இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை சுற்றி வளைத்து மக்கள் போராட்டம்

இலங்கை பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் தங்காலை பகுதியிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்தை சுற்றி வளைத்து போராட்டம் நடத்திய மக்களை காவல்துறையினர் கண்ணீர் புகை மூலம் கலைக்க முயன்றனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றது.

இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு, ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ குடும்பமே காரணம் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், நாடு தழுவிய ரீதியில் தற்போது மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், தங்காலை பகுதியிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை மக்கள் இன்று சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொழும்பு - கதிர்காமம் வீதியை மறித்த போராட்டக்காரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாதுகாப்பு பிரிவினரால் முடியாது போயுள்ளது.

போராட்டக்காரர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்திற்கு செல்ல முயற்சித்துள்ளதை அடுத்து, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதன் போது, மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில், அவர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கண்ணீர் புகை பிரயோகத்தை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றாலும், தங்காலை பகுதியில் அங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவின் திஸ்ஸமஹராம பகுதியிலுள்ள வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைவதற்கு முயற்சித்த நிலையில், பாதுகாப்பு பிரிவிற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக போலீஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் உருவப்படங்களை சேதப்படுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, நுகேகொடை - மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்யேக வீட்டை கடந்த 31ம் தேதி சுற்றி வளைத்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இதன்போது பாதுகாப்பு பிரிவிற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், பலர் காயமடைந்ததுடன், 3 கோடி ரூபாவிற்கும் அதிக சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், நேற்றைய தினம் ஊரடங்கு அமலில் இருந்த போதும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்திருந்தன.

இன்றும் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு- யாருக்கு என்ன துறை?

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடியை சமாளிக்கத் தவறியதாகக் கூறி கொழும்பில் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய எதிர்கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸா உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர்கள்

இலங்கையில் நீடித்து வரும் மோசமான நெருக்கடிக்கு மத்தியில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு அலி சாப்ரியிடமும் கல்வித்துறை தினேஷ் குணவர்த்தனவிடமும், வெளியுறவுத்துறை ஜீ.எல் பீரிஸிடமும் நெடுஞ்சாலைத்துறை ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விதமாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி அமைச்சரவையில் சேரும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். இது தொடர்பான தகவலை அவரது ஊடக அலுவலகம் திங்கட்கிழமை காலையில் வெளியிட்டது.

இலங்கையில் பல பத்தாண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் சமாளிக்க ஏதுவாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் மொத்தமாக தங்களுடைய பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்கள்.

தற்போதைய நெருக்கடிக்கு தவறான நிர்வாகமே காரணம் என்று கூறி எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள், ராஜபக்ஷ சகோதரர்களின் பதவி விலகலை வலியுறுத்தி வந்தனர்.

ராஜபக்ஷ குடும்பத்தை ராஜிநாமா செய்யக் கோரி வந்த பலரும் சமீபத்திய அமைச்சர்கள் ராஜிநாமா முடிவால் திருப்தியடைவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும், 'அமைச்சர்களின் ராஜிநாமா நடவடிக்கை அர்த்தமற்றது' என்று கூறுகின்றனர்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை நாட்டில் அரசு அறிவித்திருந்த 36 மணி நேர ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஞாயிற்றுக்கிழமை பல நகரங்களில் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1948இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க போராடி வருகிறது. எரிபொருள் இறக்குமதிக்கு செலுத்த பயன்படுதும் வெளிநாட்டு நாணய பற்றாக்குறையையும் அந்த நாடு சந்தித்து வருகிறது.

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

இதன் தாக்கம், பல நகரங்களில் அரை நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மின்வெட்டு வடிவில் காணப்படுகிறது. மேலும், உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால், பொதுமக்களின் கோபம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மஹிந்தவின் அமைச்சர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராஜிநாமா செய்தவர்களில் பிரதமரின் மகன் நாமல் ராஜபக்ஷவும் அடங்குவார், "மக்கள் மற்றும் அரசாங்கத்தை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு" ராஜபக்ஷ சகோதரர்களின் நடவடிக்கை உதவும் என்று நம்புவதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

எவ்வாறாயினும், நாட்டின் நிலைமைக்கு ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் காரணம் என்று குற்றம்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர், அவர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக கோபமடைந்துள்ளனர்.

ஒரு ட்விட்டர் பயனர் இதை "நோய்வாய்ப்பட்ட நகைச்சுவை" என்று அழைத்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மற்றொருவர் இதை "சர்வாதிகாரிகளின் நாடகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர், அவர்களின் அரசியல் ஆதரவாளர்கள், ஊழல்வாதிகள், அவர்களின் ஊடகவியலாளர்கள் - நீங்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று மற்றொரு சமூக ஊடக பயனர் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எதிர்கட்சி அரசியல் தலைவர்களும் இந்த போராட்டங்களில் பங்கெடுத்தனர்.

இதன் காரணமாக போராட்டங்களை தூண்டும் வகையிலும் நாட்டின் நிலைமை தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படும் முயற்சியை தடுக்கும் வகையிலும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இலங்கை அரசு முடக்கியது. ஆனால், அடுத்த சில மணி நேரத்திலேயே அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, படையினருக்கு எதிராக மோத தயாராகும் போராட்டக்குழுவினர்

2019ஆம் ஆண்டில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, "நாட்டை ஆள ஸ்திரத்தன்மை மற்றும் ஒரு வலுவான தலைமையை வழங்குவோம்" என்று உறுதியளித்து, அப்போது இவரது தலைமைக்கு கிடைத்த புகழும் எதிர்பார்ப்பும் இப்போது தலைகீழாகிப் போனதை சமீபத்திய அதிருப்தி ஆர்ப்பாட்டங்கள் பிரதிபலிப்பதாக உள்ளன என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

line
Analysis box by Rajini Vaidyanathan, South Asia correspondent

இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஒரு ஆர்ப்பாட்டத்தில் நான் சந்தித்தேன். அவரும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் நகரின் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முயன்றபோது அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து முன்னேற விடாமல் தடுத்தனர்.

"நாட்டின் உயர்ந்த சட்டம் மக்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும், ஆர்ப்பாட்டம் செய்யவும், அமைதி வழி ஜனநாயக எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமையையும் வழங்கி அதைப் பாதுகாக்கிறது, எனவே அந்த உரிமை மீறப்படக்கூடாது," என்று சஜித் பிரேமதாசா கூறினார்,

ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக ஊடக முடக்கத்துக்கான தடை சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் எதேச்சதிகாரம் மற்றும் கொடூர ஆட்சியின் தொடக்கம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கொந்தளிக்கும் பொதுமக்கள்

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின்போது ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து போராட்டம் நடத்திய பலரிடம் நான் சந்தித்தேன்.

சுசித்ரா ஒரு ஆசிய உணவகத்திற்கு வெளியே பொதுவாக பரபரப்பாக இருக்க வேண்டிய ஒரு சாலையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

தனது 15 மாத ஆண் குழந்தையுடன் அவர் அங்கு வந்திருந்தார். மின்வெட்டால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்னைகளைப் பற்றி அவர் என்னிடம் கூறினார்."மின்சாரம் இல்லாமல் வீடுகளில் மின்விசிறிகள் வேலை செய்யவில்லை. இந்த வெப்பத்தில் குழந்தையோ நாமோ நிம்மதியாக தூங்குவது கூட சாத்தியமில்லை," என்கிறார் அவர்.

இலங்கை போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

"எனது உரிமைகள் பறிக்கப்பட்டதால் நான் இன்று வெளியே வந்தேன், நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்," என்று கொழும்பின் ஒரு பகுதியில் கூடிய சில நூறு மாணவர்களில் ஒருவரான அஞ்சலி வந்துர்கல கூறினார்.

"இந்த ஊரடங்கு உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது? எங்களைப் பாதுகாப்பதற்காகவா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஃப்ரீலான்ஸ் ஒரு விளம்பர எழுத்தாளர் சத்சரா. அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக தாம் களமிறங்கியிருப்பது இதுவே முதல் முறை என்கிறார் அவர்.

"எரிவாயு, மின்சாரம் இல்லாததால் என்னால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. நான் முற்றிலும் நொறுங்கியதாக உணர்கிறேன்," என்று அவர் கூறுகிறார்.

இலங்கை எதிர்கொண்டு வரும் மோசமான நெருக்கடியை சமாளித்து முன்னேறி விடலாம் என்று வழி தேடும் பல இளம் இலங்கையர்களில் இவரும் ஒருவர். "நாங்கள் எங்கள் வாழ்க்கையின் ஆரம்பகாலத்துக்கு சென்று விட்டோம். இனி எங்கள் கனவுகளை எவ்வாறு அடையப் போகிறோம்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

2px presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: