ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: "இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது"

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா

பட மூலாதாரம், ARMY.LK

படக்குறிப்பு, இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

News image

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா டெப்லிட்ஸிற்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று (16) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தத்தின் போது, ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் தொடர்புப்பட்டுள்ளமை குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதால், தமது நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் அதற்கு உடனடியாக தமது எதிர்ப்பை வெளியிட்டது.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலினா டெப்லிட்ஸிற்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது

பட மூலாதாரம், Ministry of Foreign Relations of Sri Lanka

படக்குறிப்பு, இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலினா டெப்லிட்ஸிற்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றது

இந்த நிலையில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா டெப்லிட்ஸை, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று தமது அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அமெரிக்க அரசாங்க தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பையும் வெளியிட்டார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அனுபவ முதிர்ச்சி மற்றும் அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்கள் அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாமையை கருத்திற் கொண்டே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை இராணுவ தளபதியாக நியமித்திருந்ததாகவும் தினேஷ் குணவர்தன இதன்போது அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஷவேந்திர சில்வாவின் முதிர்ச்சியின் அடிப்படையிலேயே அவரை பாதுகாப்பு படைகளின் பதில் தலைவராக நியமிக்க தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்க மூத்த இராணுவ அதிகாரியான ஷவேந்திர சில்வா குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் அவர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை ஒரு வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளமையானது, தமக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தினேஷ் குணவர்தன அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலினா டெப்லிட்

பட மூலாதாரம், twitter / Teplitz

படக்குறிப்பு, இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அலினா டெப்லிட்ஸ்

அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, இரண்டு நாடுகளுக்கும் இடையில் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் குற்றவியல் உள்ளிட்ட எந்தவொரு விடயங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை எனவும், குற்றவியல் பொறுப்பை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் தினேஷ் குணவர்தன, அமெரிக்க தூதுவரிடம் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கவலையை வாஷிங்டன் டி.சிக்கு தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கவலையை அமெரிக்க அரசாங்கத்திற்கு தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா டெப்லிட்ஸ், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: