கொரோனா வைரஸ்: அடுத்த இரண்டு நாட்களுக்கு இலங்கையில் முடக்க நிலை அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
இலங்கையை எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு முடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று மாலை (மார்ச் 20) 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 65 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நோயாளர்களும் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இந்த வைரஸ் தொற்று உள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதுடன், அடையாளம் காணப்பட்ட ஒரு சீன நாட்டு பிரஜை பூரண குணமடைந்து ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 213 பேர் இலங்கையர்கள் எனவும், எஞ்சிய 5 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை, புத்தளம் மாவட்டம், கொச்சிக்கடை, ஜாஎல மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு ஏற்கனவே போலீஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு அமுலில் உள்ளது.
இத்தாலியிலுள்ள பெரும்பாலான இலங்கை பிரஜைகள், குறித்த பகுதிகளிலேயே அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா தொற்று இத்தாலியில் அதிகரித்த நிலையில், அங்குள்ள பெரும்பாலான இலங்கையர்கள் கடந்த காலங்களில் இலங்கைக்கு மீண்டும் வருகைத் தந்திருந்தனர்.
இவ்வாறு இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த பெரும்பாலானோர் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாத, தமது வீடுகளில் மறைந்திருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்தவர்களை சுதந்திரமாக நடமாடுவதை தவிர்க்கும் வகையிலேயே குறித்த பகுதிகளுக்கு ஏற்கனவே போலீஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க தீர்மானம்
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்தப்படவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு இன்னும் சிறிது தினங்கள் காணப்படுகின்றமையினால், தேர்தலை நடத்துவதற்கான தேதியை சரியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்த முடியாது என ஆணைக்குழுவின் தலைமை உறுப்பினர்கள் மூவரினால் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை கொரோனா தொற்றிலிருந்து 100 வீதம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஏதோ ஒரு காரணத்தினால் சுகாதார அதிகாரிகளினாலோ அல்லது உலக சுகாதார ஸ்தாபனத்தினாலோ அறிவிக்கப்பட்டாலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடையாது என மஹிந்த தேசபிரிய குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், Facebook
கடந்த சில நாட்களாக நாட்காட்டி (கலேண்டர்) ஸ்தம்பிதமடைந்துள்ளமையே அதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயலணியின் நடவடிக்கைகளுக்கு அமையவே தேர்தல் நடத்துவதற்கான தேதியை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்த வைரஸை மிக விரைவில் கட்டுப்படுத்த குறித்த செயலணி விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹுலை தொடர்புக் கொண்டு வினவியது.
தேர்தலை பிற்போடுவதற்கான தீர்மானத்தை தாம் எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வர்த்தமானி மூலம் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனை ஒழுங்குப்படுத்தி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான 1981ஆம் ஆண்டு சட்டத்தின் 24ஆவது சரத்தின் முதலாம் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், வேட்பாளர்களின் பெயர்கள், வாக்கு சாவடிகள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய வர்த்தமானியொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர், நாட்டில் குழப்பகர நிலைமை ஏற்படுமாக இருந்தால், நாடாளுமன்றத் தேர்தல் 1981ஆம் ஆண்டு சட்டத்தின் 24ஆவது சரத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் தேர்தலை ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு பிற்போடுவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக ரத்னஜீவன் ஹுல் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், தம்மால் முதலாவது வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னரே, தேர்தலை பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, தேர்தலை பிற்போடுவதற்கான தீர்மானத்தை தாம் எட்டியுள்ளதாகவும், தமது முதலாவது வர்த்தானி அறிவித்தல் வெளியிடப்பட்டதன் பின்னர், தேர்தலை பிற்போடுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்;வரும் 25ஆம் தேதி நடத்தப்படவிருந்த தேர்தலை பிற்போட்டதன் பின்னர், அது நடத்தப்படும் தேதி தொடர்பான அறிவித்தலை பின்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா உயிரிழப்பில் சீனாவை விஞ்சிய இத்தாலி; உலக அளவில் பத்தாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
- நிர்பயா வழக்கு: நால்வரும் தூக்கிலிடப்பட்டனர் - மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட உடல்கள்
- ‘’எனது மகளின் புகைப்படத்தை அணைத்து இன்று உனக்கு நீதி கிடைத்துவிட்டது என்றேன்’’
- நிர்பயா வழக்கு: மரண தண்டனை ஆதரவு முழக்கங்கள் ஏன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லை?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












