"என் பாலினத்தை பலரும் கேலி செய்வார்கள்" - திருநங்கை காவலர் அளித்த புகாரின் பின்னணி என்ன?

திருநங்கை நஸ்ரியா
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவலராக 2018ஆம் ஆண்டு காவல்துறையில் தனது பணியைத் தொடங்கிய நஸ்ரியா, தன் பாலினம் மற்றும் சாதி குறித்துத் தனது மேல் அதிகாரி இழிவாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், அவரது மேல் அதிகாரி நஸ்ரியாவை இரண்டு, மூன்று முறையே பார்த்துள்ளதாகவும் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே பொய்ப் புகார் எழுப்பி வருவதாகவும் திருநங்கை நஸ்ரியாவால் குற்றம் சாட்டப்படும் மேலதிகாரி மீனாம்பிகை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்தப் புகார் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருநங்கை நஸ்ரியா இந்திய அளவில் இரண்டாவது திருநங்கை காவலராகவும் தமிழ்நாட்டில் முதல் திருநங்கை காவலராகவும் 2018ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

இரண்டு ஆண்டுகள் ராமநாதபுரத்தில் பணியாற்றினார். பிறகு 2020ஆம் ஆண்டு இடம் மாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாக கோவையில் பணியாற்றி வருகிறார். ராமநாதபுரத்தில் பணியாற்றியபோதும் தான் துன்புறுத்தலை சந்தித்ததாகக் கூறி தற்கொலை முயற்சி மேற்கொண்டு அதற்குப் பிறகு கோவைக்கு இடம் மாற்றப்பட்டார்.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரியா, “கோவைக்கு பணியிடம் மாறி வந்தபோது ஓர் ஆண்டுக்காலம் ஆயுதப்படையில் பணியாற்றினேன்.

அதுவரையில் வேலை நன்றாகத்தான் சென்றது. ஒரு சிலர் பாலினத்தைக் குறிப்பிட்டுப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த போதிலும், சில நல்ல அதிகாரிகளும் இருந்தார்கள். இந்தப் பிரச்னை குறித்து இதற்கு முன்பு காவல் ஆணையரைச் சந்திக்க முயன்றபோது என்னை அனுமதிக்கவில்லை,” என்று கூறினார்.

ஒவ்வோர் இடத்திலும் இதே போன்ற துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஏற்கெனவே ராமநாதபுரத்தில் இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்று, நான் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அளவுக்குச் சென்றேன். அதற்குப் பிறகும் இதுபோல் நடந்துள்ளன.

ஆனால், நான் புகார் அளிப்பதற்குப் பதிலாக, அப்படி நடக்கும் போதெல்லாம் விடுப்பில் சென்றுவிடுவேன். இல்லையெனில் பணியிட மாறுதல் பெற்றுவிடுவேன். ஆனால், பலர் எனது பாலினத்தை வைத்துக் கேலி செய்தார்கள்.

நஸ்ரியா

சமீபத்தில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் பணியாற்றுமாறு கூறினார்கள். ஆய்வாளர் மீனாம்பிகை என்பவர்தான் நான் வேலை செய்யும் பிரிவின் பொறுப்பாளர். நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் அதைக் குறிப்பிட்டு என்னிடம் பேசுவார்,” என்று மீனாம்பிகை மீது நஸ்ரியா குற்றம் சாட்டினார்.

மீனாம்பிகை, தென் மாவட்டத்தில் தனது பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்தான் என்ற நஸ்ரியா, தன் பாலினத்தையும் சாதியையும் அவர் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறினார்.

மேலும், “என் ஊரில் இருந்து பணியிடம் மாறி இங்கு வந்தால், இங்கும் சாதி பார்க்கப்படுகிறது. காவல் ஆணையரை சந்தித்து இந்தப் புகாரைத் தெரிவித்தேன். அவரும் ஆய்வாளரை எச்சரித்திருந்தார்.

ஆனால், அதற்குப் பிறகும்கூட ஆய்வாளர் மீனாம்பிகையின் தொந்தரவு அதிகமானது. என் வேலைப்பளுவை அதிகமாக்குவது போன்ற மனரீதியிலான துன்புறுத்தல்களைச் செய்து வந்தார். அந்த அழுத்தத்தில் என்னால் இனி பணியாற்ற முடியாது என்பதால் தற்போது வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்துவிட்டேன்,” என்று நஸ்ரியா தெரிவித்தார்.

“அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றுதான் பணியில் சேர்ந்தேன். அந்தப் பணியை இனி தொடர முடியாது என்பதால் ராஜினாமா கடிதத்தை ஆணையரிடம் கொடுக்க உள்ளேன்,” என்றார்.

பாலகிருஷ்ணன்
படக்குறிப்பு, பாலகிருஷ்ணன்

நஸ்ரியாவின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை காவல் ஆணையர் சந்தீஷ் தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார்.

அவர் மீது ஏற்கெனவே காவல்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தக் குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நஸ்ரியாவால் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் மீன்பாம்பிகையிடம் பேசினோம்.

தற்போது கோவையில் சிங்காநல்லூர் காவல் நிலைய புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வரும் அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, காவலர் நஸ்ரியாவின் அனைத்துக் குற்றச்சாட்டுகளுமே பொய்யானவை எனத் தெரிவித்தார்.

“நஸ்ரியா பணிக்குச் சரியாக வருவதில்லை. அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அதன்மூலம் ஏற்கெனவே அவர் பணியிலிருந்து விலகி காவல் ஆணையர் மூலம் மீண்டும் பணியில் இணைந்தார்.

ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பிரச்னைகளை உருவாக்கியிருந்தார். அவர் மீதான அறிக்கையை நானும் உதவி ஆணையரும்தான் வழங்கியிருந்தோம்,” என்றார் மீனாம்பிகை.

சந்தீஷ்
படக்குறிப்பு, சந்தேஷ்

மேற்கொண்டு பேசியவர், “நீண்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு எனச் சென்றுவிடுவார். அவர் பணிக்கே வருவது கிடையாது. குழந்தைகள் பிரிவு என்பதால் எனக்கு காவல் நிலையத்தைவிட பெரும்பாலும் வெளியில்தான் வேலை அதிகமாக இருக்கும். உதவி ஆய்வாளரும் எழுத்தரும்தான் அவருக்குப் பணிகளை வழங்குவார்கள்.

நான் அதிகபட்சம் இரண்டு, மூன்று முறைதான் அவரைச் சந்தித்திருப்பேன். அவருடன் அதிகம் பேசியதுகூட கிடையாது. ஆனால், நான் சொல்லித்தான் அவருக்குப் பணி வழங்குவதாக நினைத்துக்கொள்கிறாரா என்று தெரியவில்லை,” என்று கூறினார் மீனாம்பிகை.

மேலும், நஸ்ரியா மீது கொடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவே அவர் இப்போது பொய்ப் புகார் எழுப்பி வருவதாகவும் கூறுகிறார்.

கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, “புகார் அளித்துள்ள காவலர் நஸ்ரியா பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அதனால் முழுமையான விசாரணை நடத்துமாறும் ஆணையர் என் தலைமையில் குழு அமைத்துள்ளார்.

விசாரணை தற்போதுதான் தொடங்கியுள்ளது. இதை மேம்போக்காக அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்று கூறினார்.

அதேவேளையில், “புகார் அளித்துள்ள காவலரும் பல தவறுகள் செய்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார். இத்தகைய பின்னணி உள்ள ஒருவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் என்பதால், அவரது புகாரை கவனமாகவே விசாரிக்க வேண்டும்,” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: