IND vs WI: இந்தியா உடனான தோல்விக்கு பேட்ஸ்மேன்களே பொறுப்பு - மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்

India vs West Indies

பட மூலாதாரம், Ashley Allen

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எடுத்த சதம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற உதவியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் குறைவான ரன்களே எடுத்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சேர்ந்த விராட் கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியது.

முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

டிரினிடாட் அண்ட் டோபாகோவில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி ஞயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்து.

மழை காரணமாக டக்வர்த் லூயிஸ் முறைப்படி இரண்டாவது இன்னிங்ஸ் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கோலியின் 42வது சதம்

ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், RANDY BROOKS

படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர்

பிராத்வெயிட்டின் பந்தில் ரோச்சுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் 125 ரன்களில் 120 ரன்கள் எடுத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 42வது சதத்தைப் பதிவு செய்தார்.

இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 68 ரன்களில் 71 ரன்கள் எடுத்து தனது மூன்றாவது அரை சதத்தைக் கடந்தார்.

கோலி - ஷ்ரேயாஸ் இணைக்கு முன்பும் பின்னும் பேட்டிங் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களைக் கடக்கவில்லை. தொடக்க வீரர்கள் ஷிகர் தவன் இரண்டு ரன்களிலும், ரோஹித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராத்வெயிட் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பந்துவீச்சில் அசத்திய புவனேஷ்வர் குமார்

இரண்டாவது இன்னிங்சில் எட்டு ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே கொடுத்த இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது ஷமி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 24 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழக்க, இன்னொரு தொடக்க வீரரான எவின் லெவிஸ் 80 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் பூரான் 52 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

வேறு யாரும் 20 ரன்களைக் கடக்கவில்லை. கேமர் ரோச் மற்றும் ஒஷானே தாமஸ் ஆகியோர் ரன்கள் எதுவும் எடுக்காமலே ஆட்டமிழந்தனர்.

'பேட்ஸ்மேன்களே தோல்விக்கு பொறுப்பு'

India vs West Indies

பட மூலாதாரம், Ashley Allen

ஆட்டநாயகனாகத் தேர்வான இந்திய கேப்டன் கோலி, இடையில் பெய்த மழை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு உதவியது என்றும் இல்லாவிட்டால் போட்டியின் 'மிடில் ஓவர்களில்' பேட் செய்வது கடினமாக இருந்திருக்கும் என்றார். 270க்கும் மேலான எந்த இலக்கும் இந்தப் போட்டியில் கடினமான இலக்குதான் என்று அவர் போட்டி முடிந்தபின் பேசியபோது தெரிவித்தார்.

தாங்கள் நன்றாகவே பந்து வீசியதாகக் கூறிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்ஸ்மேன்கள்தான் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார்.

ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 19 ரன்களில் 13 ரன்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: