அமித் ஷாவை சந்திக்க ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுப்பு

பட மூலாதாரம், Hindustan Times / Getty
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தங்கள் கோரிக்கைகளை விளக்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்ற டெல்லி ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் அவரை சந்திக்க முடியாமலே திரும்பினர். முன் அனுமதி ஏதும் பெறவில்லை என்று கூறி அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக நேற்று (சனிக்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதுபோன்ற எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.
எனினும், இன்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி மீனா, "போராட்டக்காரர்கள் அமைச்சர் அமித் ஷாவின் வீட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டும். அவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், முன் அனுமதி ஏதுமில்லாமல் அவரை பார்க்க முடியாது என்று கூறினோம். அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறோம்" என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த கேள்விகள் உடையவர்களுக்கு தாம் பதிலளிக்க தயார் என்று அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருந்ததையடுத்து போராட்டக்காரர்கள் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
ஞாயிறு மதியம் இரண்டு மணிக்கு ஷாஹீன்பாகில் இருந்து கிளம்பி அமித் ஷாவின் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று அவரை சந்திப்போம் என்று போராட்டக்காரர்கள் நேற்று அறிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இரு மாதங்களுக்கும் மேல் ஷாஹீன்பாகில் போராட்டம் நடந்தாலும், அவர்களை அரசு தரப்பில் யாரும் இதுவரை சந்திக்கவில்லை.
அமித் ஷா என்ன கூறினார்?
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைவரிடமும் பேச அரசு தயாராக உள்ளது என்று அமித் ஷா பிப்ரவரி 13 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்த சட்டத்தின் எந்தப் பிரிவு இந்தியாவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்று கருதுகிறார்கள்? நான் அனைவரையும் சந்திக்க தயாராக உள்ளேன். ஆனால் விவாதிக்க யாரும் முன்வரவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் நேற்று மதியம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பிப்ரவரி 16 அன்று அவரை சந்திக்க நாங்கள் தயார் என்று கூறினர்.
"அமித் ஷாவும் நரேந்திர மோதியும் இங்கு வர வேண்டும் என்று ஆரம்பம் முதலே நாங்கள் கோரி வருகிறோம். அப்போது என்ன நடந்தாலும் அது நேரலையில் ஒளிபரப்பாக வேண்டும்," என்று பெயர் வெளியிட விரும்பாத போராட்டக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"யாருக்கெல்லாம் இந்த சட்டம் குறித்து பிரச்சனை உள்ளதோ அவர்கள் எங்களை வந்து சந்திக்கலாம் என்று அமித் ஷா கூறியுள்ளார். எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அதனால் நாங்கள் செல்கிறோம். நாங்கள் நாளை மதியம் இரண்டு மணிக்கு அவரை சந்திக்க செல்கிறோம்," என்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.
பிப்ரவரி 14 அன்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












