை செய்து கொண்டிருந்த கேரனுக்கு அதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் 2017-ல் அவற்றை தன் உடலில் இருந்து நீக்கியிருந்தார். அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
2018-ல் தான் ட்ரம்புடன் வைத்திருந்த தொடர்புக்காக அவருடைய மனைவி மெலானியாவிடம் மன்னிப்பு கேட்டார் கேரன். “ நான் செய்தது தவறு. எனக்கு இப்படி ஒன்று நடப்பதை நானும் விரும்பமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் “ என்று பொதுவெளியில் மன்னிப்பு கேட்டார். எனினும் இறுதிவரை டிரம்ப் இது தொடர்பான குற்றச்சாட்டை மறுத்தே வந்துள்ளார்.
தற்போது நடந்து வரும் வழக்கு முழுக்க முழுக்க ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் வழங்கியதற்காக நடக்கும் வழக்கு என்பதும் கேரன் மெக்டோகல் தொடர்பான செய்திகள் பின்புல தகவலுக்காக மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தே வருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












