மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.340க்கு விற்பனை - கலங்கும் இலங்கை குடும்பங்கள் - "எல்லா பணமும் தீர்ந்து போச்சு"

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் வரலாறு காணாத வகையில் மண்ணெண்ணெய் விலை தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை, நேற்று நள்ளிரவு முதல் 340 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 253 ரூபா விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. மண்ணெண்ணெய்க்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுகிறது. மண்ணெண்ணெய் பெற்றுத் தருமாறு மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவி வந்தது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு என பல்வேறு பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசலுக்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது.
கியூ.ஆர் நடைமுறையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமையினால், தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது.

எனினும், மண்ணெண்ணெய்க்கான தட்டுப்பாடு தொடர்ந்து காணப்படுகின்றமையினால், அதை பெற்றுத் தருமாறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,
இலங்கையில் மீனவ சமூகம், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் குறைந்த வருமானத்தை பெறுவோர் என பலரும் மண்ணெண்ணெய் பயன்படுத்தி வருகின்றனர்.
மண்ணெண்ணெய் கோரி போராட்டம்

மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி, சிலாபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுப் பெற ஆரம்பித்துள்ளன. சிலாபம் பகுதியிலுள்ள மீனவர்கள் கடந்த 7 நாட்களாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சிலாபம், கருக்குப்பனை, வென்னப்புவு, கல்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சுமார் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
சிலாபம் நகர சபைக்கு முன்பாக கூடாரங்களை அமைத்து, மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உரிய வகையில் மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இதுவரை நடத்தப்பட்ட போராட்டம், தற்போது மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறும் வலியுறுத்தி நடத்தப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், பிபிசி தமிழுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
''அரசாங்கம் இதுவரை எங்களுக்கு எந்தவொரு முடிவும் தரவில்லை. இது தான் மீனவர்களின் தலை எழுத்து. மீனவர்களை இந்த அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளதாக நினைக்கின்றேன்" என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
''எங்களுக்கு கடல் தான் எங்களுக்கு தொழில். வேறு எந்தவொரு தொழிலும் எங்களுக்கு தெரியாது. ஐந்து நாட்களுக்கு மேல் இந்த இடத்திலேயே இருக்கிறோம். இந்த பிள்ளைகளின் பாரம் கூட குறைந்தது. வங்கில வைத்திருந்த பணத்தை செலவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டோம். மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். காலையில் சாப்பாட குடுக்கக்கூட காசு இல்ல. எங்கட துக்கத்தை கூட பார்ப்பதற்கு யாரும் இல்ல. நாங்கள் பிடிக்கின்ற மீன்களினால் பலர் சாப்பிட்டு, பசி இல்லாமல் இருந்திருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்கு இன்று சாப்பிடக்கூட இல்லை. நாங்கள் வீதியில் இருக்கின்றோம்." என மீனவ பெண் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, பழைய விலைக்கு மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற வேண்டும் எனவும், அவ்வாறு பழைய விலைக்கு மண்ணெண்ணை விநியோகம் இடம்பெறாத பட்சத்தில், தமது போராட்டம் நினைத்து பார்க்காத அளவிற்கு வலுப் பெறும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் கருத்து.
குறைந்த வருமானத்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள், மீனவர்கள், பெருந்தோட்டத்துறை சார்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய்க்காக நிவாரண நிதி உதவிகளை வழங்க அரசாங்கத்திடம் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.
மண்ணெண்ணெய் விலை திருத்தம் மேற்கொள்வது, பல வருடங்களாக தேவைப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்பட்டமையும், பெட்ரோலிய கூட்டுதாபனம் நட்டமடைவதற்கு ஒரு காரணம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












