ராமநாதபுரம்: முன்கூட்டியே முடிந்த ‘பங்குனி ஆமை முட்டையிடும்’ சீசன் - கடல் ஆமை பாதுகாப்பை பாதிக்குமா?

பங்குனி ஆமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடல் காற்றின் மாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே பங்குனி ஆமைகள் முட்டையிடும் சீசன் முடிவடைந்தது.
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் 1.83 லட்சம் பங்குனி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

ஆனால், கடல் காற்றின் மாறுபாடு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பங்குனி ஆமைகள் முட்டையிடும் சீசன் முன்கூட்டியே முடிவடைந்துள்ளது.

ஏன் இப்படி நடந்தது?

பங்குனி ஆமை முட்டை பொரிப்பகங்கள் அதிகரிப்பு

பங்குனி ஆமைகள் (Olive Ridley Turtle), டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழக கடலோர பகுதிக்கு வந்து முட்டையிடுகின்றன.

பெண் பங்குனி ஆமைகள் கடற்கரையில் சுமார் 3 அடி ஆழம் வரையில் குழி தோண்டி நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டு, அவற்றைப் பாதுகாப்பதற்காக மணலால் குழியை மூடிவிட்டு மீண்டும் கடலுக்குச் சென்று விடுகின்றன.

கடற்கரை ஓரங்களில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை காகம், நாய், பெருச்சாளி உள்ளிட்ட உயிரினங்கள் சேதப்படுத்துவதால் பங்குனி ஆமைகள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் பங்குனி ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளைப் பாதுகாக்க, கடந்த சில ஆண்டுகளாக தமிழகக் கடலோர மாவட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்

இவற்றின் ஒரு பகுதியாக பங்குனி ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் அவற்றின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகங்களில் 45 முதல் 55 நாட்கள் வரை அடைகாத்து, முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகின்றன.

பங்குனி ஆமைகள், பாசி, நண்டு, ஜெல்லி மீன் ஆகியவற்றை உண்டு வாழ்பவை. இதனால் மற்ற மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே பங்குனி ஆமைகள் ‘மீனவர்களின் நண்பன்’ என்றழைப்படுகின்றன.

கடலில் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்தால் மீனவர்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால் ஆமைகளின் நன்மைகள் குறித்து வனத்துறை, மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சமீப காலமாக மீனவர்கள் வலையில் சிக்கும் ஆமைகளை உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.

ஏழு ஆண்டுகளில் இதுதான் அதிகம்

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, கடல்வாழ் உயிரினமான பங்குனி ஆமைகள் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் தமிழக கடலோர பகுதிகளுக்கு வந்து முட்டை இடுகின்றன.

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

இருப்பினும், தென் தமிழகக் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் மாற்றத்தால் ஆமைகள் முட்டையிடும் காலம் எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே முடிவடைந்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரட்டிப்பு எண்ணிக்கையில் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

குமரி மாவட்டக் கடலில் விடப்பட்ட 6,300 ஆமைக் குஞ்சுகள்

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா, “கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகத்தில் வைத்துப் பாதுகாத்து, அவை குஞ்சு பொரித்த பிறகு கடலில் விடப்பட்டன.

கடந்த 2021-22ஆம் ஆண்டு ஐந்தாயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டு 3,000 குஞ்சுகள் பொரிப்பகத்தில் இருந்து கடலில் விடப்பட்டன. இந்த ஆண்டு (2022-23) 10,000க்கும் அதிகமான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப்பகத்தில் இருந்து 6,200 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட இரட்டிப்பான எண்ணிக்கை.

கடலில் விடப்பட்ட அனைத்து ஆமை குஞ்சுகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததை எங்களால் காண முடிந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முக்கியக் காரணம் பொதுமக்களின் பங்களிப்பு,” என்று அவர் கூறினார்.

பொதுமக்கள் எப்படிப் பங்களித்தனர்?

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, கடல் ஆமைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரம்

கடல் ஆமைகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ஆமைகள் அழிந்து வரும் இனத்தில் ஒன்று என்பது குறித்தும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை கிராமங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் எனப் பல இடங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

அதன் பயனாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பல தன்னார்வலர்கள் கடற்கரை ஓரங்களில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்தனர்.

ஆமை முட்டைகள் சேகரிப்பதற்கு உதவியாக இரண்டு கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் இரவு முழுவதும் கடற்கரை ஓரங்களில் உன்னிப்பாகக் கவனித்து ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்தனர்.

வெப்பநிலையைக் கண்டறிய நவீன ஜி.பி.எஸ் கருவி

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் புதிதாக பொரிப்பகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பேசிய இளையராஜா, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கடல் அலைகள் அதிகமான இடங்களில் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு இரண்டு மீட்டர் இடைவெளியில் ஜி.பி.எஸ் உதவியுடன் மேப்பிங் செய்து அந்த இடங்களைக் தொடர்ந்து கண்காணித்து வந்தனர், என்றார்.

"இதனால் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை எந்தச் சேதமும் இல்லாமல் சேகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் கண்டெடுக்கப்படும் முட்டைகள் பொரிப்பகத்தில் மண்ணுக்கு அடியில் தோண்டி வைக்கப்பட்டது," என்றார்.

மேலும் "அந்த மண்ணின் வெப்பநிலையைக் கண்காணிப்பதற்கும், முட்டைகள் சேதமடையாமல் இருப்பதைக் கண்காணிப்பதற்கும் குழிக்குள் 'Data Logger' என்ற கருவி ஒன்று பொருத்தப்பட்டது. அந்தக் கருவியில் இருந்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வெப்பநிலை மற்றும் குழிக்குள் உள்ள முட்டைகளின் நிலை குறித்து மொபைல் ஃபோனுக்கு குறுஞ்செய்தி கிடைத்துக்கொண்டிருந்தது" என்று தெரிவித்தார்.

முன்கூட்டியே முடிவடைந்த சீசன்

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, கடந்த ஏழு ஆண்டுகளில் கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல் எண்ணிக்கையை விளக்கும் வரைபடம்

இதனால் பொரிப்பகத்தில் உள்ள முட்டைகளைத் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்க வசதியாக இருந்தது. அதோடு, இந்த ஆண்டு அதிகமாக ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டதால் அடுத்த ஆண்டு முட்டம் பகுதியில் புதிய பொரிப்பகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டின் ஆமைகள் முட்டையிடும் சீசன் நவம்பர் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் அதிக அளவு முட்டைகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் மே மாதத்தில் அது குறைந்து, மே மாதம் கடைசி வாரத்தில் சீசன் முடிவடைந்தது.

மே மாத வெயிலின் தாக்கம் காரணமாக ஆமைகள் கடற்கரை ஓரங்களில் முட்டையிடாமல் காயல் பகுதியில் முட்டையிடச் சென்றிருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனவே "இதுகுறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்று கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியிருக்க, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசன் முன்கூட்டியே முடிவடைந்ததாகக் கூறுகிறார் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் பகான் சுதாகர்.

பங்குனி ஆமை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த முட்டைகளில் ஒன்று பொரிந்து வெளியே வந்த பங்குனி ஆமைக் குஞ்சு ஒன்று கடலை நோக்கிப் பயணிக்கிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “மண்டபம், கீழக்கரை, தூத்துக்குடி சரகத்தில் 10 ஆமை முட்டை பொரிப்பகங்கள் உள்ளன. இந்த ஆண்டு மண்டபம் சரகத்தில் 17,731 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு 17,235 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. கீழக்கரை சரகத்தில் 1,645 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு 1,585 ஆமை குஞ்சுகளும், தூத்துக்குடி சரகத்தில் 4,629 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு 4,228 குஞ்சுகளும் கடலில் விடப்பட்டன," என்றார்.

மேலும் பேசிய அவர், கீழக்கரை கடற்கரை பகுதியில் பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அங்கு குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆமைகள் முட்டையிட்டுச் செல்கின்றன, என்றார்.

இந்த ஆண்டு, ஆமைகள் முட்டையிடும் சீசன் ஜூன் மாதம் கடைசி வாரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடல் காற்று மாறுபாட்டால் ஜூன் இரண்டாவது வாரத்தில், அதாவது 14 நாட்களுக்கு முன்கூட்டியே இந்த ஆண்டுக்கான ஆமைகள் முட்டையிடும் சீசன் முடிவடைந்தது.

கடல் காற்று மாறுபாட்டால், முட்டையிட வந்த ஆமைகள் தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதிகளில் முட்டையிட்டதாக அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படை வீரர்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

‘இந்த ஆண்டு ஆமைகளுக்கு ஏதுவான சூழல் இருக்கவில்லை’

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏதுவான சூழல் இருந்தது. அதனால் எதிர்பார்த்ததைப் போல் கடந்த மே மாத இறுதிவரை ஆமைகள் கடற்கரையில் முட்டையிட்டுச் சென்றன.

ஆனால் இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிடும் சீசனான மே மாத இறுதியில் வங்கக் கடலில் ஏற்பட்ட தீடீர் சூறைக்காற்றின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டது.

காற்றின் திசை மாறுபாடு காரணமாக ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வராமல் மணல் திட்டு மற்றும் கடலுக்கு நடுவில் உள்ள தீவுப் பகுதிகளில் முட்டையிட்டுச் சென்றுவிட்டன. இதனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட சீசன் முன்னதாக முடிவுற்றது, என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

தமிழகம் முழுவதும் கடலில் விடப்பட்ட 1.83 லட்சம் பங்குனி ஆமைக்குஞ்சுகள்

கடல் ஆமைகள் குஞ்சு பொரித்தல்
படக்குறிப்பு, தமிழகத்தில் இந்த ஆண்டு 1.83 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 1.83 லட்சம் ஆமைக் குஞ்சுகள் இந்த ஆண்டு கடலில் விடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் "இந்த ஆண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு 35 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன.

அவற்றில் குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும்.

இதற்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப் பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: