இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி பெரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதுடன், நாடாளுமன்ற அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி வசமே காணப்படுகின்றன.
நிறைவேற்று அதிகாரத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் தற்போது முரண்பாடுடனான நிலைமையொன்று தோற்றம் பெற்றுள்ளதை காண முடிகின்றது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றமொன்று அமைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றது.
அவ்வாறென்றால், கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் தேதியே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியும்.
எனினும், இரண்டு தரப்பினர் ஆட்சியில் உள்ளமையினால் அரசாங்கத்தை உரிய முறையில் நடத்தி செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த பின்னணியில் இனிவரும் காலங்களில் என்ன செய்யலாம்?
இலங்கை ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு செய்யக்கூடிய மூன்று விடயங்களை தெளிவூட்டிய சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றை இன்று வெளியிட்டார்.
புதிய ஜனாதிபதி சத்திய பிரமாணம் செய்துக் கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தான் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அதிகாரம் தொடர்பில் தெளிவான கருத்தொன்றை மக்கள் வழங்கியுள்ளதாக பலரும் தன்னிடம் தெரிவித்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மூன்று விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் தெளிவூட்டியுள்ளார்.

- 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்த முடியும்.
- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
- பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பின் பேரில் விலகி, பொதுத் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை இடைகால அமைச்சரவையொன்றை நடத்தி செல்ல ஜனாதிபதிக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து இந்த வாரத்திற்குள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
விரைவில் இதற்கான தீர்மானத்தை எட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?
- பெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
- 250வது அமர்வு: மாநிலங்களவையின் பெருமைகளை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி
- பெண்கள் உருவாக்கும் நகரம் எப்படி இருக்கும்?
- சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












