இந்திய நிதியுதவியில் நொறுக்குத்தீனி வாங்கியதால் இலங்கையில் சர்ச்சை

இந்திய நிதியுதவியில் நொறுக்குத்தீனி வாங்கித் திண்ற அமைச்சர்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நிதியுதவியின் கீழ், மலையக தமிழ் மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, கட்டுரை எழுதிய ஊடகவியலாளர் ஒருவர், அதற்குப் பொறுப்பான அமைச்சர் பழனி திகாரம்பரம் மற்றும் அவரது தரப்பினரால் தாம் அச்சறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயம் பழனி திகாரம்பரம் அமைச்சராக இல்லாததால் அவர் மீது குற்றம் சுமத்துவது பொறுப்பற்ற செயல் என்றும், செலவுகள் அனைத்தும் சட்டத்துக்கு உட்பட்டே செய்ய்யப்பட்டன என்றும் அமைச்சர் தரப்பு தெரிவிக்கிறது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாரம்பரம் உள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் பணியாற்றும் க.பிரசன்னா எனும் ஊடகவியலாளர் ஒருவருக்கே, இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடந்தது என்ன?

இம்மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்த நாளிதழில் கட்டுரை ஒன்றை ஊடகவியலாளர் பிரசன்னா கட்டுரையொன்றினை எழுதியிருந்தார்.

இந்திய வீட்டுத் திட்டமொன்று தொடர்பில் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஹெலிகொப்டர் பயணங்களுக்காக மட்டும், 759,128 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலும் குறிப்பாக அந்த வீடமைப்பு திட்டம் தொடர்பாக, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டமொன்றுக்கு 164,733 ரூபாய் 94 சதம் செலவிடப்பட்டதாகவும், அதில் நொறுக்குத் தீனி மற்றும் அமைச்சரின் பகல் உணவுக்கான செலவுகளும் உள்ளடக்கம் எனவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பழனி திகாரம்பரம்

பட மூலாதாரம், DIGAMPARAM

படக்குறிப்பு, பழனி திகாரம்பரம்

மொத்தமாக 11 லட்சத்து 64 ஆயிரத்து 494 ரூபாய் 94 சதம் செலவிடப்பட்டிருந்ததாகவும், ஊடகவியலாளர் பிரசன்னா தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

இந்தத் தொகையானது, இந்திய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட 'பசும்பொன்' வீட்டுத் திட்டத்திலுள்ள இரண்டு வீடுகளுக்கான நிர்மாணச் செலவுகளுக்கு ஈடானது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எங்கிருந்து கிடைத்தது தகவல்?

இந்திய நிதியுதவியின் கீழ் 2014ஆம் ஆண்டு தொடக்கம், 2019ஆம் ஆண்டு வரையில் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்கள் குறித்தும் அவற்றுக்கான செலவுகள் தொடர்பிலும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பிரசன்னா, கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு விண்ணப்பம் ஒன்றினை அனுப்பியிருந்தார். பழனி திகாரம்பரம் வசம் இந்த அமைச்சு உள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அதற்கு இணங்கவே, குறித்த அமைச்சின் தகவல் அதிகாரியினால் மேற்படி கணக்கறிக்கை வழங்கப்பட்டிருந்தது. அதனையே தனது கட்டுரையைில் பிரசன்னா பயன்படுத்தியிருந்தார்.

ஊடகவியலாளர் பிரசன்னாவின் குற்றச்சாட்டு

கட்டுரை வெளியான மறுநாள் 05ஆம் தேதி, அமைச்சர் பழனி திகாரம்பரத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் என்பவர் தன்னைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் பிரசன்னா பிபிசியிடம் தெரிவித்தார்.

அதற்கடுத்த நாள் 06ஆம் தேதி அமைச்சர் பழனி திகாரம்பரமும் தொலைபேசியில் தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, அவதூறாகத் திட்டிதாகவும் பிரசன்னா கூறுகிறார்.

மேலும், அமைச்சரின் இணைச் செயலாளர் பதவியிலுள்ள நகுலேஷ்வரன் என்பவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை மிரட்டியதாகவும் ஊடகவியலாளர் பிரசன்னா தெரிவித்ததோடு, அதனை நிரூபிக்கும் வகையிலான ஒலிப்பதிவையும் பிபிசி தமிழுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், ஊகவியலாளர் பிரசன்னா அச்சுறுத்தப்பlட்டமை தொடர்பில், இலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் 'சுதந்திர ஊடக இயக்கம்' தனது கண்டனத்தை அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டுள்ளது.

இந்திய நிதியுதவியில் நொறுக்குத்தீனி வாங்கித் திண்ற அமைச்சர்கள்

பட மூலாதாரம், Thinakkural

அமைச்சர் தரப்பின் பதில்

இந்த விவகாரம் குறித்து பழனி திகாம்பரத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது.

இதன்போது, ஊடகவியலாளர் பிரசன்னா சில விடயங்களை தவறாக அர்த்தப்படுத்தும் வகையில் எழுதியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் திகாரம்பரம், அதனைச் சுட்டிக்காட்டி தான் பேசியதாகவும், ஆனால் அதனை பிரசன்னா ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

மேலும், மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துக்காக பெருமளவு நிதி ஒதுக்கிய இந்தியத் தரப்பினர் வருகை தரும்போது, அவர்களை உபசரிப்பதற்காகச் செலவிடும் சிறு தொகைகள் குறித்து பேசுவது நாகரீமல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, ஹெலிகொப்டர் பயணம் மற்றும் உணவுச் செலவுகளுக்கான பணம், இந்தியா ஒதுக்கிய நிதியிலிருந்து பெறப்படவில்லை என்றும், தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தே அவற்றுக்கான பணம் செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய நிதியுதவியில் நொறுக்குத்தீனி வாங்கித் திண்ற அமைச்சர்கள்

இதேவேளை, பிரசன்னாவை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி - பழனி விஜயகுமாரிடமும் இவ்விடயம் குறித்து பிபிசி வினவியது.

அதன்போது அவர் கூறுகையில்; "2014ஆம் ஆண்டு, பழனி திகாரம்பரம் அமைச்சராகவே இருக்கவில்லை. அப்படிப்பார்த்தால், இந்தக் குற்றச்சாட்டை இப்போதைய அமைச்சர் திகாரம்பரம் மீது சுமத்துவது பொறுப்பற்ற செயலாகும்" என்றார்.

மேலும், "அமைச்சர்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டங்களில் இவ்வாறான செலவுகளுக்கென்றே சட்டத்துக்குட்பட்டு அரசு பணம் ஒதுக்கப்படுவதுண்டு. அவ்வாறான செலவை முறையற்றதாகக் குறிப்பிட முடியாது" என்றும் அவர் கூறினார்.

பிரசன்னா குறித்து நாளிதழின் ஆசிரியரிடம் முறையிட்டுள்ளதாக அமைச்சர் தரப்பு தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: