இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு - பிபிசி தமிழின் கள ஆய்வு

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்து கள நிலைமையை ஆராய்ந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாக இந்த விஷயங்களை விளக்கினார்.


யுனிசெப் கருத்தை நிராகரிக்கும் இலங்கை
எவ்வாறாயினும், இலங்கையில் சிறுவர்களுக்கு போஷாக்கற்ற நிலைமை காணப்படுவதாக யுனிசெப் வெளியிட்ட கருத்தை, இலங்கை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.
சுகாதார அமைச்சு என்ற விதத்தில், தாம் அதனை ஏற்றுக் கொள்ள போவதில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சிறி சந்திரகுப்தா குறிப்பிட்டார்.
தேசிய மட்டத்திலான ஆய்வுகளின் பிரகாரம், அவ்வாறான நிலைமை கிடையாது என அவர் கூறுகின்றார்.
இலங்கைக்குள் உக்கிரமாக போஷாக்கற்ற நிலைமை எப்போதும் உருவாகாது என கூறிய அவர், போஷாக்கற்ற நிலைமையினால் சிறுவர்கள் எவரும் உயிரிழக்க மாட்டார்கள் என குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் அவ்வாறு கூறுகையில், இலங்கையில் மிக பெரிய சிறுவர் மருத்துவமனையான கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் தீபால் பெரேரா மாறுப்பட்ட கருத்தொன்றை வெளியிட்டார்.
தமது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களில் அதிகளவானோருக்கு போஷாக்கற்ற நிலைமை காணப்படுவதாக அவர் கூறுகின்றார். போஷாக்கற்ற நிலைமை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
யுனிசெப் ஒரு கருத்தை கூறிய நிலையில், சுகாதார அமைச்சு அதனை மறுத்திருந்தது. எனினும், சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் மருத்துவர் யுனிசெப் வெளியிட்ட கருத்தை உறுதிப்படுத்துகின்றார்.
மலையக பகுதிகளில் என்ன நிலை?
இவ்வாறான மாறுபட்ட கருத்துக்களை கொண்ட ஒரு சூழ்நிலையில், பிபிசி தமிழ், மலையகத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் சிறார்களின் நிலைமை குறித்து ஆராய்ந்தது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தமிழ் சிறுவர்களின் நிலைமை குறித்து ஆராய்ந்தது.
கேகாலை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட பகுதிகளுக்கு சென்ற வேளையில், ஏதோ ஒரு வகையில் போஷாக்கற்ற நிலைமையினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.

நாம் சென்ற அனைத்து பெருந்தோட்ட பகுதிகளிலும், இவ்வாறான சிறார்கள் வாழ்ந்து வருவதை காண முடிகிறது.
கேகாலை - யட்டிதெரிய தோட்டம் - ரங்கல்லை பிரிவைச் சேர்ந்த மலையக தமிழ் சிறுவர்கள் ஆகியோரின் மகளான திலுக்ஷிக்கு தற்போது 9 வயது.பிறப்பு முதலே, போஷாக்கு குறைவு காரணமாக இந்த சிறுமி, இன்று வரை ஒரே இடத்தில் முடங்கிய நிலையில் இருப்பதை காண முடிகின்றது.
பெற்றோரின் அரவணைப்பு மற்றும் உதவியின்றி, இந்த சிறுமிக்கு ஒரு அடியேனும் முன்நோக்கி நகர முடியாத நிலைமையில், அவர் கட்டிலில் முடங்கி இருக்கின்றார்.
"சத்தான சாப்பாடு கிடைக்கவில்லை"

இது தொடர்பில் திலுக்ஷியின் தந்தை ரஜினிகாந்த், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
''முடியாத பிள்ளைக்கு, பிறப்பில் இருந்தே அப்படி தான். நடக்க முடியாது. வலிப்பு இருக்கின்றது. ரத்த அழுத்தம் இருக்கின்றது. தலையில் தண்ணீர் இருக்கின்றமையினால், சாப்பிட முடியாது. சோறு கொடுப்பது குறைவு. கஞ்சி கொடுக்கவும் பயம். அதை விழுங்குவதற்கு கஷ்டம். தொண்டை சிறியது. நான் தோட்டத்தில் தான் வேலை செய்கிறேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் வேலை செய்கின்றேன். மாதம் 15 நாட்கள் தான் வேலை. 15 நாட்கள் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற கஷ்டம். திரிபோஷா போன்ற சாப்பாட்டையே இவர் சாப்பிடுவார். வேறு உணவை சாப்பிடுவது குறைவு. அம்மாவுக்கு சத்தான சாப்பாடு பிள்ளைக்கு சத்தான சாப்பாடு கிடைக்கவில்லை. அப்போது விலைகள் குறைவு தான். இருந்தாலும் எங்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை. அந்த சூழ்நிலையினால் தான் என்னுடைய பிள்ளைக்கு இப்படி நடந்தது" என்கிறார் ரஜினிகாந்த்.


"பலாக்காய், ரொட்டி தான் சாப்பாடு"
இதேவேளை, கேகாலை - அரநாயக்க - தோத்தல்ஓயா பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன் மற்றும் சகுந்தலாதேவி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்தே நோய்கள் காணப்படுகின்றன.
ஒரு சிறுவனுக்கு இருதய நோய் காணப்படுகின்ற நிலையில், மற்றைய 9 மாத குழந்தைக்கு வயிற்றில் நோய் ஒன்று காணப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
''பிள்ளை பிறக்க இருக்கும் போது, போஷாக்கு சாப்பாடுகள் இல்லை. இப்போதும் அதே நிலைமை தான் காணப்படுகின்றது. இவங்களுக்கும் பருப்பு, சோயா, பிலாகாய், ரொட்டி, சோறு இது மட்டும் தான் எங்கள் சாப்பாடு. மாற்ற சாப்பாடுகள் எங்களுக்கு இல்லை. இல்லையென்று சொன்னால் அவ்வளவு தூரம் கஷ்டம். இருக்கதை தானே கொடுக்கனும். அதை தான் நாங்கள் செய்கின்றோம்" என ரவிசந்திரன் தெரிவிக்கின்றார்.
இந்த குழந்தைகளின் தாய் சகுந்தலாதேவி, பிபிசி தமிழுக்கு கருத்துரைத்தார்.
''பிள்ளைகள் வயிற்றில் இருக்கும் போதும் சத்தான உணவு இல்லை. பிள்ளைகள் பிறந்தும் சத்தான உணவுகளை கொடுப்பது இல்லை. சரியான விலை. எந்த பொருட்களை எடுத்தாலும் அதிக விலை தான். பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுப்பதாக இருந்தாலும் சரியான கஷ்டம். பிள்ளைகளுக்கு எந்த உணவுகளும் கொடுப்பதற்கு இல்லை. சத்தான உணவுகளை கொடுப்பதற்கும் எங்களுக்கு வழிகள் இல்லை என்கின்றார் சகுந்தலாதேவி.

"மருந்து சரியாக கொடுக்க முடியவில்லை"
இதேவேளை, கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை - லெவன்ட் தோட்டத்தில் வாழும் சிறுவர்களின் நிலைமை குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.
இந்த பகுதியில் வாழும் சிறுவர்களில் சிலர் போஷாக்கு பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.
போஷாக்கு குறைவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனது மகன் தொடர்பில் நிரூபா, பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.
''அவர் ஆரம்பத்தில் பிறந்த போது சின்னதாக வலிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு உடம்பில் சீனி தன்மை குறைவடைந்தது. அதற்கு பிறகு வலிப்பு கூடுதலாக வர தொடங்கியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருத பிரச்சினை இருக்கின்றது. இருதய துடிப்பு அதிகம். இரத்த ஓட்டத்தில் பிரச்னை இருக்கின்றது. அதற்கு பிறகு சத்திர சிகிச்சை செய்தார்கள். சத்திர சிகிச்சை செய்தும் சரி வரவில்லை. அதற்கு பிறகு வலிப்பு ஏற்பட்டு, இப்போது மூளை வளர்ச்சி குறைவடைந்துள்ளது. அவருக்கு எல்லா செயற்பாடுகளும் குறைவாக இருக்கின்றது.

அவருக்கு கொடுப்பதற்கு சரியான மருந்தும் எங்களுக்கு கிடைக்கிறது இல்லை. மருந்து கொடுத்தால் வலிப்பு குறையும். ஆனால் மருந்து சரியாக கொடுக்க முடியவில்லை. இப்போ இருக்க நிலைமைக்கு மருந்து கிடைத்தால் நிம்மதி. மருந்து இல்லாத பிரச்சினை தான். அவங்களுக்கான போஷாக்கு உணவு கொடுக்குறத்துக்கோ, திரிபோஷா எதுவும் கிடைக்குறது இல்லை. விட்டமின் வாங்குறது கூட கஷ்டமாக இருக்கு" என நிரூபா தெரிவிக்கின்றார்.
மலையக பெருந்தோட்ட பகுதிகள் மாத்திரமன்றி ஏனைய பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றமை சாதாரண ஒரு விடயம் என கேகாலை மாவட்ட வைத்திய பணிப்பாளர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.எவ்வாறாயினும் நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கக்கூடிய பொருளாதார நிலைமை காரணமாக இந்த போஷாக்கின்மை நிலைமை சற்று அதிகரித்து இருக்கக் கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.
போஷாக்கு பிரச்சினை இல்லை என சுகாதார அமைச்சு கூறினாலும், மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மத்தியில் போஷாக்கு பிரச்னை காணப்படுகின்றமையை காண முடிகின்றது.
நாம் சென்ற ஒவ்வொரு தோட்டப் பகுதியிலும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட சிறார்களை எம்மால் அடையாளம் காண முடிந்தது.
இலங்கையர்களிலுள்ள மலையக மக்கள் என்றுமே வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்த வந்த சூழ்நிலையில், இன்று பொருளாதார நெருக்கடி அவர்களை எழுந்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கத்தை செலுத்தியுள்ளமையை காண முடிகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













