ஈஸ்டர் தாக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிடம் 4 மணி நேரம் விசாரணை

பிற செய்திகள்:

பட மூலாதாரம், ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலேயே முன்னாள் பிரதமர் சாட்சி வழங்கியுள்ளார்.

சுமார் 4 மணி நேரம் ரணில் விக்ரமசிங்க சாட்சி வழங்கியிருந்தார். சாட்சியம் வழங்குவதற்காக வருகைத் தருமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஆணைக்குழுவின் போலீஸ் பிரிவில் அவர் இன்று பிரசன்னமாகியிருந்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் அளித்தார்.

அவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சுமார் இரண்டரை மணி நேரம்வரை சாட்சியம் அளித்தார்.

அப்போதைய கல்வி அமைச்சர் என்ற ரீதியில், சமய புத்தகத்தை தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாடத்திட்டம் தயாரிக்கும் நடவடிக்கையில் கல்வி அமைச்சர் தலையீடு செய்ய தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவிடம், ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.

கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், கடந்த வாரம் பல மணி நேர விசாரணை நடத்தியிருந்தனர்.

கடந்த ஆட்சியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இலங்கையில் கிறிஸ்தல தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பினால் அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

அது தொடர்பில் கடந்த ஆட்சியாளர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்த விசாரணை அறிக்கையின் பிரகாரம், குறித்த தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: