திருமதி இலங்கை அழகு போட்டி சர்ச்சை – கிரீடத்தை திரும்ப கொடுப்பதாக திருமதி உலக அழகி அறிவித்தது ஏன்?

பட மூலாதாரம், AFP
2020ம் ஆண்டு தான் பெற்ற திருமதி உலக அழகி கிரீடத்தை திருப்பிக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கரோலின் ஜுரி தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் `திருமதி இலங்கை` அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி செல்வாவிடம் இருந்து மேடையிலேயே கிரீடத்தைப் பறித்தார் திருமதி உலகராணி கரோலின் ஜுரி. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில்தான் தனது உலக அழகி கிரீடத்தை திருப்பி கொடுக்கப்போவதாக கரோலின் ஜூரி தெரிவித்துள்ளார்.
கவலை தெரிவித்த கரோலின் ஜூரி

பட மூலாதாரம், CAROLINE JURIE VIDEO SCREEN SHOT
திருமதி இலங்கை அழகி போட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாக கரோலின் ஜூரி தெரிவித்துள்ளார்.
தனக்கு யார் மீதும் தனிப்பட்ட பகை கிடையாது என்று தெரிவிக்கும் அவர், திருமதி இலங்கை அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான அனைவருக்கும் தான் மதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் நியாயமான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் முன்னின்று செயற்பட்டதாகவும் இந்த போட்டியில் பங்குப் பெற்ற அனைவரையும் தான் பாகுபாடின்றி கருத்தில் கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.
அனைத்து போட்டிகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் உள்ளதாக கூறும் கரோலின் ஜுரி அனைவருக்கும் நியாயமான மேடை கிடைக்க வேண்டும் எனவும், நியாயமான நிபந்தனைகளுக்காகவும்தான் தான் முன்னின்று செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளிலுள்ள குறைபாடுகளுக்குள் நுழைந்து, எவ்வாறேனும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த நிபந்தனைகள் கிடையாது எனவும் கரோலின் ஜுரி தெரிவிக்கின்றார்.
ஏதேனும் நோக்கத்துடனேயே, போட்டிகளுக்கான நிபந்தனைகள் கொண்டு வரப்படுகின்றன என்று தெரிவித்துள்ள அவர், திருமதி உலக அழகி கிரீடம் என்பது, திருமண வாழ்க்கையை உரிய முறையில் பொறுப்புடன் கொண்டு செல்லும் பெண்களுக்கானது என்று குறிப்பிடுகின்றார்.
தான் பெற்றுக்கொண்ட கிரீடத்தை திரும்ப கையளிப்பதற்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் கரோலின் ஜுரி குறிப்பிடுகின்றார்.
ஏன் இந்த முடிவு?

பட மூலாதாரம், PUSHPIKA DE SILVA FACEBOOK PAGE
இலங்கையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற திருமதி இலங்கை அழகி போட்டியில், புஷ்பிகா டி சில்வா கிரீடத்தை தனதாக்கிக்கொண்டார்.
இந்த நிலையில், கிரீடம் சூட்டப்பட்டு, ஒரு சில நிமிடங்களில், திருமதி உலக அழகி கரோலின் ஜுரி, அந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற ஒருவருக்கு இந்த கிரீடத்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி கிடையாது என தெரிவித்தே, கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டு, இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கு அந்த கிரீடத்தை அணிவித்திருந்தார்.
இந்த சம்பவமானது, இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.
குறித்த சம்பவத்தை அடுத்து, புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில், முறைபாடொன்றை செய்திருந்தார்.
இந்த முறைபாட்டிற்கு அமைய, கைது செய்யப்பட்ட கரோலின் ஜுரி உள்ளிட்ட இருவர், சில மணிநேரங்களின் பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதையடுத்தே, கரோலின் ஜுரி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












