இலங்கை நெருக்கடி - ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ பற்றி திருகோணமலை மக்கள் கருதுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
"தற்போது இருக்கும் ஒற்றுமை நீடித்திருந்தால், நாட்டில் முன்னேற்றம் ஏற்படுவது எளிதாகும்" என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் சாமுவேல்.
நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டது குறித்து நம்பிக்கையையும், ஏமாற்றத்தையும் திருகோணமலையில் கலவையாகக் காண முடிகிறது. அவர் தேர்தலில் தோற்றவர் என்ற குரல்கள் இங்கு கேட்கின்றன.
ஒப்பிட்டுப் பார்த்தால் திருகோணமலையில் கொழும்பு நகரைக் காட்டிலும் பெட்ரோல், டீசல் வரிசைகள் குறைவுதான். எனினும் எப்போதாவதுதான் விநியோகம் நடைபெறுகிறது என்பதால் மக்கள் தவிக்க நேரிடுகிறது.
"விலைவாசி உயர்வையும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டையும் குறைக்க வேண்டும்" என்று நாடு முழுவதும் ஒலிக்கும் குரலைத்தான் திருகோணமலையும் எதிரொலிக்கிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலை இரண்டு மடங்கு வரை உயர்ந்திருக்கிறது.
தினமும் வருவாய் ஈட்ட வேண்டிய நிலையில் இருக்கும் கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
"நிமிடத்துக்கு நிமிடம் பொருள்களின் விலை அதிகரிக்கிறது. பொருள்களின் விலை எப்போது உயருமோ என்ற அச்சத்திலேயே தூங்கி எழுந்து விலைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது" என்றார் வசந்தி.

சில நாள்களுக்கு முன்பு பிபிசி தமிழிடம் பேசிய இப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க , " [வரும் நாள்களில்] விலைவாசி உயரும். எரிபொருள், அந்நியச் செலவாணி ஆகியவற்றின் தட்டுப்பாட்டால், தொழில்கள் மூடப்படும். வங்கிகள் நிறைய செயல்படாத கடன்களைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு அதைச் செய்ய முடியாது. இது கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்டது. நிறைய திவால்கள் நிகழும். இதன் பொருள் பொருளாதாரம் மோசமாகும் என்பதுதான்" என்று தெரிவித்திருந்தார். பிரதமரான பிறகும் இதே கருத்தையே அவர் கூறியிருக்கிறார்.
ஆக, இலங்கையின் விலைவாசி உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடுவதற்கான வாய்ப்பில்லை என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது.
ரணிலின் நியமனம் குறித்து கொழும்பு நகரின் காலி முகத் திடலில் போராடுவோரில் பலர் ஏமாற்றம் தெரிவித்திருக்கும் நிலையில், திருகோணமலையிலும் அதுபோன்ற குரல்களைக் கேட்க முடிகிறது.
திருகோணமலையில் தின்பண்டங்களை விற்கும் நளினுக்கு ரணிலின் நியமனம் மிகவும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷவே இதற்குப் பரவாயில்லை என்கிறார் அவர்.

"ஏழை மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் சிரமப்படுகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோருகிறோம். ஆனால் அவர் பதவி விலகப் போவதும் இல்லை. இலங்கை சீராகப் போவதும் இல்லை" என்ற தனது விரக்தியை அவர் வெளிப்படுத்தினார்.
புஷ்பா ராணி வீட்டு வேலை செய்கிறார். ஏற்கெனவே விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில், ஊரடங்குச் சட்டம் அவரின் தினசரி வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. ஊரடங்குச் சட்டத்தால் தம்மால் அன்றாட பிழைப்புக்கான வேலைகளைச் செய்யவதற்கு பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்கிறார் அவர்.
"குழந்தைகள் பசியில் கிடக்கிறார்கள்" என்றார் புஷ்பா ராணி.
நாடாளுமன்றத்தில் ஓர் இடம்கூடப் பெறாத ஒருவரை பிரதமராக நியமித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது போன்ற குரல்களை திருகோணமலையிலும் கேட்க முடிகிறது.

கடந்த 9-ஆம் தேதி காலி முகத் திடலில் நடந்த வன்முறை அதைத் தொடர்ந்து அரசுக்கு ஆதரவானவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. காலை முதல் மதியம் வரை ஊரடங்கு தளர்த்தப்படுகிறது.
அந்த நேரத்தில் மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு கடைகளில் குவிகிறார்கள். சாலைகளில் வாகனங்கள் திரளாகச் செல்கின்றன. பிற்பகலில் ஊர் அடங்கி விடுகிறது. கடைகள் அடைக்கப்படுகின்றன. சாலைகளில் பெரும்பாலும் காவல்துறையினரின் வாகனங்கள் மட்டுமே செல்கின்றன.
எனினும் ஊரடங்கில் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் முழுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், இப்போது சுமார் 12 நேரம் வரை தளர்வுகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
திருகோணமலையில் அவ்வப்போது அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. கடந்த காலங்களில் இனக் கலவரங்களைக் கண்ட இந்தப் பகுதியில் அவற்றை மறந்து மக்கள் போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியான போராட்டங்கள் என்று ஏதுமில்லை.
திருகோணமலையில் பதற்றம் குறைவாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை கணிசமான எண்ணிக்கையில் பார்க்க முடிகிறது. கொழும்பு நகருக்குப் பதிலாக தொலைவில் உள்ள நகரங்களை சுற்றுலாப் பயணிகள் தேர்வு செய்கிறார்கள்.

திருகோணமலை இப்போது முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இங்கிருக்கும் கடற்படைத் தளத்தில் தங்கியிருக்கிறார் என்பதுதான்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோபத்தைக் காட்டிலும் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் கவலைகளே பலருடையே பேச்சிலும் தென்படுகிறது.
"சரியான தலைமை வந்து, போராட்டங்கள் முடிவுக்கு வர வேண்டும். அதுவே எங்களது விருப்பம்" என்கிறார் பிரகாஷ்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








