இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம் - இனவாத நடவடிக்கையா?

முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம் - இனவாத நடவடிக்கையா?

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், "இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா" என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

News image

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம் - இனவாத நடவடிக்கையா?
படக்குறிப்பு, ஐ.எம். ஹனீபா

இந்தப் பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து, இலங்கையில் அரசாங்க அதிபராகப் பதவி வகித்து வந்த ஒரேயொரு முஸ்லிம் எனும் நிலையிலிருந்த ஐ.எம். ஹனீபா, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பொது நிர்வாக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிபர் பதவியிலிருந்து ஹனீபா நீக்கப்பட்டமை தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன்; அரசாங்க அதிபர் பதவி வகித்த ஒரேயொரு முஸ்லிம் அரசாங்க அதிபரையும், அந்தப் பதவியிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலக்கியமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டார்.

"இரண்டு வருடங்களுக்கு முன்னர் வவுனியா அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர், மன்னார் அரசாங்க அதிபராக இருந்த முஸ்லிம் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் , வவுனியாவில் முஸ்லிம் ஒருவருக்கு இந்தப்பதவி வழங்கப்பட்டது. மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த மாவட்டத்தில் பணி புரிந்த இஸ்லாமியர் - திடீரென அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடம் மாற்றப்படுவது ஏன்? அவர் செய்த குற்றம்தான் என்ன? இல்லாவிடில் முஸ்லிம் என்ற காரணத்துக்காகவா இவ்வாறு நடக்கிறது" என்று, நாடாளுமன்றத்தில், ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

"திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் சமூகம் பெருவாரியாக வாழ்கின்றது. இலங்கை நிர்வாக சேவையில் தகுதி பெற்ற சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர். அதேவேளை அரசாங்கக அதிபர் பதவியில் விதாசாரப்படி மூன்று முஸ்லிம்கள் நியமிக்கப்படவேண்டும். ஆகக் குறைந்தது அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலாவது முஸ்லிம் அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்றும் ரிசாட் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம் - இனவாத நடவடிக்கையா?
படக்குறிப்பு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்

வவுனியா அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், வவுனியா மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம். சமன் பந்துலசேன எனும் சிங்களவர் கடந்த வாரம் பதவியேற்றார்.

முஸ்லிம் அரசாங்க அதிபர் இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்தும், அது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கண்டனங்கள் பற்றியும், அரசாங்கத் தரப்பின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பொது நிருவாகத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அந்தத் துறையின் ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கு பிபிசி தமிழ் பல நாட்கள் முயற்சித்த போதிலும் அவர்கள் தொடர்பில் வரவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: