அழிவின் விளிம்பில் லெதர்பேக் ஆமைகள் : இந்த இனத்தை காப்பாற்ற முடியுமா?

பட மூலாதாரம், FUNDAOPRNCIPE_FFI
- எழுதியவர், ஹெலென் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் செய்தியாளர்
லெதர்பேக் (leatherback) ஆமைகள். கடலில் இருப்பதிலேயே மிகப்பெரிய ஆமைகள் இவைதான். கடினமான ரப்பர் போன்ற தோல் இருப்பதன் காரணமாக அவை லெதர்பேக் ஆமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஓராண்டில் நீண்ட தூரம் பயணித்து இடம்பெயரும் இந்த ஆமைகளால், பசிபிக் பெருங்கடலையும் கடக்க முடியும்.
ஆனால் மீன்பிடி வலைகள் அல்லது தூண்டில்களில் மாட்டிக்கொள்வது போன்ற அச்சுறுத்தலால், இந்த அறிய வகை உயிரினம் தற்போது அழியும் நிலையில் உள்ளதாக இயற்கை வள பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.
இதே சூழல் நீடித்தால், அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த லெதர்பேக் ஆமைகள் 60 ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும்.
இவற்றைக் காப்பாற்ற இன்னும் 10 ஆண்டுகளே உள்ளன. அதற்குள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டும் என்று எஃப் எஃப் ஐ என்றழைக்கப்படும் ஃப்ளோரா மற்றும் ஃபானா (Fauna & Flora) சர்வதேச அமைப்பு உட்பட பல கடல் வள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
"இந்த உயிரினத்தை நம்மால் பாதுகாக்க முடியும். இவற்றை பெருக்கம் செய்ய முடியும். ஆனால், அதற்கு அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும்" என்கிறார் அமெரிக்கன் மற்றும் கிரபியன் பகுதி எஃப் எஃப் ஐ-ன் திட்ட இயக்குநர் ஆலிசன் கன்
இந்த லெதர்பேக் ஆமைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கின்றன. அவை ஒரே இனமாக இருந்தாலும், வெவ்வேறு கடல்பகுதியிலும் வாழும் இந்த ஆமைகளின் இனப்பெருக்க முறை வித்தியாசமானதாகும். பசிபிக் கடலில் வாழும் லெதர்பேக் ஆமைகள், அழியும் ஆபத்தில் இருக்கின்றன. இந்நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு பசிபிக் கடல்களில் இருக்கும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
கிழக்கு பசிபிக் கடலில் இருக்கும் ஆமைகள் பெரும்பாலும், மெக்ஸிகோ மற்றும் கோஸ்டா ரிகா கடற்கரைளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அதே போல பனாமா மற்றும் நிகரகுவா பகுதியிலும் இவை முட்டையிடுவது வழக்கம்.
ஆனால், கடந்த 3 தலைமுறைகளாக, பெண் ஆமைகள் இங்கே வந்து முட்டையிடுவது 90 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது.

பட மூலாதாரம், JEREMY HOLDEN / FAUNA & FLORA INTERNATIONAL
"இந்த குறிப்பிட்ட வகை ஆமைகள் அழிந்தால் இவற்றுக்கு மாற்று என எதுவும் கிடையாது. ஏனெனில், இந்த குறிப்பிட்ட கடல்பகுதிக்கு இவை தனித்துவம் வாய்ந்தவையாகும்" என்கிறார் ஆலிசன் கன்.
இப்போது கடல் வளங்களை காக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் இந்த உயிரினங்களை பாதுகாப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று ஆலிசன் கூறுகிறார்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
இயற்கை வள ஆர்வலர்கள் இந்த வகை ஆமைகளை காக்கும் முயற்சியில் விரைவாக ஈடுபட்டு அதற்கான நடவடிக்கையை விரைவில் எடுத்தால் கிழக்கு பசிபிக் கடலில் வாழும் லெதர்பேக் ஆமைகளின் எண்ணிக்கையை பெருக்க முடியும்.
அதற்கு அடுத்த 10 வருடங்களில் 2 விஷயங்கள் செய்ய வேண்டும்:
•மீன்பிடி வலைகளில் மாட்டிக்கொள்வதால் ஓராண்டில் 200ல் இருந்து 260 லெதர்பேக் ஆமைகள் இறக்கின்றன. அதனை தவிர்க்க வேண்டும்.
•ஓர் ஆண்டிற்கு 7000-8000 வரையிலான குஞ்சுகள் அடைகாக்கும் கூடுகள் அமைப்பதன் மூலம் அவற்றை பாதுகாக்கலாம்.
கடல் ஆமைகளில் மிகவும் பெரியதான லெதர்பேக் ஆமைகள், 900 கிலோ எடை கொண்டதாகும். அதன் நீளம் ஆறு அடி.
கிழக்கு பசிபிக் கடலில் இருக்கும் இந்த லெதர்பேக் ஆமைகள், 1980களில் இருந்து, 90 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு அமைப்பின் அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியிலில் இவை இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வு Scientific Reports என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












