காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு

பட மூலாதாரம், Getty Images
களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பகல் 10 மணியளவில் சென்றுள்ளார்.
இவ்வாறு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்த சிறுமி கோழி இறைச்சியைக் கொள்வனவு செய்து, மீண்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சிகள், அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், குறிப்பிட்ட சிறுமியைத் தேடுவதற்காக காவல்துறையின் பல குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பண்டாரகம காவல்துறையினருக்கு மேலதிகமாக, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுமார் இருபதுக்கும் அதிகமானோரின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













