டிமான்டி காலனி 2 ஊடக விமர்சனம்: முதல் பாகத்திற்கு நிகராக திகில் கிளப்பியதா?

பட மூலாதாரம், AjayGnanamuthu/X
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள பேய்க்கதைளால் சூழப்பட்ட ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த் அபிஷேக் ஜோசஃப் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
அப்படம் திகில் பட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது. இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டி காலனி - 2’ வெளிவந்திருக்கிறது.
முதல் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துதான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி மீண்டும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான டிமான்டி காலனி 2 எப்படி இருக்கிறது? முதல் பாகத்தைப் போலவே இதுவும் திகில் கிளப்பியதா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் கதை என்ன?
முதல் படத்தின் கதை ஒரு சிறிய வீட்டினுள் நடக்கும். இரண்டாம் பாகத்தின் கதை ஒரு சைனீஸ் உணவகத்தினுள் நடக்கிறது.
டெபி (பிரியா பவானி சங்கர்) தனது கணவனை இழந்த துயரில் இருக்கிறார். அவரது துயர் தாங்க முடியாததாகி, அதுவே அவரை ஆட்டிப் படைக்கிறது. தனது வீடு முழுதும் தனது கணவரின் புகைப்படங்களால் நிரம்பியிருக்க, ஆற்றாமை உச்சகட்டத்துக்குச் சென்று, இறந்த கணவரின் பதப்படுத்திய விந்தணுவைப் பயன்படுத்தி, கருவுற நினைக்கிறார் டெபி.
முதல் படத்தில் இறந்துபோன ஸ்ரீனிவாசனுக்கு (அருள்நிதி) ஓர் இரட்டைச் சகோதரர் (ரகு) இருப்பதாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் முதல் பாகத்தில் காட்டப்பட்ட சபிக்கப்பட்டத் தங்கச் சங்கிலி மீண்டும் திருடப்பட்டு, பேய் மீண்டும் கிளம்புகிறது.
இதனிடையேம் டெபி, ரகு, ஒரு துறவி ஆகியோர் ஒரு சைனீஸ் உணவகத்தில் சிக்கிக்கொள்ள, அங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவர்களுக்கு என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
‘தூய்மையான திகில் அனுபவம்’

பட மூலாதாரம், AjayGnanamuthu/X
முதல் படத்தில், காமெடி, குத்துப்பாட்டு ஆகியவை இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் திகிலாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில், அந்த திகிலை ஒருபடி மேலே எடுத்துச் சென்று, ஒரு தூய்மையான திகில் அனுபவத்தை வழங்க இயக்குநர் அஜய் ஞானமுத்து முயன்றிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
“முதல் பாகத்தின் நிகழ்வுகளை நினைவூட்டிய பிறகு, இத்திரைப்படம் பார்வையாளர்களை உடனடியாக ஒரு பயங்கரமான கொடுங்கனவு போன்ற உலகத்தில் மூழ்கடிக்கிறது,” என்று அந்த விமர்சனம் தெரிவிக்கிறது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ், “முதல் பாகத்தின் இரண்டு முக்கிய அம்சங்களில் ஒன்று, பேயின் சித்தரிப்பு. அதாவது தப்பிக்க முயலும் ஹீரோவைவிட ஆவி மிகவும் சக்தி வாய்ந்தது. மற்றொன்று, சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை. இந்த இரண்டு அம்சங்களும் இப்படத்தில் ஓரளவு உள்ளன,” என்கிறது இந்த விமர்சனம்.
தி இந்து, இந்த திகில் அனுபவத்துக்குத் துணையாக, இயக்குநர் கண்ணாடியிலிந்து பேய் வருவது, வௌவால் கூட்டம், நரகத்திற்குச் செல்வது போன்ற பழைய முறைகளைப் பயன்படுத்தினாலும், இயக்குநரிடம், எதிர்கிறிஸ்து, சாத்தான் வழிபாட்டுக் குறியீடுகள், டிமான்டி-யின் ஆவி ஆகியவையும் உள்ளன என்கிறது.
திரைக்கதை எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், RedGiantMovies_/X
இப்படத்தின் திரைக்கதை, பலமாக இருப்பதாகக் கூறுகிறது தி இந்து ஆங்கில நாளிதழின் விமர்சனம்.
“கதாபாத்திரங்கள் தெளிவான உந்துதல்களால் இயக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தனது இறந்த கணவரைப் போல் வேடமிட்டு வரும் பேயின் வஞ்சகத்துக்கு டெபி பலியாவது, அவளது தீவிரமான துயரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த குணாதிசயம் புற்றுநோயில் இருந்து அவளது கணவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவளது போராட்டத்தின் ஃப்ளாஷ்பேக்குகள் மூலம் நிறுவப்படுகிறது. அதேபோல, ஒரு கதாபாத்திரம் பிறருக்கு உதவுவது, அதன் தாயில்லாத குழந்தைப் பருவத்தின் தாக்கத்தை நியாயப்படுத்துகிறது,” என்கிறது தி இந்து விமர்சனம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ், இயக்குநர் அஜய் ஞானமுத்து, முதல் படத்தின் தாக்கத்தை நன்கு அறிந்திருக்கிறார், எனவே, முதல் படம் முடிவடையும் இடத்திலேயே இப்படம் துவங்குகிறது," என்று கூறுகிறது.
மேலும் “இயக்குநர் புதிதாக ஒன்றை முயன்று பார்க்க விரும்பினாலும், முதல் படத்தை நமக்கு நினைவூட்டும் வகையில் திரைக்கதையை மீண்டும் அந்த நிகழ்வுகளுக்குக் கொண்டு செல்வதாக,” தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
உதாரணத்துக்கு, டெபி முதல் பாகத்தில் இறக்கும் ஜோசியர் வீட்டில் ஸ்ரீனிவாசனை சந்திப்பது, பின்னர், ஸ்ரீனிவாசனுக்கு ரகு என்ற இரட்டைச் சகோதரன் இருப்பதைக் கண்டறிவது போன்றவை, “டிமான்டி காலனி 2இல் சில சிறந்த காட்சிகளை உருவாக்குகிறது. இதில் ஒரு விசித்திரமான பரிச்சயம் உள்ளது. உண்மையான பேய் வருவதற்கு முன்பே திகில் தொடங்கி விடுகிறது,” என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
பிரியா பவானி சங்கரின் நடிப்பு எப்படி?

பட மூலாதாரம், Think Music India/YouTube
பிரியா பவானி சங்கர் தனது நடிப்பால், இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிப்பதாக ஊடக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம், “பிரியா பவானி சங்கரின் திரைப்பட வாழ்வில் டிமான்டி காலனி-2’ ஒரு முக்கியமான படமாக இருக்கலாம்,” என்கிறது.
மேலும், “அவரது நடிப்பை உள்வாங்குவதற்கு கொஞ்ச நேரம் பிடிக்கும். மீண்டும் பிரியா அழுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், அவருடைய கதாப்பாத்திரத்தில் சோகத்தைவிட அதிகமாக ஏதோ இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஏக்கமும் இனம் புரியாத ஒன்றைத் தேடுவதும் உள்ளது. அதை பிரியா சரியாக வெளிப்படுத்துகிறார்,” என்று அந்த விமர்சனம் கூறுகிறது.
அருள்நிதிக்கு இரண்டு வேடங்களில் அதிக வேலை கொடுக்கப்படவில்லை என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம். அதேநேரம், சமயம் தமிழ் தனது விமர்சனத்தில், இரண்டு வேடங்களில் கொடுத்த வேலையை அருள்நிதி கச்சிதமாகச் செய்திருப்பதாகக் கூறியிருக்கிறது.
ஆனால், தி இந்து ஆங்கில நாளிதழ் நடிகர்களின் நடிப்பு, திரைக்கதையில் இருக்கும் கதாப்பாத்திரங்களின் பயங்கரத்தையும், தவிப்பையும், நிதர்சனமாகப் படம் பிடிக்கத் தேவையான தீவிரத்தன்மையை வெளிப்படுத்தவில்லை, என்கிறது.
“இது பார்வையாளர்களைக் கதையோடு உணர்வுபூர்வமாக ஒன்றுவதைத் தடுப்பதாகவும்,” விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
குறைகளைத் தாண்டி…

பட மூலாதாரம், Think Music India/YouTube
இப்படத்தில் இருக்கும் குறைகள் குறித்துப் பேசும் சமயம் தமிழின் விமர்சனம், “படத்தில் இருக்கும் ஒரு சில திருப்புமுனைகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இருப்பினும் முதல் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் திருப்திக்கும், திகிலுக்கும் பஞ்சம் இல்லை,” என்கிறது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ், படத்தில் உள்ள சில திருப்பங்களும் வழமையானவை என்கிறது.
“அவற்றைப் பல மைல் தூரத்திலிருந்தே ஊகித்துவிடலாம். உதாரணமாக, டெபி நன்கு எங்கேயோ பார்த்தது போன்ற ஒரு குழந்தையைச் சந்திக்கிறார், அது யார் என்று நமக்கு உடனே தெரிந்துவிடுவதாக,” அந்த விமர்சனம் கூறுகிறது.
தி இந்து ஆங்கில நாளிதழின் விமர்சனம், படத்தின் விஷுவல் எஃபெக்ட் காட்சிகளின் தரம் குறைவாக உள்ளதாகக் கூறுகிறது.
“உண்மையிலேயே அதிவேகமான திகில் அனுபவத்தைத் தரக்கூடிய படத்தின் திறனை இது குறைக்கிறது. இந்தக் காட்சிகளில் மெருகூட்டல் இல்லாததால், உத்தேசிக்கப்பட்ட விளைவுக்கும், திரையில் தெரியும் எதார்த்தத்திற்கும் இடையே ஒரு துண்டிப்பு ஏற்படுகிறது,” என்கிறது இந்த விமர்சனம்.
‘ஒரு திகில் திரைப்படத் தொடரின் துவக்கமா?’

பட மூலாதாரம், RedGiantMovies_/X
இப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய புதிர்களும் பதிலளிக்கப்படாத கேள்விகளும் அடுத்த பாகத்தை சூசகமாகக் குறிக்கின்றன.
இது பார்வையாளர்களை அடுத்த பாகத்தை எதிர்நோக்க வைப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழின் விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், பெரும்பாலும் நம்மை ஈர்க்கும் திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பைத் தவிர, இப்படத்தில் குறைகளைக் கடந்துபோக வைப்பது, என்னவெனில், “டிமான்டி காலனி-2, தமிழ் சினிமாவில் வெளிவந்திருக்கும் மிக அழுத்தமான இரண்டாம் பாகங்களில் ஒன்று."
"படத்தின் சபிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மீண்டும் திருடப்பட்டால், நாம் அடுத்த பாகத்தையும் மகிழ்ச்சியாகப் பார்க்கலாம்.”
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












