"இலங்கையில் இது பஞ்ச நிலைமை இல்லை என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?"

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பஞ்ச நிலைமை என்று சொல்ல முடியாது என்றால் எதை பஞ்சம் என்று கூற முடியும் என்று கேள்வி கேட்டுள்ளார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி.
இலங்கை ஏன் இவ்வாறான நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இலங்கை மீண்டெழ வேண்டுமாயின், எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களுக்கு அவர் பிபிசி தமிழுக்கு விளக்கமளித்தார்.
கேள்வி :- இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளது . இதற்கு பிரதான காரணம் என்ன?
பதில் :- பிரதான காரணம் என்றால், அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதை சுருக்கமாக சொல்வது என்றால், செய்ய வேண்டிய காரியங்களை உரிய தருணத்திலே செய்யாமல், காலம் தாழ்த்தியது இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடிக்கான பிரதான காரணம். ஆனால் அதனுடைய பின்னணி மிக நீண்டது என சொல்ல வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் இருந்தே இலங்கை கடைபிடித்த பொருளாதார கொள்கைகள் நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கவில்லை. அவ்வப்போது பதவிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அந்த கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருந்தன. அரசாங்கமே அடிக்கடி தங்களுடைய கொள்கை பிரகடனங்களை மாற்றிக் கொண்டிருந்தது. ஆகவே கொள்கையிலே எந்தவிதமான நிலைத்த தன்மையும் இல்லை. செய்யக்கூடாத கொள்கைகளை, கொள்கை முடிவுகளை பிழையான நேரத்திலே எடுத்தமை இந்த நெருக்கடிக்கான பிரதான காரணமாக நான் பார்க்கின்றேன்.
கேள்வி : தற்போது இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான பிரச்சினை சுதந்திர இலங்கையில் காணப்பட்டதா?
பதில் :- இந்த அளவுக்கு என்று சொல்ல முடியாது. இவ்வாறான தீவிர தன்மையுடன் இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 1970 - 73 போன்ற மூன்று வருட காலப் பகுதியிலே இதே போன்றதொரு நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்த சூழ்நிலையிலேயே இந்த உணவுக்கான தட்டுப்பாடு, அரிசிக்கான தட்டுப்பாடு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என பொதுவான உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்ட போது, அப்போதிருந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு சலுகை விலையிலே இந்த சங்கக் கடைகள் என்று சொல்லப்படுகின்ற கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை பங்கீட்டு அடிப்படையிலே வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது. ஆகவே பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் தருவதாக இருந்தது. ஆனால் இப்போதைய சூழ்நிலையிலே அத்தகைய நிவாரணங்கள் எதையும் காண முடியவில்லை.
கேள்வி :- அந்த காலப் பகுதியில் இலங்கை வேறொரு கோணத்தில் காணப்பட்டது, இவ்வளவு முன்னேற்றம் அடையாத ஒரு காலம். ஆனால் தற்போது முன்னேற்றம் அடைந்திருக்கக்கூடிய காலப் பகுதி. இந்த இரண்டு காலப் பகுதிகளுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த பொருளாதார நெருக்கடி எவ்வாறான வித்தியாசத்தை கொண்டிருக்கின்றது?

பட மூலாதாரம், Getty Images
பதில் :- இந்த பொருளாதார நெருக்கடி நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று. இப்படியான ஒரு நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், பொதுவான சொல்லப்படுகின்ற காரணம். கோவிட் 19 காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. ஆகவே, இது அரசியல்வாதிகளுடைய செய்கைகளுக்கு, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. நாட்டில் எவராலும் தவிர்த்திருக்க முடியாது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இலங்கையை விட மோசமான நிலையிலே இருந்த பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த பிரச்சினையை மிக இலகுவாக கையாண்டு, தற்போது முன்னேறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலிருந்து மீண்டு வந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த ரஷ்ய - யுக்ரேன் நெருக்கடி காரணமாக பொருள் விலை அதிகரித்திருப்பது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் இலங்கையில் ஏற்பட்டிருப்பதை போல பொருளாதார நெருக்கடியும், சீரழிவும் வேறு எந்தநாட்டிலும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை இந்த குறுகிய காலப் பகுதியிலே.
கேள்வி :- தற்போது டொலருக்கான பெறுமதி நெகிழ்வு தன்மையிலே சென்றுக்கொண்டிருக்கின்றது. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?
பதில் :- இலங்கையினுடைய நாணயம் 2001ம் ஆண்டிலிருந்தே நெகிழ்வு தன்மையாக நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு போக்குக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கம், அதனை ஒரு நிலைபெயருடையதாக மாற்ற வேண்டும் என்பதற்காக, குறிப்பாக இலங்கையிலிருந்து அதிக டொலர்கள் வெளியில் செல்கின்ற நிலைமையும், இலங்கைக்கு உள்ளே வருகின்ற டொலர்கள் மிகவும் குறைவாகவும இருக்கின்ற நிலைமை ஏற்பட்ட போது, டொலரினுடைய விலை அதிகரித்தது. அதனை தடுப்பதற்காக ஒரு செயற்கையான விதத்திலே 203 ரூபா என்ற அளவிலே சென்ற வருடம் டொலரினுடைய பெறுமதி செயற்கையாக அரசாங்கம் நிர்ணயித்தது. அது உண்மையிலேயே சந்தையில் இருக்கக்கூடிய விலை அல்ல. அந்த விலையிலே டொலரை யாரும் சந்தையிலே வாங்கக்கூடிய நிலைமை இருக்கவில்லை.
அந்த விலையிலே டொலரை சந்தைக்கு வழங்கக்கூடிய ஆற்றலும் இலங்கையுடைய மத்திய வங்கிக்கு இருக்கவே இல்லை. ஆகவே வெறுமனே விலையை நிர்ணயித்து விட்டு, அந்த விலையிலேயே கொடுக்கல் வாங்கல்களை செய்ய சொல்லுகின்ற போது, அந்த விலையிலே எவருமே இலங்கைக்கு உள்ளே டொலரை கொண்டு வருவதற்கு தயாராக இருக்கவில்லை. இதுதான் முக்கிய காரணம் இந்த டொலர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு. இந்த டொலர் நெகிழ்வு தன்மை வாய்ந்ததாக அது ஒரேயடியாக தொடர்ந்து, 9 மாதங்கள் வரையிலே அப்படியே பேணி சென்று விட்டு, திடீரென ஓரிரவிலே அதனை கைவிட்டு சந்தை விலைகளை தீர்மானிக்க அனுமதிக்கின்றோம் என்று சொன்னதன் பிறகு, சந்தையில் ஏற்படக்கூடிய நிலைமைகள், நான் பொதுவாக சொல்வதுண்டு, ''மாட்டை பட்டிணி போட்டு கட்டி வைத்திருந்து விட்டு, ஓரிரவில் ஒரேயடியாக அவிழ்த்து விட்டால் என்ன நடக்குமோ, அது தான் டொலரினுடைய விலைக்கும் நடந்தது" எனவே இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமை வந்து, தவிர்த்திருக்கக்கூடிய ஒன்று. தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று. பிழையான பொருளாதார கொள்கைகள் மேலும் பிழையான பொருளாதார அடிப்படைகளை முன்வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட பிழையான முடிவுகள் காரணமாக இலங்கை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.
கேள்வி :- குறிப்பாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபா தற்போது வர்த்தக வங்கிகளில், 280 ரூபாவாக வர்த்தக வங்கிகளிலே காணப்பட்டது. ஆனால் கறுப்பு சந்தை எனக்கூறக்கூடிய ஏனைய பகுதிகளில் 310 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால், இலங்கை எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கும்?

பட மூலாதாரம், Getty Images
பதில் :- சந்தையிலே தீர்மானிக்கின்ற விலை அடிப்படையிலே நிர்ணயிக்கப்படலாம் என்று சொன்னதுக்கு பிறகு. சந்தைக்கு வருகின்ற டொலர்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அதேபோன்று சந்தைக்கு வெளியிலே இலங்கைக்கு உள்ளே வருகின்ற டொலர்கள், இலங்கைக்கு வெளியே செல்கின்ற டொலர்கள். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு தான் டொலருக்கான பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது. இவ்வாறு விலை அவிழ்த்து விடப்பட்டதன் பிறகும் கூட, நெகிழ விடப்பட்டதன் பின்னரும் கூடி இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தவாறான டொலர் உட்பாய்ச்சல் நாட்டிற்குள்ளே நிகழவில்லை என்பதை தான் இது சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே டொலர் உற்பாய்ச்சல் நிகழாமைக்கு இன்னொரு காரணம் உண்டு. வெளியில் இருக்கின்றவர்கள் இலங்கையிலே இருந்து இலங்கைக்கு வெளியில் சென்றவர்கள். அதேபோன்று டொலரை அங்கேயே வைத்திருப்பவர்கள். நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்கள் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். இன்னும் டொலர் விலை அதிகரிக்கும். அந்த நேரத்திலே கொண்டு வருவோம் இலங்கைக்கு உள்ளே டொலரை என்று. உத்தேச நோக்கம் என்று சொல்வோம் இதனை. அவ்வாறானவர்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்படலாம். அடுத்தது இலங்கையினுடைய ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கைக்குள்ளே முதலீடுகள் வர வேண்டும். குறிப்பாக இந்த இரண்டும் ஏற்படுகின்ற போது தான் இலங்கைக்குள்ளே போதியளவு டொலர் உட்பாய்ச்சல் ஏற்படும். அண்மையிலே இந்தியாவிலிருந்து பெற்ற கடன் கூட, இலங்கைக்கு உள்ளே டொலரை கொண்டு வராது, மாறாக இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தான் அந்த நிதியை பயன்படுத்த முடியும். எனவே இந்த டொலர் நெருக்கடிக்கு தீர்வு உடனடியாக ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
கேள்வி :- இந்தியா தொடர்பில் பேசியிருந்தீர்கள். இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்கியிருந்தது. அதேபோன்று, 500 மில்லியன் அமெரிக்க டொலரை எரிபொருள் விநியோகத்திற்காக வழங்கியிருக்கின்றது. தற்போது நேற்றைய தினம் சீன அரசாங்கம் அறிவிக்கின்றது. இலங்கை மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கோரியிருக்கின்றது என்று. இவ்வாறு இலங்கை தொடர்ச்சியாக வெளிநாடுகளிடம் கையேந்தும் பட்சத்தில், எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை இந்த சமூகம் எதிர்நோக்கும்?
பதில் :- திருப்பி கடனை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும். அது தான் இறுதியாக ஏற்படக்கூடிய முடிவு. ஏனென்றால், இப்போது அடுத்த ஜுலை மாதத்திலே இன்னொரு கடனை செலுத்த வேண்டி இருக்கின்றது. ஒரு பில்லியன் அளவிலே கடனை செலுத்த வேண்டியிருக்கின்றது. ஆகவே இந்த கடன் செலுத்தல்கள் தொடர்ந்து வர போகின்ற அடுத்து வருகின்ற மூன்று வருடங்களுக்கு. கிட்டத்தட்ட 7 , 8 பில்லியன் கடனை செலுத்தவேண்டி இருக்கின்றது. ஆகவே அவ்வாறு பார்க்கின்ற போது, இப்போது யானை பசிக்கு சோள பொறிப் போல அவ்வப்போது கடன்களை வாங்கி செலவீனங்களை ஈடு செய்யலாமே தவிர, அதற்கான நிரந்தர தீர்வு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்திலே இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று, அதற்கான ஏதாவது உதவிகளை அரசு நாடுகளின் பட்சத்திலே, அதுவும் உடனடியாக தீர்க்கப்பட போவதில்லை. அந்த நிறுவனத்துடைய உதவி கிட்டுமாக இருந்தால், குறைந்த பட்சம், 6 மாதங்களாவது செல்லும். இலங்கை முதலாவது நிதி உதவியை பெற்றுக்கொள்வதற்கு.

பட மூலாதாரம், M.Ganesamurthi
கேள்வி :- இந்தியாவினால் வழங்கப்பட்ட கடன் இலங்கைக்கு டொலராக வராது. மாறாக பொருட்களாக தான் வரும். அதே போன்று சீனா ஏற்கனவே வழங்கிய கடனும். அவர்களது நாணயத்திலேயே தான் உள்ளே வந்தது. தற்போது கோரப்படுகின்ற கடனுதவி எவ்வாறு வரும். அது டொலராக நாட்டிற்குள் வருமா? அல்லது பொருள் உதவியாக வருமா? அல்லது அந்த நாட்டு நாணயமாக உள்ளே வருமா?
பதில் :- குறிப்பாக சீனா வழங்குகின்ற கடன்கள் வித்தியாசமான ஒரு அடிப்படையிலேயே வழங்கப்படுகின்ற கடன்கள். டொலராக மாற்றிக் கொள்ள முடியாத நிதியில் தான் வழங்கப்படும். சீனாவினுடைய நாணயத்தை டொலராக மாற்றுவதற்கு சில தடைகள் உண்டு. மாறாக அங்கிருந்து வருகின்ற இறக்குமதிகளை நிதிப்படுத்துவதற்கு இதனை பயன்படுத்தலாம். ஏனென்று சொன்னால், இலங்கை இறக்குமதி செய்கின்ற பிரதான இரண்டு நாடுகள், சீனாவும், இந்தியாவும் தான். எனவே அந்த இரண்டு நாடுகளும் இப்போது மனிதாபிமான அடிப்படை என்று சொல்லலாம். அவ்வாறு கடன்களை வழங்கி இருக்கின்றன.
அந்த கடன்கனை பயன்படுத்தி, இலங்கை தனக்கு தேவையான எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாமே ஒழிய இந்த பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வை காண முடியாது. சீனாவிடம் ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதற்கான கால எல்லையை நீடித்து தருமாறு இலங்கை அரசாங்கம் கோரி இருக்கின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக பேச்சுக்கள் வருகின்றன. அவ்வாறு கடன் தவணைகளை நீண்ட காலத்திற்கு செலுத்துவதற்கு ஒரு காலவகாசத்தை வாங்குவது இந்த காலப் பகுதியிலே மிக முக்கியம் என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால், இறக்குமதிகளை செய்யாமல், இலங்கை தாக்குபிடிக்க முடியாத ஒரு சூழல் வரும். இப்போது பொருள் விலைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன. ஆனால், அதிகரித்த அந்த விலையிலே கூட கொள்வனவு செய்ய கூடிய இடத்தில் மக்கள் இல்லை. குறிப்பாக எரிபொருளினுடைய விலை இப்போது மிக அதிகமாக உயர்ந்திருக்கின்றது. ஆனாலும், எரிபொருள் சந்தையிலே இல்லாத ஒரு நிலைமை காணப்படுகின்றது. எனவே இந்த கடன் வசதிகள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படலாமே ஒழிய, டொலர் நெருக்கடிக்கான தீர்வாக இது அமையாது.

கேள்வி :- சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கை கடனை பெற்றுக்கொள்ளுமாக இருந்தால், அது எவ்வாறு அமையும்?, அதேபோன்று, ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனுக்கும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடனுக்கும் என்ன வித்தியாசம் காணப்படுகின்றது?
பதில் :- ஏனைய நாடுகளிடமிருந்து கடன் பெறுகின்ற போது, நீங்கள் வட்டியை செலுத்த வேண்டும். அதற்கு மேலதிகமாக அந்த நாடு கேட்கின்ற சில விசியங்களை செய்துக்கொடுக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து கடனை பெற்றதன் பின்னர், இந்தியாவிலிருந்து வருகின்ற பொருட்களை உடனடியாக சுங்கத்திலிருந்து விடுவிக்குமாறு ஒரு அறிவுறுத்தல் சென்றிருந்தது. இது போன்ற சில விசியங்களை செய்ய வேண்டி வரும். ஆனால் சர்வதேச நாணய நிதியம் என்பது ஒரு சர்வதேச நிறுவனம். அது கடனை வழங்குவதற்காக மட்டும் அமைக்கப்பட்ட ஒன்று அல்ல. அது பொருளாதாரத்தில் இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது, அந்த பிரச்சினைகளுக்கான மூலாதாரங்களை கண்டறிந்து, அந்த மூலாதாரங்களை சரிப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்கும். எனவே அது நிபந்தனைகள் என்று சொல்லப்படும். அந்த நிபந்தனைகளை இலங்கை போன்ற நாடுகள் பின்பற்ற விரும்புவதில்லை.
எனவே தான் இந்த நிதியத்திடம் சென்றால், அவர்கள் நிபந்தனைகளை விதிப்பார்கள். மேற்குல சதி என்றெல்லாம் பேசப்படுவதற்கு இது தான் காரணம். ஆனால் சர்வதேச நாணய நிதியம் எதனை எல்லாம் சொல்லும் என்று எதிர்பார்த்தார்களோ பொதுவாக விலைகளை அதிகரியுங்கள். மின்சாரம், எரிபொருள் போன்றவற்றை மானிய விலையிலே கொடுக்காதீர்கள். போன்று சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விசியங்கள் இப்போது நிகழ்ந்திருக்கின்றது. ஏற்கனவே நடந்து விட்டன. ஆகவே புதிதாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று இன்னும் பல விசியங்களை செய்யுமாறு கோர வேண்டிய அவசியம் இல்லை. வரிகளை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் நிச்சயமாக கோரும். அதேபோல அரசாங்கத்தினுடைய வருவாய்களை அதிகரிப்பதற்கான வழி வகைகளையும் நிச்சயமாக சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்யும். அதேபோல இலங்கை இறக்குமதிகளை கட்டுப்படுத்தி எல்லாவற்றையும் நாட்டிற்குள்ளே உற்பத்தி செய்யலாம் என்ற பிழையான ஒரு பொருளாதார கொள்கையை நோக்கி செல்கின்ற இந்த நோக்கை நிச்சயமாக மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை வரும். ஏனென்றால், எந்தவொரு நாடுமே இறக்குமதி பதிலீட்டை கையாண்டு வளர்ச்சியடைந்தாக வரலாறு இல்லை. இறக்குமதி பதிலீடு என்ற கொள்கையிலிருந்து விடுப்பட வேண்டிய ஒரு கட்டாயம் வரும் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால்.
கேள்வி :- இது கடந்த அரசாங்கம் தொடர்பிலான ஒரு கேள்வி. கடந்த அரசாங்க அரசாங்கத்தின் ஆட்சியில், மத்திய வங்கியில் பாரிய மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்டது. தற்போது கூறப்படுகின்றது இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணம் என்று. இதன் உண்மை தன்மை என்ன?
பதில் :- அது நாட்டிற்குள் உள்ளே நிகழ்ந்த ஒரு புறழ்வான நடவடிக்கை. அதாவது மத்திய வங்கியிலே இருக்கின்ற ஒருவர் அந்த பிழையான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு அதனை தனக்கு சார்பான ஒருவருக்கு வழங்கினார். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான நட்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த நட்டத்தை மீண்டும் ஈடு செய்வதற்கு அந்த சொத்துக்கள் மீண்டும் மத்திய வங்கிக்கோ நாட்டினுடைய திறைசேரிக்கோ அனுப்பப்பட்டதாக ஒரு தகவல் வந்தது. ஆகவே அதற்கு இந்த நெருக்கடிக்கும் இடையிலே நேரடியான தொடர்புகள் இல்லை என்றே நான் கருதுகின்றேன். ஏனென்றால், அந்த சந்தை இலங்கை அரசாங்கம் தன்னுடைய கடன் பத்திரங்களை விநியோகிக்கின்ற சந்தை. அந்த சந்தையிலே வெளிநாட்டவர்கள் வந்து முதலீடு செய்வார்கள். வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் நிலைமை குறைவடைந்தமைக்கு கடன் தரமிடும் நிறுவனங்கள், இலங்கையினுடைய கடன் தரத்தை தாழ்த்தி வகைப்படுத்தியமே காரணமாக இருக்குமே ஒழிய, மத்திய வங்கியில் ஏற்பட்ட இந்த ஊழல், அதற்கு நேரடி காரணமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை.
கேள்வி :- இது அரசியலுடன் தொடர்புடைய ஒரு நேரடி கேள்வி. நேரடியாகவே எதிர்கட்சிகள் தற்போது நாட்டில் பஞ்சம் நிலவுவதாக நேரடியாகவே கூறுகின்றார்கள். அரசாங்கம் அதை மறுத்து வருகின்றது. உங்களின் பார்வை எவ்வாறு இருக்கின்றது?
பதில் :- நாட்டிலே பஞ்சம் இருக்கின்றதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கின்ற ஒரு காரணி, பாதையிலே இருக்கின்ற மக்களை பார்த்தால், தெரியும். என்னை பொருத்த வரையிலே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருக்கின்றது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு இருக்கின்றது. இது நேரடியாக ஒரு பஞ்ச நிலைமையா என்று கருத முடியாது என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?
கேள்வி :- இலங்கை முழுமையாக இந்த நிலையிலிருந்து மீண்டெழ வேண்டும் என்றால், எவ்வாறான நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்?
பதில் :- நிச்சயமாக சர்வதேச நாணய நிதியத்தினுடைய உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்?. அதன் அடிப்படையிலே இலங்கை அரசு தங்களுடைய செலவீனங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். இப்போது இருக்கின்ற இந்த வெள்ளை யானைகளாக இருக்கின்ற இந்த திட்டங்களை சற்று காலத்திற்கு பிற்போட வேண்டும். பொதுமக்களுடைய வாழ்க்கை வருவாய்களை அதிரிக்க வேண்டும். அது மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது சமூக பிறழ்வுகளுக்கு இட்டு செல்லலாம். அது களவு கொள்ளை, திருட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம். ஏற்கனவே சமூகத்திலே ஒரு விரக்தி மனபான்மை ஏற்பட்டிருக்கின்றது. இது சமூக பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தலாம். அது நாட்டிற்கு நல்லதல்ல.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














