'அஸ்பார்டேம்' என்ற செயற்கை இனிப்பூட்டி புற்று நோயை ஏற்படுத்துமா? உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜேம்ஸ் கல்லாகர்
- பதவி, பிபிசி நியூஸ்
பல வகையான உணவு மற்றும் குளிர்பானங்களில் காணப்படும் செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேம், மனிதர்களுக்கு “புற்றுநோயை ஏற்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் அடங்கிய இரு குழுக்கள் அஸ்பார்டேமின் பாதுகாப்பான அளவு குறித்த ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ந்து, அஸ்பார்டேம் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
'புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்' என்ற வகைப்பாட்டின் கீழ் அதைக் கொண்டுவரும் பொழுது, அது ஒரு அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் என்றாலும், அஸ்பார்டேம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
அஸ்பார்டேமை எந்த அளவுக்குப் பயன்படுத்தினால் புற்று நோய் ஆபத்து ஏற்படாது என்பதற்கான அளவுக்குக் கீழ் தான் பெரும்பாலான மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனர் என்றாலும், அதை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் குறைத்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்துவதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்பார்டேம் என்றால் என்ன?
அஸ்பார்டேம் என்பது அமினோ அமிலங்கள் அடங்கிய ஒரு கலவை ஆகும். அது சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பானது. அதாவது ஒரே வகையான இனிப்பு தேவைக்கு சர்க்கரையை விட மிகக்குறைந்த அளவுக்கு அஸ்பார்டேமை எடுத்துக்கொண்டால் போதுமானது.
இதனால் அஸ்பார்டேமைப் பயன்படுத்தும் போது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கே கலோரிகள் கிடைக்கின்றன.
1965-ம் ஆண்டு காயங்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேதியியல் ஆய்வாளர் ஒரு ஆய்வு மேற்கொண்ட போது, தவறுதலாகக் கிடைத்தது தான் இந்த அஸ்பார்டேம்.
1980-ல் அது பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து, பொதுவாக அனைவரும் அதைப் பயன்படுத்திவந்தாலும், தொடர்ந்து கண்காணிப்பிலேயே அது இருந்துவருகிறது.

பட மூலாதாரம், Getty Images
எந்தெந்த தயாரிப்புக்களில் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறது?
மிகவும் பிரபலமான இனிப்பு வகை தயாரிப்புகள் எல்லாம் அஸ்பார்டேமைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. டயட் கோக், ஜீரோ கோக், பெப்சி மேக்ஸ், 7அப் ஃப்ரீ உள்பட, பற்பசைகளில் தொடங்கி யோகர்ட் வரை 6,000 தயாரிப்புக்களில் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறது.
இருமல் பாதிப்பைக் குறைக்கப் பயன்படும் டானிக்குகளிலும் அஸ்பார்டேம் பயன்படுத்தப்படுகிறது.
இருப்பினும் அஸ்பார்டேம் மட்டுமே செயற்கை இனிப்பூட்டி என்று நாம் கருதமுடியாது. 1990களில் சுக்ரோஸ் என்ற செயற்கை இனிப்பூட்டி பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது விட்டுச் செல்லும் பின்சுவையை பெரும்பாலானோர் விரும்பாததன் காரணமாக அது பயன்பாட்டில் இருந்து மறையத் தொடங்கியது.
இன்றைய காலகட்டத்தில், தாவரத்தில் இருந்து பெறப்படும் 'ஸ்டீவியா' போன்ற இயற்கையான இனிப்பூட்டிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் இயற்கையானவை என நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இருப்பினும் அஸ்பார்டேம் மட்டுமே பரவலாகப் பயன்படுத்தப்படும் குறைந்த கலோரி கொண்ட செயற்கை இனிப்பூட்டியாக இருந்துவருகிறது.
அஸ்பார்டேம் மற்றும் புற்றுநோய்க்கு இடையே என்ன தொடர்பு?
அஸ்பார்டேமையும், புற்று நோயையும் இணைக்கும் ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிபுணர் குழுவான, புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் ஆராய தொடங்கியது.
இந்த அமைப்பு முதலில் நான்கு சாத்தியமான வகைப்பாடுகளை எடுத்துக்கொண்டது
1. மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கும்.
2. மனிதர்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கு சாத்தியமான காரணமாக இருக்கலாம்.
3. மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
4. மனிதர்களுக்கு புற்று நோயை ஏற்படுத்தலாம் என 'வகைப்படுத்த முடியாது'.
இங்கே ‘ஏற்படுத்தலாம்’ என்ற வகைப்படுத்துதல், விலங்குகளில் செய்த சோதனையில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதை குறிக்கிறது. அதனால்தான் அஸ்பார்டேம் புற்றுநோயை ‘ஏற்படுத்தும்’ என்று அல்லாமல் ‘ஏற்படுத்தக்கூடும்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அஸ்பார்டேம் எவ்வளவு தூரம் 'பாதுகாப்பானது'?
உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது, அவற்றில் கூடுதலாக சேர்க்கப்படும் (சுவை கூட்டிகள் உள்ளிட்ட) பொருட்கள் பாதுகாப்பானவையா என்பதை ஆராய்ந்து அறிவிக்கவேண்டிய இடத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு, இது போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள பாதுகாப்பான அளவுகள் என்ன என்பதைப் பரிந்துரைக்கிறது.
இந்த நிபுணர் குழு, புற்றுநோய் அபாயத்தை மட்டுமின்றி, இதய நோய் மற்றும் 2-ம்வகை நீரிழிவு போன்ற பிற சாத்தியமான நோய்கள் குறித்தும் ஆராய்ந்தது. ஆனால் அஸ்பார்டேம் குறித்து 1981 முதல் இருந்த பரிந்துரைகளை மாற்றுவதற்கு "போதுமான ஆதாரங்கள் அல்லது காரணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை".
எனவே பாதுகாப்பான வரம்பு என்பது, ஒரு நாளைக்கு ஒருவரின் எடையில் ஒரு கிலோவிற்கு 40 மில்லிகிராம் அளவுக்கு இந்த அஸ்பார்டேமைப் பயன்படுத்தலாம் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
செயற்கை இனிப்பூட்டிகள் உடல் எடையைக் குறைக்க உதவாது என அண்மையில் உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












