தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்க பா.ஜ.க. தலைவர்கள் தயக்கமா? எல்.முருகன், அண்ணாமலை போட்டியிடாதது ஏன்?

அண்ணாமலை

பட மூலாதாரம், Annamalai / Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த சில மாதங்களாகவே நீலகிரி மாவட்டத்தில் தீவிர கவனம் செலுத்திவந்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவைக்கு தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டார். காரணம் என்ன?

பா.ஜ.கவின் மாநிலங்களவைக்கான நியமனப் பட்டியல் புதன்கிழமையன்று வெளியானது. அதில் மத்திய இணையமைச்சர் எல். முருகனின் பெயரும் இடம்பெற்றிருந்தது பலரது புருவங்களையும் உயர்த்தியது. காரணம், நீலகிரி மக்களவைத் தொகுதியைக் குறிவைத்து பல மாதங்களாகவே பணியாற்றி வந்தார் எல். முருகன்.

ஆறு - ஏழு மாதங்களாகவே நீலகிரி பகுதிக்கு அடிக்கடி வந்து, பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார் எல். முருகன். மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுவந்தார். கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரமே துவங்கிவிட்டது எனச் சொல்லும் அளவுக்கு முருகனுக்கான தேர்தல் பணிகள் நடந்துவந்தன.

நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை, பா.ஜ.கவுக்கு சற்று ஆதரவு உள்ள தொகுதிதான். 1998, 1999 ஆகிய இரண்டு முறையும் பா.ஜ.கவின் மாஸ்டர் மதன் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார். குறிப்பாக, நீலகிரியின் மலைப் பகுதிகள் பா.ஜ.கவுக்கு சாதகமானவையாகக் கருதப்படுகின்றந. ஆகவே, இந்த முறை நீலகிரி தொகுதியில் ஆ. ராசாவை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் எல். முருகன் களமிறங்குவது உறுதி எனக் கருதப்பட்டது.

இந்த நிலையில்தான், திடீரென மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

அண்ணாமலை

பட மூலாதாரம், ANNAMALAI / FACEBOOK

படக்குறிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே பல தருணங்களில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை அண்ணாமலை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்

அண்ணாமலையும் போட்டியிடவில்லை

அதே நாளில் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே. அண்ணாமலையும் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தனக்கு கட்சிப் பணிகள் அதிகமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால், அண்ணாமலை சொல்வது இது முதல் முறையல்ல.

நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கோயம்புத்தூரிலிருந்து போட்டியிடலாம் எனப் பேச்சுகள் அடிபட்டுவந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே பல தருணங்களில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை அண்ணாமலை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஆகவே அவருடைய புதன்கிழமை அறிவிப்பு புதிதல்ல என்றாலும், ஒரே நாளில் பா.ஜ.கவின் இரண்டு தலைவர்கள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனக் கூறி ஒதுங்கியது சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி உடைந்ததே, எல். முருகன் இப்படி ஒதுங்கிக்கொண்டதற்குக் காரணம் எனக் கருதுகிறார்கள். கடந்த ஆண்டு செப்டம்பரில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவித்த பிறகு, கூட்டணியை மீண்டும் உருவாக்க பா.ஜ.க. பல முறை முயற்சித்தும் அதில் வெற்றி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் எல். முருகனின் மாநிலங்களவை நியமனம் நடந்திருக்கிறது.

ஆனால், இதையெல்லாம் எல். முருகன் மறுக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எல். முருகனிடம் கேட்டபோது, "கட்சியின் கட்டளையை நிறைவேற்றத் தயாராக இருக்க வேண்டும். இது என்னுடைய முடிவல்ல. தேசியத் தலைமை எடுத்த முடிவு. எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. ராசாவையும் தி.மு.கவையும் தூக்கியெறிய வேண்டியதுதான் எங்கள் முதல் கடமை. அதற்கான பணிகளை அண்ணாமலையும் எங்கள் அணியும் செய்து கொண்டிருக்கிறோம். கூடிய சீக்கிரம் தி.மு.க. காணாமல் போகும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும்" என்று மட்டும் தெரிவித்தார்.

பா.ஜ.க.

பட மூலாதாரம், Getty Images

'அதிமுக கூட்டணி பிளவே காரணம்'

ஆனால், இதில் வேறு பல செய்திகளும் இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லையென்றால், தான் போட்டிபோட விரும்பவில்லை என்ற எல். முருகனின் கோரிக்கையை தேசிய தலைமை ஏற்றுக்கொண்டு, அவருக்கு வேறு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதுதான் இந்த நியமனத்தின் பொருள்.

மேலும், பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் எல். முருகனுக்கு மீண்டும் இணையமைச்சர் பதவியோ, அமைச்சர் பதவியோ கிடைக்கக்கூடும். இது தமிழக பா.ஜ.கவில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு இணையான ஒரு இடத்தை முருகனுக்கு அளிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இது குறித்து பிபிசியிடம் பேசிய பெயரைத் தெரிவிக்க விரும்பாத அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், "கூட்டணிக்காக கடைசித் தருணம் வரை முயற்சித்துப் பார்த்தார்கள். எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாமல் பா.ஜ.க. போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால்தான் எல். முருகன் மக்களவை போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்" என்கிறார்.

பா.ஜ.க.

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY / X

படக்குறிப்பு, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி

பாஜக தரப்பு என்ன சொல்கிறது?

ஆனால், இவ்வளவு யூகங்களுக்கெல்லாம் வேலையே இல்லை என்கிறார் பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.

"எல். முருகன் மத்திய அமைச்சராக இருக்கிறார். அவருடைய எம்.பி. பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. அதனால், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கியிருக்கிறார்கள். இதைத் தவிர, இதில் வேறு யூகங்களுக்கே வேலையில்லை. இதைப் பற்றி சொல்வதற்கும் வேறு எதுவும் இல்லை" என்கிறார் நாராயணன் திருப்பதி.

பா.ஜ.க. தலைமையின் இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முறிந்த பிறகு பல கணக்குகள் மாறிவிட்டன. தமிழக பா.ஜ.கவின் பல தலைவர்கள் போட்டியிடத் தயங்குகிறார்கள். மற்றொரு பக்கம், பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் முருகனை மறுபடி அமைச்சராக்கலாம். ஆனால், அவர் தோல்வியடைந்தால் அது பெரிய தர்மசங்கடமாக இருக்கும். ஏற்கனவே தாராபுரத்தில் தோற்றவரைத்தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினார்கள். இப்போது மறுபடியும் தோற்றால், அந்தத் தருணத்தில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்கி, அமைச்சராக்க வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்கக்கூட இதைச் செய்திருக்கலாம்" என்கிறார் ப்ரியன்.

பா.ஜ.க.

பட மூலாதாரம், PRIYAN

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் பிரியன்

ஆனால், நீலகிரியைச் சேர்ந்த கட்சிக்காரர்களிடம் அந்தத் தொகுதியில் எல். முருகன் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இன்னும் அவர்களிடம் இருக்கிறது. "எல். முருகன் நீண்ட காலமாகவே இங்கே பணியாற்றினார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக தீவிரமாக வேலை பார்த்தார். மக்களிடமும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். எல்லாப் பிரிவினரையும் சந்தித்துப் பேசினார். சில வேண்டுகோள்களையும் நிறைவேற்றித் தந்தார். அதனால், அவர் என்னதான் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டாலும் நீலகிரி தொகுதியிலும் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு இருக்கிறது" என்கிறார் நீலகிரியின் பா.ஜ.க. மாவட்டத் தலைவரான மோகன் ராஜ்.

அண்ணாமலையைப் பொறுத்தவரை, தான் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லிவந்தாலும்கூட, மத்தியத் தலைமை அறிவித்தால், அவர் போட்டியிட வேண்டியிருக்கும். பா.ஜ.கவைப் பொறுத்தவரை மத்திய அமைச்சர்களையே சட்டமன்ற மன்றத் தேர்தல்களில் களமிறக்கினார்கள் என்பதை மறக்கக்கூடாது என்கிறார் ப்ரியன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)