பா.ஜ.க எம்.பி - ராமபிரான் வம்சத்தை சேர்ந்தது எங்கள் குடும்பம்

ராமபிரானின் வம்சத்தை சேர்ந்தது எங்கள் குடும்பம்- பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்

பட மூலாதாரம், Facebook

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ராமபிரானின் வம்சத்தை சேர்ந்தது எங்கள் குடும்பம்'

அயோத்தி விவகாரம் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின்போது கடவுள் ராமரின் வம்சமான ரகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் அயோத்தியில் வசிக்கிறார்களா என்று நீதிபதிகள் கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர்.

கடவுள் ராமரின் மகனான குசனின் வம்சத்தில் வந்தது எங்கள் குடும்பம் என்று பாஜக எம்.பி. தியா குமாரி தெரிவித்தார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரச வம்சத்தைச் சேர்ந்தவரும், ராஜ்சமந்த் தொகுதியின் பாஜக எம்.பி.யுமான தியா குமாரி கூறுகையில் தங்கள் குடும்பம் ராமரின் மகனான குசனின் வம்சாவளியில் வந்தது என்று தெரிவித்தார். ராமரின் வம்சாவளியில் வந்தவர்கள் உலகெங்கிலும் உள்ளனர். அவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்றாகும். எங்கள் அரச குடும்பத்தில் உள்ள ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன்.

Presentational grey line

தினமணி: மீண்டும் திரும்புகிறதா '2008'?

பொருளாதார மந்தநிலை: மீண்டும் திரும்புகிறதா '2008'?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்க அடமானக் கடன் சந்தையில் ஏற்பட்ட கடும் நெருக்கடியால் 2008-ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மீண்டும் இப்போது ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நிதிச் சந்தைகளில் "பெரும் புயல்' தாக்கும் அபாயம் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள், எச்சரிக்கை விடுத்து வருவதே இதற்குக் காரணமாகும் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

அதிக லாபம் அளிக்கும் கடன் பத்திரங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதை சில ஆண்டுகளுக்கு முன்பு கூட நாம் கண்டிராத ஒன்று. ஆனால், இப்போது அது நடந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் உள்ள 14 கம்பெனிகளின் கடன் பத்திரங்கள் எதிர்மறை விளைவைத் தந்து வருவதாக வால் ஸ்டீர்ட் ஜெர்னல் அண்மையில் தெரிவித்துள்ளது. இந்தப் பத்திரங்கள் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு எச்சரிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் இதுபோன்ற எச்சரிக்கை மேலும் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முதலீட்டாளர்களைப் பொருத்தவரையிலும், வருவாய் ஈட்டுவதைக் காட்டிலும், முதலீட்டைப் பாதுகாப்பதற்கான தீர்வை காண வேண்டிய நேரம் இது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர் என்று அந்நாளிதழ் விவரிக்கிறது.

Presentational grey line
Presentational grey line

தினத்தந்தி: 'மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை தாண்டியது'

தினத்தந்தி: 'மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடியை தாண்டியது'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து, 73 அடியை தாண்டியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 62.50 அடியாக அதிகரித்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை மேட்டூருக்கு வினாடிக்கு 93 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 73.50 அடியாக உயர்ந்தது. இதன்படி ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 அடி உயர்ந்துள்ளது.

கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ்: "போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை"

நீலகிரியில் மழைக்கு முன்பாக தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 6 வட்டங்களில், 4 வட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 233 பகுதிகள் பாதிக்கப்பட்டவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

155 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, 26 நிவாரண மையங்கள் தொடங்கப்பட்டு, அதில் 1,706 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பில் இருந்து 2,400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவர பெய்யாத நிலையில், கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்து வருவதால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

காணொளிக் குறிப்பு, மழை, மண்சரிவு, மரணங்கள் - வெள்ளத்தில் மிதக்கும் நீலகிரி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: