ஹல்த்வானி வன்முறை: உத்தராகண்டில் மதரஸா, மசூதி இடிக்கப்பட்டபோது நடந்தது என்ன? - பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்திகள்
பிப்ரவரி 8ம் தேதி மாலை, உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி நகரம் கலவர பூமியாக காட்சியளித்தது.
உள்ளூர் நிர்வாகத்தினர் பன்புல்புரா பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகளில் ஒரு மசூதியும் மதராஸாவும் கூட இருந்தன. அவர்கள் அப்பகுதிக்குள் வந்தவுடனேயே அங்கு வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர். போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை சட்டத்தின் வரம்பிற்குள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
உத்தராகண்ட் காவல்துறையின் உள்ளூர் புலனாய்வு பிரிவு (எல்.ஐ.யு), ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை , மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பிய ஐந்து அறிக்கைகளில் மசூதி அல்லது மதரஸா இடிக்கப்பட்டால் தீவிர போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டியது. இந்த அறிக்கைகளில் ஒன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் எச்சரித்தது.
மற்றொரு அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள் என்பதால், நிலைமை தீவிரமடையலாம் என்றும் எச்சரித்தது.

ராஜீவ் லோச்சன் ஷா உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். சிப்கோ இயக்கம் மற்றும் உத்தராகண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர். தற்போது நைனிடாலில் உள்ள 'நைனிடால் சமாச்சார்' என்ற மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.
"ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது பொதுவாக அதிகாரிகள் காலையில் செல்வார்கள். அப்போது தான் ஆக்கிரமிபுகளை அகற்ற ஒரு நாள் முழுவதுமாக கிடைக்கும். ஆனால், இங்கு மாலை நேரத்தில் வருகிறார்கள். அதுவும் குளிர் காலத்தில், விரைவில் இருட்டிவிடும். அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்ப்பது சிரமமாகிவிடும். இது நிர்வாகத்தின் அலட்சியம்" என்றார்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் இந்த விவகாரத்தை சரியாக கையாணடதாகவே கூறுகிறார். "ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையாக தயாராக இருந்தது. இந்த தயாரிப்பு உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. உளவுத்துறை தகவல் இல்லையென்றால், நாங்கள் எப்படி தயாராக இருந்திருப்போம்? நாங்கள் தயாராக இருந்ததால், எந்த நகராட்சி ஊழியருக்கும் ஆபத்தான காயம் ஏற்படவில்லை. ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியும் அமைதியாக நடந்தது. எல்லாம் முடிந்த பிறகு, ரவுடிகளால் வன்முறை தூண்டப்பட்டது” என்றார்.
ஆக்கிரமிப்புகள் ஏன் மாலையில் நடத்தப்பட்டன என்பதற்கும் அவர் விளக்கம் அளிக்கிறார். "நாங்கள் அதிகாலையிலோ அல்லது இரவிலோ ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றிருந்தால், அது அருகில் உள்ள ரயில்வே துறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது எங்கள் மதிப்பீடு. காலையில் வந்து மாலையில் புறப்படும் ஒன்றிரண்டு ரயில்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. எனவே ஏதேனும் வன்முறை ஏற்பட்டால், நிலைமை மோசமாகிவிடும்” என்றார்.

ஹல்த்வானி நிர்வாகம் ஜனவரி 30ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கியது. அந்த ஆக்கிரமிப்புகளில் ஒரு மதரஸா மற்றும் ஒரு மசூதியும் பட்டியலிடப்பட்டிருந்தன. இவை பிப்ரவரி 3-ம் தேதி இரவு சீல் வைக்கப்பட்டன.
ஜனவரி 30ம் தேதி வழங்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பிப்ரவரி 6-ம் தேதி உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கவோ, இடிக்கவோ நிர்வாகத்தை அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, பிப்ரவரி 8ம் தேதி மாலை, மாவட்ட நிர்வாகம் அவற்றை இடித்தது. அதன் பின்னர் பன்புல்புராவில் வன்முறை வெடித்தது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ராஜீவ் லோச்சன் சா கூறுகையில், "இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அந்த விசாரணைக்காக அரசு காத்திருக்கவில்லை. அதற்கு முன்பே சீல் வைத்து விட்டார்கள். ஏன் இவ்வளவு அவசரம்? நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருந்தால், நீதிமன்றத்தின் அணுகுமுறை இந்த விவகாரத்தில் என்ன என்பது தெளிவாகியிருக்கும். ஆக்கிரமிப்பை அகற்ற தடை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்திருக்கும்” என்கிறார்.
மனுதாரரின் வழக்கறிஞரான எஹ்ரார் பெய்க் இந்த விஷயத்தில் நிர்வாகம் சரியான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.
"இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் எங்களுக்கு எந்த தடையும் வழங்கவில்லை. அதே நேரம் நிர்வாகத்தை எந்த வகையிலும் ஆக்கிரமிப்புகளை இடிக்க உத்தரவிடவில்லை. கட்டடங்களை சீல் வைத்த பிறகு, மாவட்ட நிர்வாகம் சற்று காத்திருந்திருக்க வேண்டும். சீல் வைத்து, திடீரென அதை இடிக்க வந்து விட்டனர்” என்றார்.
இவை நசுல் நிலத்தில் கட்டப்பட்டதாகவும், 1937-ம் ஆண்டில், அரசு இந்த நிலத்தை முகமது யாசினுக்கு விவசாயத்திற்காக குத்தகைக்கு விட்டதாகவும் எஹ்ரார் பெய்க் கூறுகிறார்.
நசூல் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலம். ஆனால் இது அரசின் சொத்தாக அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதில்லை. இந்த நிலங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடப்படும்.
சம்பவம் நடந்த இடத்தின் உரிமை தனது மனுதாரர் சஃபியா மாலிக்கிற்கு தலைமுறை தலைமுறையாக வந்து சேர்ந்தது என்று பெய்க் கூறுகிறார்.

நைனிடால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கூறுகையில், "நீதிமன்றத்தில் இரண்டு விசாரணைகள் நடந்தன. இரண்டு விசாரணைகளிலும், நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை வழங்கவில்லை. தடை வழங்குவதற்கான காரணங்கள் இந்த வழக்கில் இருந்திருந்தால், முதல் இரண்டு விசாரணைகளிலேயே வழங்கபட்டிருக்கும். வாய்மொழி வாதங்களில், மனுதாரருக்கு ஆதரவாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்றார்.
அதிகாரபூர்வ தகவல்களின்படி, பன்புல்புராவில் நடந்த வன்முறையில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஏராளமான போலீசாரும் அடங்குவர்.
பன்புல்புராவில் நடந்த வன்முறை தொடர்பாக மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவரின் வசம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், 54 பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் குற்றம் நடந்த இடங்களுக்கு அருகிலுள்ள பிற ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்துக்கு தொடர்பு இருக்கும் வீடுகளை சோதனையிட்டதாக காவல்துறை கூறுகிறது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பெயரிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை மீட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை இடிக்கும் போது, வன்முறையாளர்கள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை உரிமம் பெற்ற ஆயுதங்களுடனும் சட்டவிரோத ஆபத்தான ஆயுதங்களாலும் தாக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். மொத்தம் 120 உரிமதாரர்களுக்கு சொந்தமான 127 ஆயுதங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
பிப்ரவரி 8-ம் தேதி இரவு ஹல்த்வானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, இந்த ஊரடங்கு உத்தரவு இப்போது பன்புல்புராவில் மட்டும் அமலில் உள்ளது.
காவல்துறையினர் அப்பகுதியில் எல்லா திசைகளிலும் தடுப்பு போட்டுள்ளனர். அங்கு, உள்ளே யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. பன்புல்புராவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு
இந்நிலையில், போலீசார் பன்புல்புராவில் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
பன்புல்புராவில் உள்ள நிலைமையை அறிந்த, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் , பிபிசியிடம் பேசினார்.
"மாலிக்கின் தோட்டத்திலும், பாதிக்கப்பட்ட பகுதியிலும் போலீசார் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களை அடிக்கிறார்கள் என்று நகர எம்.எல்.ஏ அனைவர் முன்னிலையிலும் கூறினார். இந்த இடத்தில் போலீசார் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். வீடுகளை உடைப்பது, தடிகளால் அடிப்பது, மிரட்டுவது போன்ற செயல்களை சர்வ சாதாரணமாக அரங்கேற்றினர். இவ்வளவு அட்டூழியங்களையும் செய்து இணையத்தை முடக்கினார்கள். இணைய வசதி முடங்கியபோது, மக்களிடம் பீதி அதிகரித்தது. நமது நிலையை வெளி உலகுக்கு சொல்ல முடியாதோ என்று அச்சப்பட்டனர், ஆத்திரமடைந்தனர் " என்றார்.
பன்புல்புரா பகுதியைத் தவிர ஹல்த்வானி முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. பன்பல்புராவில் இன்னும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் லோச்சன் ஷா கூறுகையில், "நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்க்கும் போது, ஊரடங்கு உத்தரவு வேண்டும் என்றே போடப்பட்டதாக தெரிகிறது. அப்போது தான் காவல்துறையினர் அங்கு சென்று பழிவாங்கவும், அடித்து வீட்டிலிருந்து மக்களை விரட்டவும் முடியும்." என்றார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் மறுக்கிறது.
மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் கூறுகையில், "எனக்கு வெவ்வேறு அமைப்புகளிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்தன, பின்னர் நான் காவல்துறையை அழைத்தேன், சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். எந்த அப்பாவிக்கும் தீங்கு ஏற்படக்கூடாது." என்றார்.
"அதன் பிறகு, நாங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்ற செய்தியை அவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் இரவில் எங்கள் குழுக்கள் மூலம் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கத் தொடங்கினோம். எங்களுக்கோ அல்லது வேறு எந்த நிர்வாகத்திற்கோ அப்பாவிகளைத் தண்டிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றாதவர்களை நாங்கள் தண்டிப்போம்.”என்றார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பன்புல்புராவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் ஒரு காவல் நிலையம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
"தேவபூமியின் அமைதியுடன் விளையாடும் எவரும் தப்பிக்க மாட்டார்கள், உத்தராகண்டில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடமில்லை என்ற எங்கள் அரசாங்கத்தின் தெளிவான செய்தி" என்று தாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












