CAA Protest: “ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை அமித் ஷா சந்திக்கும் திட்டம் இல்லை” - உள்துறை அமைச்சகம்

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன்பாகில் போராட்டம் நடத்தி வருபவர்கள் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (பிப்ரவரி 16) சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அதுபோன்ற எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

உள்துறை அமைச்சர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக நேற்று (சனிக்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். அவரை சந்திக்க அலுவல்பூர்வமான முன் அனுமதி எதுவும் பெறவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

News image

இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை ஒன்றில் சனிக்கிழமை இரவு விளக்கம் அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், "ஞாற்றுக்கிழமையன்று உள்துறை அமைச்சருடன் இதுபோன்று எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்த கேள்விகள் உடையவர்களுக்கு தாம் பதிலளிக்க தயார் என்று அமித் ஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருந்ததையடுத்து போராட்டக்காரர்கள் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

முன்னதாக, ஞாயிறு மதியம் இரண்டு மணிக்கு ஷாஹீன்பாகில் இருந்து கிளம்பி அமித் ஷாவின் வீட்டுக்கு ஊர்வலமாக சென்று அவரை சந்திப்போம் என்று போராட்டக்காரர்கள் நேற்று அறிவித்தனர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து இரு மாதங்களுக்கும் மேல் ஷாஹீன்பாகில் போராட்டம் நடந்தாலும், அவர்களை அரசு தரப்பில் யாரும் இதுவரை சந்திக்கவில்லை.

அமித் ஷா என்ன கூறினார்?

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அனைவரிடமும் பேச அரசு தயாராக உள்ளது என்று அமித் ஷா பிப்ரவரி 13 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் கூறியிருந்தார்.

அமைப்பாளர்கள் யாரும் இல்லாமல் பெண்களால் தன்னெழுச்சியாக நடத்தப்படுகிறது ஷாஹீன்பாக் போராட்டம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமைப்பாளர்கள் யாரும் இல்லாமல் பெண்களால் தன்னெழுச்சியாக நடத்தப்படுகிறது ஷாஹீன்பாக் போராட்டம்.

"இந்த சட்டத்தின் எந்தப் பிரிவு இந்தியாவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்று கருதுகிறார்கள்? நான் அனைவரையும் சந்திக்க தயாராக உள்ளேன். ஆனால் விவாதிக்க யாரும் முன்வரவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் இன்று மதியம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பிப்ரவரி 16 அன்று அவரை சந்திக்க நாங்கள் தயார் என்று கூறியுள்ளனர்.

'எங்களுக்கு பிரச்சனை உள்ளது'

"அமித் ஷாவும் நரேந்திர மோதியும் இங்கு வர வேண்டும் என்று ஆரம்பம் முதலே நாங்கள் கோரி வருகிறோம். அப்போது என்ன நடந்தாலும் அது நேரலையில் ஒளிபரப்பாக வேண்டும்," என்று பெயர் வெளியிட விரும்பாத போராட்டக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"யாருக்கெல்லாம் இந்த சட்டம் குறித்து பிரச்சனை உள்ளதோ அவர்கள் எங்களை வந்து சந்திக்கலாம் என்று அமித் ஷா கூறியுள்ளார். எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அதனால் நாங்கள் செல்கிறோம். நாங்கள் நாளை மதியம் இரண்டு மணிக்கு அவரை சந்திக்க செல்கிறோம்," என்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.

ஷாஹின்பாக்

பட மூலாதாரம், Ani

பிப்ரவரி 14 அன்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

போராட்டக்காரர்கள் தரப்பில் இருந்து குறிப்பிட்ட யார் அமித் ஷாவை சந்திக்க செல்வார்கள் என்று தெரிவிக்கப்படவில்லை.

"தனிப்பட்ட குழு எதுவும் போகாது. இங்குள்ள எல்லா ஆண்களும், எல்லா பெண்களும், எல்லா குழந்தைகளும் செல்வார்கள். இது பற்றி சந்தேகம் வேண்டாம்," என்று போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: